எடுப்பார் கைப் பிள்ளை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று அறிஞர் அண்ணாவினால்


பாராட்டப் பெற்றவர் பி. பானுமதி. தியாகராஜ பாகவதர், பி. யு . சின்னப்பா காலத்தில் இருந்து எம்.ஜி ஆர், சிவாஜி என்று பல நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று திரையுலகில் ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்ட பானுமதிக்கு இவ்வாண்டு செப்டம்பர் ஏழாம் திகதி நூற்றாண்டாகும்! 


1975ம் வருடம் இளைய நடிகர்களுடனும் ஓர் படத்தில் நடித்தார் பானுமதி. அந்தப் படம் தான் எடுப்பார் கைப் பிள்ளை. இந்தப் படத்துக்கு இது பொன் விழா ஆண்டாகும். கலரில் உருவான இப் படத்தின் கதை பானுமதியை சுற்றியே அமைக்கப் பட்டிருந்தது. 


ஊரில் பெரிய வக்கீலாக விளங்கும் இந்திரா , ஒருவன் எந்த

பரம்பரையில் பிறக்கிறானோ அந்த பரம்பரை புத்திதான் அவனிடம் இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவளாக திகழ்கிறாள். அதன் அடிப்படையில் குற்றப் பரம்பரையில் பிறக்கும் பிள்ளையும் குற்றவாளியாகவே வருவான் என்பதில் உறுதியாக இருக்கும் அவளினால் குற்றப் பரம்பரையை சேர்ந்த ராஜலிங்கத்தின் அப்பாவி மகன் பாடசாலையில் திருடனாக பழி சுமத்தப் படுகிறான். இதன் காரணமாக அதிர்ச்சியினால் அவன் இறக்க ராஜலிங்கம் இந்திராவை பழி வாங்க திட்டமிடுகிறான். இந்திராவின் ஒரே மகனை கடத்தும் ராஜலிங்கம் அவனை ஒரு கை தேர்ந்த திருடனாக வளர்க்கிறான். திருடனாக வளரும் மோகன் திருடுகிறான், காதலிக்கிறான், இன்னுமொரு திருடியை தங்கையாக ஏற்றுக் கொள்கிறான். ஆனால் சந்தர்ப்ப சூழ் நிலையால் அவன் மீது கொலைப் பழி விழுகிறது. தன் மகன் என்று அறியாமல் அவனுக்கு எதிராக வழக்குப் பேசி தண்டனை பெற்று கொடுக்கிறாள் இந்திரா. ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த ஒருவனை குற்றவாளியாக்கி விட்டதை சொல்லி இந்திராவிடம் கொக்கரிக்கிறான் ராஜலிங்கம். 




இந்தக் கதையை படிக்கும் போது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த சட்டம் என் கையில் படத்தின் கதையை மாறி எழுதி விட்டேனோ என்று சந்தேகப் படலாம். ஆனால் எடுப்பார் கைப் பிள்ளை படத்தின் கதையைத்தான் அப்படியே சுருட்டி 1979ம் வருடம் சட்டம் என் கையில் என்ற பேரில் படமாக்கி இருந்தார்கள்! 

 படத்தில் வக்கீல் இந்திரவாக பானுமதி மிக இயல்பாக நடித்திருந்தார். தன் வாதத் திறமையை விலை பேச எண்ணும் தொழிலதிபரை அலட்சியம் செய்வதாகட்டும், தன் மகனுக்கு கருணை காட்டும் படி கெஞ்சும் பழைய கேடியை கேவலப்படுத்துவதாகட்டும், மகனை பிரிந்து ஏங்குவதாகட்டும் , மீண்டும் மகன் வந்து சேர்ந்ததை பெருமையாக கொண்டாடுவதில் ஆகட்டும் பானுமதியின் நடிப்பு படம் முழுவதும் வியாபித்திருந்தது. அவருக்கு அடுத்ததாக கவனத்தை கவருபவர் எம் .ஆர். ஆர் .வாசு. பானுமதிக்கு சவால் விட்டு தன்னுடைய பழி வாங்கும் படலத்தை அவர் சொல்லும் போது நன்கு ஸ்கொர் பண்ணுகிறார் வாசு. 

 
ஹீரோ ஜெய்சங்கருக்கு தேவையான காதல், டூயட், சண்டை,

எல்லாம் இருக்கிறது. அவரும் குறை வைக்கவில்லை. அவரின் ஜோடி வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு அலட்டலில்லாத பாத்திரம். அவரை விட கவருபவர் (கன்னட)குமாரி மஞ்சுளா. நல்ல துறுதுறுப்பு, நடிப்பும் ஓகே , ஆனால் படத்திலும், பின்னர் வாழ்விலும் தொடர முடியாமல் போனது துரதிர்ஷ்டம்! 

 படத்தில் வாசு பெரிய வில்லன் என்றால் ஸ்ரீகாந்த் சின்ன வில்லன். சுந்தர்ராஜனுக்கு பெரிய வாய்ப்பில்லை. பழைய நடிகர்களான டி கே ராமசந்திரன், கள்ளபார்ட் நடராஜன் இருவரும் ஒரு காட்சியில் வந்து போகிறார்கள். படத்தில் சுருளிராஜன், மனோரமா , நீலு , ஐ எஸ் ஆர் நகைச்சுவை ரசிகர்களை சிரிக்க வைக்கிறது என்றால் அது உண்மைதான். அலுமாரிக்குள் இருந்து கொண்டு சுருளிராஜன் புலம்புவதும் தவிப்பதும் நல்ல தமாஷ்! 

 படத்தின் கதை வசனத்தை தூயவன் எழுதினார். வசனங்களில்

அவரின் வீச்சுவெளிப்பட்டது.படத்துக்கு இசையமைத்தவர் எம் .பி . ஸ்ரீனிவாசன். தமிழில் குறைந்தளவு படங்களுக்கு அவர் இசையமைத்த போதும் இதில் பாடல்கள் ரசிக்கும் படி அமைந்தன. பானுமதி பாடிய கண்ணப் பெருமாள் ஆளப் பிறந்தான், meet my son பாடல்கள் கருத்தோடு அமைந்தன. ஜேசுதாஸ், சுசிலா குரலில் ஒலித்த பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் பாடல் இனிமை. கண்ணதாசன் பாடல்களை இயற்றியிருந்தார். 

 என் .வி . ராமசாமி திரையுலகுக்கு புதியவர். ஆனாலும் தாராளமாக செலவு செய்து கலரில் படத்தை எடுத்திருந்தார். ஏற்கனவே சிவகுமார் நடிப்பில் கலரில் புது வெள்ளம் படத்தை தயாரித்து விட்டு அதே 1975ம் ஆண்டு இந்தப் படத்தையும் தயாரித்து வெளியிட்டார் ராமசாமி. துணிச்சல்தான்! 

 படத்தை இயக்கியவர் நடிகராக திரைக்கு வந்து டைரக்டராக மாறிய

கே. விஜயன். படத்தை தொய்வின்றி இயக்கியிருந்தார். படமும் சுமாரான வெற்றியை கண்டது. 

 ஆனாலும் இதே கதையை கமல் நடிப்பில் டி .என் .பாலு சட்டம் என் கையில் என்ற பேரில் படமாக்கி அப் படம் நுறு நாள் ஓடி விழா கண்டது !

No comments: