மொழிமீது அத்தனை உயர் அக்கறையே!

 


-சங்கர சுப்பிரமணியன்.




மொழியின்மேல் பற்றில்லாமல் படைப்பும்
சிறப்பேதுமில்லா சிந்தனை வெளிப்பாடும்
இயந்திரம்போல் படைப்பின் எச்சமேயாம்
மொழியின் நடையோட்டம் முற்றுமிராதாம்

புகழடையவேண்டி படைப்பாரும் உண்டு
பற்றோடு படைப்பவரும் பாரினில் உண்டு
ஒன்று இயற்கையான மணமுள்ள மலராம்
மற்றதும் செயற்கையான காகிதமலராம்

சிலர் சிரிப்பார் சிலர் அழுவாரென கவிதை
கண்ணதாசன் சொன்ன கவிதையைப்போல
சிலர் மொழிக்காக படைப்பை படைப்பார்
சிலர் புகழுக்காகவும் படைப்பை படைப்பார்

பலநாட்கள் அரங்கினில் ஓடும் படமெலாம்
பணத்தைப் பெருக்க ஒரு வழி என்றிடலாம்
சிலநாட்களே அரங்கினில் ஓடுகிற படமும்
தரமதை மாந்தர்க்கு சொல்வதாய் அமையும்

மொழியை உயிரென்றான் ஒரு படைப்பாளி
புரட்சியாய் பாடிச்சென்ற அவனும் அறிவாளி
மொழியை அமுதென்று சொன்ன படைப்பாளி
மொழியை உயிரென்ற அவனன்றோ அறிவாளி

மொழி என்பதுவும் ஓர் எண்ணக் கடத்தி
ஏன் அதற்கும் இங்கு இத்தனை உயர்ச்சி
அதைச் சொல்வதில் வேண்டாம் தளர்ச்சி
அது தந்ததல்லவோ நமக்கு பேரெழுச்சி
உணர்ந்து இனியாவது செய் ஒரு முயற்சி

உணவுன்பவன் உழவனை மறப்பதுபோலவே
எழுதுபவன் எழுதும் மொழியை மறக்கிறான்
சுவரின்றி சித்திரம் எழுத முடியாதது போல
மொழியின்றி படைப்பை உருவாக்க முடியுமா?

மொழியென்பதை உயிராகச் சொல்ல முடியுமா
அம்மொழி உயிரைவிடவும் இங்கு உயர்ந்ததா
ஆமென்று சொல்ல தயக்கமேதும் வேண்டாம்
ஆதாரங்கள் அள்ளித்தர பலவுண்டு அறிவோம்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் என்பார்
அது இறந்தாலும் ஆயிரம் பொன் என்பாரே
மொழிக்காவும் பலர் மண்ணில் இறக்கின்றார்
மொழியின் இனத்துக்காகவே இறக்கின்றார்

நிலத்தில் மொழிக்காக உயிர் இழக்கின்றனர்
நீரிலும் மொழியாலே அவரும் இறக்கின்றனர்
விழிகளை கண்ணீர் மறைத்து நிற்பதெல்லாம்
அம்மொழி மீது அத்தனை உயர் அக்கறையாம்


No comments: