உலகச் செய்திகள்

 உக்ரைனுடனான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு புட்டின் பாராட்டு!

குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

பாலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மீதான விசா கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

சீனா சென்ற இந்தியப் பிரதமர் மோடி சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளை சந்தித்தார் !

சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு



 உக்ரைனுடனான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா, இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு புட்டின் பாராட்டு!

Published By: Vishnu

01 Sep, 2025 | 05:44 PM

உக்ரைனுடனான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா மற்றும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பாராட்டு தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) இரண்டு நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உரையாற்றும் போதே, உக்ரைன் போர் நெருக்கடியைத் தீர்க்க சீனா மற்றும் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ஈரான் ஜனாதிபதி உட்பட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தனது உரையில், உக்ரைனில் அமைதி ஏற்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடனான தனது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்தச் சந்திப்பின் விவரங்களை உலகத் தலைவர்களிடம் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தைகள் உக்ரைனில் அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 





குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

02 Sep, 2025 | 05:40 PM

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் சீனாவுக்குச் சென்றுள்ளார்.

திங்கட்கிழமை (1) இரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்ட அவர், இன்று சீனா சென்றடைந்தார். 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளவே கிம் ஜாங் உன் அங்கு சென்றுள்ளார்.

இந்த இராணுவ அணிவகுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிம் ஜாங் உன் கடந்த 2023ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்று புட்டினை சந்தித்தார்.

அதற்குப் பிறகு, இதுவே அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் ஆகும். இதற்கு முன்னர், அவர் 2019ஆம் ஆண்டு சீனாவுக்குச் சென்றுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதுடன், வீரர்களையும் அனுப்பி வருவதாக வடகொரியா மீது உக்ரைன் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 



பாலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மீதான விசா கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

01 Sep, 2025 | 04:07 PM

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மீதான விசா கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், பார்வையாளர் விசாக்களுக்கான அனுமதிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடைநீக்கம், மருத்துவ சிகிச்சை, பல்கலைக்கழக படிப்பு, வணிகப் பயணம் மற்றும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரைப் பார்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த விசா கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் காசாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த புதிய திட்டம் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்களையும் இலக்கு  வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இம்மாத ஆரம்பத்தில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் பாலஸ்தீன ஆணையகத்தின் உறுப்பினர்களின் விசாக்களையும் இரத்து செய்துள்ளார். 

இதனால் பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் பாலஸ்தீன ஆணையகத்தின் உறுப்பினர்கள் நியூயோர்க்கில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் கலந்து கொள்ள தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், பாலஸ்தீனத் தலைவர்கள் பயங்கரவாதத்தை கைவிடத் தவறிவிட்டதாகவும் அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளனர்.   நன்றி வீரகேசரி 





சீனா சென்ற இந்தியப் பிரதமர் மோடி சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளை சந்தித்தார் !

Published By: Digital Desk 3

01 Sep, 2025 | 10:01 AM

சீனாவின் தியான்ஜின் நகரில் இடம்பெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டிற்கு முன்னர் சீன மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளை சந்தித்த பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில், பிரதமர் மோடி சீன


ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும்  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியது உலக அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 3 நாடுகளின் தலைவர்களும் முத்தரப்பு உறவுகள் குறித்தும், உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்ததாகத் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் இந்திப் மோடி, ஏனைய நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து உரையாடியமை குறிப்பிடத்தக்கது.

அங்கு நேபாளப் பிரதமர், மாலைதீவு ஜனாதிபதி,எகிப்தின் பிரதமர், பெலரூஸ் ஜனாதிபதி, தஜிகிஸ்தான் ஜனாதிபதி, கசகஸ்தான் ஜனாதிபதி, வியட்நாம் பிரதமர், துரக்மெனிஸ்தான் ஜனாதிபதி, ஆர்மேனியாவின் பிரதமர், உஸ்பெகிஸ்தானின் ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் சந்தித்து இராஜதந்திர உறவுகளை பலப்படுத்திக் கொண்டார். 


இந்தியப் பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் மோடி சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.   நன்றி வீரகேசரி 








சீனாவில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு

Published By: Digital Desk 3

03 Sep, 2025 | 11:24 AM

சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. 

பீஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜின்பிங்குடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உட்பட பலநாட்டு தலைவர்கள் பார்வையிட்டனர்.

இந்த அணிவகுப்பில் அதிநவீன போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுத ஏவுகணைகள், புதிய நீர்மூழ்கி ட்ரோன்கள் உட்பட சீனாவின் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் ஆயுதங்களும் இராணுவ தளவாடங்களும் இடம்பெற்றிருந்தன.

நன்றி வீரகேசரி 

No comments: