கச்சத் தீவு , கச்சால் தீவு!

 - ச. சுந்தரதாஸ்

 கச்சத் தீவு , கச்சால் தீவு!

இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும்,


இலங்கைப் பிரதமர் சிறிமா பண்டாரநாயவுக்கும் இடையில் இருந்த நட்புறவின் அடிப்படையில் கச்சத் தீவு உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு ஒப்படைக்கப் பட்டது. எத்தனையோ ஆண்டுகள் எந்த தொல்லையும் இல்லாமல் இருந்த இந்தத் தீவு அண்மைக் காலமாக இந்தியா, இலங்கை இரு நாடுகளிடையேயும் பேசும் பொருளாக மட்டும் இன்றி, ஏசும் பொருளாகவும் மாறியுள்ளது. 
குறிப்பாக கச்சத் தீவு இலங்கைக்கு கொடுக்கப் பட்ட போது அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று என்று அவருக்கு எதிறானோர் குற்றம் சாட்டத் தொடங்கிய பின் இப் பிரச்னை வேகம் எடுத்தது. டெல்லியில் இந்திரா எடுத்த முடிவை எதிர்ப்பதை விட , தமிழகத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடே பிரச்னைக்கு கரணம் என்பது இன்றைய அரசியலின் புது கணக்கு. 




இப்போது இந்த கச்சத் தீவு விவகாரத்தை கையில் எடுத்திருப்பவர்

இளைய தளபதி விஜய். கச்சத் தீவை மீண்டும் இந்தியா கையகலப் படுத்த வேண்டும் என்று அவர் தனது கட்சி மகாநாட்டில் பற்ற வைத்த பொறி இலங்கையிலும் சுடர் விடத் தொடங்கியது. கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத்திடம் , விஜயின் அறைகூவல் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் பற்ற வைக்க , அமைச்சர் இலங்கையின் ஒர் அங்குல நிலம் கூட வேறு நாட்டுக்கு வழங்கப் படாது என்று கூறி விட்டார். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் இலாபத்துக்கு இது போல் பேசுவது புரிந்து கொள்ளக் கூடியதே என்றும் முற்றுப் புள்ளி வைத்து விட்டார் அவர். 
இந்த கிழமை வட பகுதிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விஜயம் செய்திருந்தார். விஜயகாந்த் பட பாணியில் அதிரடி அரசியல் செய்து வரும் அனுர தன் வட பகுதி விஜயத்தின் போது கச்சத் தீவு பகுதிக்கும் சென்று பார்வையிட்டு அத் தீவு மீது இலங்கைக்கும், தன் அரசுக்கும் இருக்கும் பிடிமானத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இது இலங்கை மக்கள் மத்தியில் அவரின் இமேஜை கூட்டியது. தன் மனதுக்குள் விஜய்க்கு அனுர நன்றி சொல்ல மறந்திருக்க மாட்டார் தானே!

No comments: