புரட்சிக் கவிஞனைப் போற்றி மகிழ்வோம்!

 


மகாகவி பாரதியார் (திசம்பர் 1882 - 11 செப்டம்பர் 1921)


 பல் வைத்தியகலாநிதி பாரதி இளமுருகனார்



கலைமகளே பாரதியி;ன் காதல் தெய்வம்!

    கவிதையென்றால் அவனுக்கோ வற்றா ஊற்று!

விலையறியா இலகுநடை எளியோர்; போற்றும்

    வித்துவத்தில் லர்ந்துவிட்ட புரட்சிப் புதுமை!

அலைகொஞ்சும் மணிகளைப்போல் அருஞ்சொற் கூட்டம்

    அவன்நாவில் ஏவலுக்கு இரங்கி ஏங்கும்!

நிலைகொண்டு தமிழ்வாழும் நிமிடம் மட்டும்

    நீழாயுள் கொண்டதன்றோ பாரதி பாடல்!

 

பொன்னேட்டுக்  கவியேறு காளி தாசர்

    புவிபோற்றும் கவியின்பம் தந்த கம்பர்

பின்னாலே எழுந்தகவி  பாரதி யாரும்

    பிராமணர்கள் எதிர்ப்பெல்லாம் தாண்டி யன்னார் 

பன்நாட்டுப் பாவலர்கள் வியந்து போற்றப்

    பாவாலே சாதிவெறி கொண்டோர் நாண

என்நாட்டு மக்களெலாம் என்சோ தரரென

    இனவெறிக்குச் சாவுமணி அடித்தவன்; அன்றோ?..

;

புதுமைமிகு பலகருத்தைப் புவிக்குத் தந்து

    புலமைமிகு கவிகளினாற் கனலெ ழுப்பி

எதுவரினும் அஞ்சேலென் றெழுந்து பெண்கள்

    எழுத்தறிவு பெற்றென்றும் விழிப்பு ணர்வொடு

கதுமைபெற்றே ஆண்களுக்குச் சரிநிக ராகக்

     காசினியில் கேண்மையொடு  வாழ வேண்டிப்

பதுமையிடம் வரங்கேட்டுப் பாவிற் பதித்துப்

   பண்பாளன் சமுதாயப் புரட்சி செய்தான்!

 


 

 








வதுவைசெயச் செல்லம்மா கைத்தலம் பற்றி

    வாஞ்சையொடு இருமகளிர் பெற்று மகிழ்ந்தான்

விதுப்;புமிகச் சுதந்திரப்போர் வீர னாகி

   விருப்புடனே சமூகசீர்திருத் தவாசி ஆனான்;

மெதுவாகப் புரட்சிசெய்து சிறைக்குஞ் சென்றான்

    மேன்மைமிகு இதழாசிரி யராயுந் திகழ்ந்தான்

புதுமைசெயும் நிவேதிதையைக் குருவா யேற்றான்

 பொங்கியெழுந்தே விடுதலைக்குக் குரலுங் கொடுத்தான்!

 

பத்;தியொடு  பாடிவைத்தான் கண்ணன் பாட்டு!

பாஞ்சாலி சபதத்தொடு பாப்பாப் பாட்டு!

வித்துவத்தால்;; வெளிப்பட்ட பகவத் கீதை

   விவேகமொடு ஆய்ந்தினிய யோக சூத்திரம்

சித்தமது மகிழ்ந்தி;டவே செம்மைத் தமிழில்

   சீரான மொழிபெயர்ப்பைச் சிறப்பாய்ச் செய்தான்!

முத்துமுத்தாய் தமிழின்மேற் கொண்ட காதலால்

   மோகரித்தே அடைமழைபோற் கவிதை படைத்தான்!

 

பூப்படையாக் குழந்தைகளைத் திரும ணத்தில்

  பொருத்திவிடும் கொடுஞ்செயலை எதிர்த்தான்!கைகள்;

சேப்படையக் கவியெழுதித் தமிழன் னைக்குச்

   செந்தமிழால் ஆரங்கள் சீராய்ச் சூட்டி

நாப்புடைக்கப் பெண்விடுதலைக் காக முழங்கி

   நாட்டிலேநற் பேரெடுத்துப் புகழ் விரித்தான்;!

மூப்படைய முன்னேமுண் டாசுக் கவியை

   மூவாமுதல் தனதடியிற் சேர்த்த தேனோ?

   








'வேடிக்கை மனிதரைப்போல நானும் நித்தம்

   வீழ்வேனென  நினைத்தாயோ'? என்று முழங்கி

கோடிக்கணக் கானோரின் நெஞ்சங் களிலே

    குயிற்றித்தேச பத்திதனை வளர்த்த பாரதி

கூடியணைத்(து) உணவளித்த  யானை தாக்கக்

   குறைவடைந்த உடல்நலத்தால் தினமும் வாடிப்

பாடாதன வெலாம்பாடிக் காளி யவள்திருப்

   பாதாரவிந் தந்;தேடிக் கூடி னானே!.

 

'வாழ்க்கையைக்கவி  யாக்கியோனே கவி'யென் றன்று

   வரையறைசெய் திட்டகவி பாரதி அன்றோ?

ஏழ்மையிலே உழன்றிட்டு எதிர்நீச் சலாடி

   ஏற்றம்மிகு கொள்கைகளால் இனத்தோர் வெறுக்கத்

தாழ்மையிலே தவித்தானே! இறந்த பின்னர்

   தகனஞ்செய மயானம்வரை ஈரேழ் பேர்கள்

 காழ்த்தலொடு சென்றசெய்தி கொடுமை அம்மா!

    கனைவாகக் கவிதைதந்த கவிக்கா இக்கதி!

 

 

இருக்கும்வரை பாரதியின் கவிதைத் திறனை

   ஏதலித்தே  காதலித்தோர் இருந்த திலையோ?

வருத்தமுற்று அவனுயிரும் பிரிந்த பின்பே

   வாகரனும் வடித்துவைத்த கவிதையின் ஆழக்

கருத்துகளை ஆய்ந்தறிந்து  கவியின் பெயரால்

   கழகமொடு கல்விச்சா லைகளும் அமைத்து

ருப்படியாய்  உருவச்சிலை களையும் நிறுவி

   ஒருப்பட்டு;  உலகெல்லாம் நினைவுகூர் கிறதே!

 


 


 

       







  பாரதியாரின்  சிலை

பாரறியப்  பாவெழுதிப் புகழ்பெற் றுயர்ந்து

   பாரதத்திற் கவிமுத்தாய்த் திகழ்ந் திருந்து

பாரதியைத் தன்நாவில் தினமி ருத்திப்

   பாரதிலே பாமரர்க்குத் தோழ னான

பாரதியை மகாகவியாய்ப் பராவி நின்று

   பாரதிக்கு இனியவிழா எடுக்கக் கண்டோம்!

பாரதிகம் பேர்கூடி வழுத்தும் வேளை

   பாரதிநான் பாவெழுதி மகிழ்கின் றேனே!

 

    இயற்றியவர்- --------  பாரதி இளமுருகனார்

 

அரும்பத விளக்கம்:-

 (அரும்பதம் - விளங்குவதற்குக் கடினமான சொல்)

கவியேறு - கவி பொழியும் சிங்கம்

கதுமை -  பெருமை

காசினி -  உலகம்

கேண்மை –  நட்பு -- அன்பு உரிமை

பதுமை - காளிதேவி

வதுவை - திருமணம்

கைத்தலம் - கை

விதுப்;பு - வேட்கை

நிவேதிதை – சுவாமி விவேகானந்தருடைய ஆன்மீக வாரிசு

மோகரித்தல் - ஆரவாரித்தல்

சேப்படைய - செம்மை அடைய

ஆரங்கள் - மாலைகள்

நாப்புடைக்க - நாக்கு வீக்கம் உண்டாக

மூவாமுதல் - மூப்பில்லாத பரம்பொருள்

குயிற்றி - சொல்லி

பாதார விந்தம் - திருவுடி

தாழ்மையிலே - ஒடுக்கத்திலே

ஏதலித்தே - பெருமையாகப் பேசியே

வாகரன் - கல்வியிற் சிறந்தோன்

காழ்த்தலொடு - உறுதியொடு

கனைவாக - மிகுதியாக

ஈரேழ்  - பதின்நான்கு

ஒருப்பட்டு - உடன்பட்டு

பராவி -  வணங்கி

பாரதிகம் - பார்! அதிகம்

பாரதியைத் தன்நாவில் - சரசுவதியைத் தனது நாக்கிலே

 

No comments: