உலகச் செய்திகள்

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - ட்ரம்ப் ; தானே போரை நிறுத்தியதாகவும் ஆர்ப்பரிப்பு

 பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப்

எப்ஸ்டீன் சர்ச்சை; அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு பொலிஸாருக்கு உதவத் தயார் – மன்னர் சார்ள்ஸ் அறிவிப்பு!

எப்ஸ்டீன் இரகசிய ஆவணங்களில் 1,005 முறை இடம்பெற்றுள்ளது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெயர்

நோபல் பரிசு பெற்ற ஈரான் பெண்ணுக்கு மேலும் 07 ஆண்டுகள் சிறை




அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர்

Published By: Digital Desk 3

11 Feb, 2026 | 05:09 PM

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 108 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புத்த துறவிகளின் 2,300 மைல் (3,700 கி.மீ.) நீள 'அமைதி நடைபயணம்' (Walk for Peace), செவ்வாய்க்கிழமை (10) நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யை சென்றடைந்துள்ளனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரிலுள்ள ஹுவாங் தாவோ விபாசனா மையத்தில் இருந்து 19 தேரர்கள் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்தனர்.

லூசியானா, அலபாமா, ஜோர்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட 8 மாகாணங்களைக் கடந்து இந்த நடைபயணம் வொஷிங்டனை அடைந்துள்ளது.

அரசியல் பிளவுகள் மற்றும் சமூக மோதல்களுக்கு மத்தியில், 'அமைதி என்பது நமக்குள் இருந்து தொடங்க வேண்டும்' என்ற செய்தியை இவர்கள் அமெரிக்க மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.

இந்த நடைபயணத்தில் தேரர்களுடன் இணைந்து 'அலோகா' என்றழைக்கபடும் இந்திய தெருநாய் இனத்தைச் சேர்ந்த நாயும் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2022-இல் இந்தியாவில் துறவிகள் மேற்கொண்ட நடைபயணத்தின் போது அவர்களைப் பின்தொடர்ந்த இந்த நாயை, தேரர்கள் தத்தெடுத்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது அலோகா காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், குணமடைந்த பின் மீண்டும் தேரர்களுடன் இணைந்து தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

இந்த நீண்ட பயணத்தில்  பெரும் விபத்து ஒன்றும் நேரிட்டது. நவம்பர் மாதம் ஹூஸ்டன் அருகே சென்றபோது, துறவிகளின் வாகனத்தின் மீது ஒரு லொறி மோதியதில் மகா தம் போமசான் (Maha Dam Phommasan) என்ற தேரர் தனது காலை இழந்தார். இருப்பினும், தனது உறுதியைக் கைவிடாத அவர், நேற்று வொஷிங்டனில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மீண்டும் தேரர்களுடன் இணைந்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

வொஷிங்டன் தேசிய தேவாலயத்தில் நடைபெற்ற மதாந்தர கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களும், பிற மதத் தலைவர்களும் இவர்களை வரவேற்றுள்ளனர்.

"இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அமைதி என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒவ்வொரு அடியிலும் உணரப்பட வேண்டிய ஒன்று," எனத் தேரர்களின் தலைவர் பிகுக் பன்னாகாரா (Bhikkhu Pannakara) நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (11) இந்தத் தேரர்கள் கேபிட்டல் ஹில் (Capitol Hill) வழியாக நடந்து சென்று, லிங்கன் நினைவிடத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளனர். பின்னர் இவர்கள் பஸ்ஸில் மீண்டும் டெக்சாஸ் நோக்கிய பயணிக்கவுள்ளனர்.   நன்றி வீரகேசரி 






இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - ட்ரம்ப் ; தானே போரை நிறுத்தியதாகவும் ஆர்ப்பரிப்பு

12 Feb, 2026 | 01:55 PM

கடந்த ஆண்டு நிலவிய இந்தியா - பாகிஸ்தான் போரில் 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில்  தான் சமாதான தூதுவர் போல செயற்பட்டு போரை தடுத்து நிறுத்தியதாகவும் ஊடகப் பேட்டியொன்றின்போது குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் போரை தடுப்பதில் தான் தீர்க்கமாக பங்களித்ததாக ட்ரம்ப் உறுதிபட பேட்டியில் தெரிவித்திருந்தார். 

இது ஒரு அணு ஆயுதப் போராக இருந்திருக்கலாம் என்றும் கூறிய ட்ரம்ப், இதுவரை நான் 8 போர்களை நிறுத்தியதாகவும் அவற்றில் 6 போர்களை வரி விதித்தே தடுத்து நிறுத்தியதாகவும்  குறிப்பிட்டிருந்தார். 

“நீங்கள் இந்த போரை நிறுத்தவில்லை என்றால், நான் உங்களுக்கு அதிகளவு வரிகளை விதிப்பேன் என்று கூறினேன். அவர்கள் அதற்கு உடன்பட்டு போரை நிறுத்தியுள்ளனர். ‘ட்ரம்ப் எங்களது போரை நிறுத்தி, குறைந்தது 10 மில்லியன் மக்களின் உயிர்களை காப்பாற்றிவிட்டார்’ என  பாகிஸ்தான் பிரதமரே  என்னிடம் கூறியிருக்கிறார்” என ட்ரம்ப் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியமைக்கு தானே காரணம் என ட்ரம்ப் பல முறை தெரிவித்திருந்தார். 

கடந்த ஆண்டு மே 10ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரண்டு நாடுகளும்  அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்து வரும் ட்ரம்ப், தற்போது அதையே 80வது முறையாக பெருமைபடக் கூறுவதாக  பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். 

இந்நிலையில், மூன்றாம் தரப்பின் தலையீட்டை விரும்பாத இந்தியா ட்ரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. நன்றி வீரகேசரி 






பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டது அமெரிக்கா - பாக். அமைச்சர் கவாஜா ஆசிப்

11 Feb, 2026 | 03:23 PM

அமெரிக்கா தனது மூலோபாயத் தேவைகளுக்காக பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டு, பின்னர், கழிவறை டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ளார். 

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த கால பயங்கரவாதத்தை தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முன்னதாக ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது தவறு. அது மதக் கடமையால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக அப்போதைய இராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக், முஷாரப்  அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம் என்றும் அவர் கூறினார்.

இன்று பாகிஸ்தான் சந்தித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் எதிரொலி என மேலும் அவர் தெரிவித்தார்

கடந்த 6ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், தாக்குதலுக்கு காரணமான தற்கொலைக்குண்டுதாரி என அடையாளம் காணப்பட்ட யாசிர் என்பவர் குறித்த தாக்குதலுக்கு முன்னதாக  ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என கூறப்பட்டது. 

அதனையடுத்து, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மேற்கண்டவாறு பேசிய அமைச்சர் ஆசிப், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பாகுபாடின்றி செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.   நன்றி வீரகேசரி 






எப்ஸ்டீன் சர்ச்சை; அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு பொலிஸாருக்கு உதவத் தயார் – மன்னர் சார்ள்ஸ் அறிவிப்பு!

Published By: Digital Desk 3

10 Feb, 2026 | 03:01 PM

ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மன்னர் சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட 30 இலட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஆவணங்களில் அண்ட்ரூ குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:

2010-ஆம் ஆண்டு அண்ட்ரூ இங்கிலாந்தின் வர்த்தகத் தூதுவராக இருந்தபோது சிங்கப்பூர், வியட்நாம், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணங்களின் இரகசிய அறிக்கைகளை ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகத் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்வதற்கான 'மிக இரகசிய' விவரங்களையும் அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறும் செயல் என 'ரிபப்ளிக்' என்ற அமைப்பு முறைப்பாடு அளித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

"மவுண்ட்பேட்டன்-வின்சரின் நடத்தை குறித்து தொடர்ந்து வெளிவரும் முறைப்பாடுகள் குறித்து மன்னர் மிகுந்த கவலை அடைந்துள்ளாரர். பொலிஸ் எங்களை அணுகினால், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்."

இதன் மூலம், தனது சகோதரரைக் காப்பாற்ற முயலாமல் சட்டத்திற்கு மதிப்பளிக்க மன்னர் தீர்மானித்திருப்பது தெளிவாகியுள்ளது.

அண்ட்ரூ ஏற்கனவே தனது 'இளவரசர்' மற்றும் 'டியூக்' பட்டங்களை 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இழந்தார். தற்போது அவர் தனது வின்சர் கோட்டை இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, சாண்ட்ரிங்ஹாம் (Sandringham) எஸ்டேட்டில் தங்கியுள்ளார்.

மன்னர் சார்ள்ஸ் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அங்கிருந்த ஒருவர் "அண்ட்ரூ பற்றி உங்களுக்கு எவ்வளவு காலமாகத் தெரியும்?" எனக் கத்தியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோரும் எப்ஸ்டீன் விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அண்ட்ரூ இந்த முறைப்பாடுகள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இருப்பினும், எப்ஸ்டீன் ஆவணங்களில் பெண்ணுடன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது பிரித்தானிய அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி 






எப்ஸ்டீன் இரகசிய ஆவணங்களில் 1,005 முறை இடம்பெற்றுள்ளது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெயர்

Published By: Digital Desk 3

09 Feb, 2026 | 04:45 PM

மறைந்த அமெரிக்க பணக்காரரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல மில்லியன் பக்கங்கள் கொண்ட இரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. 

இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் உயர் அதிகாரிகளுடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியாகியுள்ள 35 இலட்சம் பக்கங்கள் கொண்ட மின்னஞ்சல்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் விளாடிமிர் புட்டின் பெயர் 1,005 முறை இடம்பெற்றுள்ளது.

ரஷ்யா குறித்த குறிப்புகள் 5,000-க்கும் மேற்பட்ட இடங்களில் வருகின்றன.

எப்ஸ்டீன் பலமுறை புட்டினைச் சந்திக்க முயற்சி செய்துள்ளதும், அதற்காக ஐரோப்பிய அரசியல்வாதிகளின் உதவியை நாடியதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், இருவரும் நேரில் சந்தித்ததற்கான உறுதியான ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

ஐநா-வுக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் விடாலி சுர்கினுடன் (Vitaly Churkin) எப்ஸ்டீன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். சுர்கினின் மகனுக்கு நியூயோர்க்கில் வேலை வாங்கித் தரவும் அவர் முன்வந்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மின்னஞ்சல் ஒன்றில் "சுர்கின் ஒரு சிறந்த நபர், எங்களுக்கிடையிலான உரையாடலுக்குப் பின்னர் அவர் ட்ரம்ப் பற்றி நன்கு புரிந்து கொண்டார்" என எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

எப்ஸ்டீன் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து இளம்பெண்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்ததும், அவர்களை உயர் பதவியில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்ததும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"இந்த விபரீத பாலியல் ஊழல் வழக்கில் ரஷ்ய உளவு அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எப்ஸ்டீன் ரஷ்யாவின் 'உளவாளியாக' செயல்பட்டாரா என்பது தொடர்பில்  போலந்து அரசு விரிவான விசாரணை நடத்தும்."

இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிரெம்ளின் மாளிகை ஊடகத் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், "எப்ஸ்டீன் ரஷ்ய உளவுத்துறையின் சொத்து என்ற வாதத்தை நகைச்சுவையாகக் கூட எடுத்துக்கொள்ள முடியாது; இது நேரத்தை வீணடிக்கும் செயல்" என விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க நிதி ஆலோசகராக இருந்த எப்ஸ்டீன், இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2019 இல் கைது செய்யப்பட்டார். 

விசாரணை நிலுவையில் இருந்தபோதே நியூயோர்க் சிறையில் அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது நட்பு வட்டத்தில் உலகத் தலைவர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பெரும் வர்த்தகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 






நோபல் பரிசு பெற்ற ஈரான் பெண்ணுக்கு மேலும் 07 ஆண்டுகள் சிறை

Published By: Digital Desk 3

09 Feb, 2026 | 12:42 PM

ஈரானில் பெண்களின் உரிமைக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் மூன்று தசாப்தங்களாகப் போராடி வரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற 53 வயதுடைய நர்கீஸ் முகமதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மேலும் 7.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஏற்கனவே சிறையில் இருக்கும் நர்கீஸ் முகமதி மீது சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,  தேசிய பாதுகாப்புக்கு எதிராக சதி செய்தார் என்கிற குற்றச்சாட்டுக்கு 06 ஆண்டுகளும், அரசுக்கு எதிரான பிரச்சாரம் செய்தார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஒன்றரை ஆண்டுமாக 07 அரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 02 ஆண்டுகள் உள்நாட்டு நாடுகடத்தல் (Internal Exile - குஸ்ஃப் நகரில் வசிக்க வேண்டும்) மற்றும் 02 ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி, மஷாத் நகரில் மர்மமான முறையில் உயிரிழந்த சட்டதரணி கோஸ்ரோ அலிகோர்டியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நர்கீஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரை, "அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும்", "அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பத் தூண்டியதாகவும்" கூறி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சிறையில் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நர்கீஸ் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை அவரது சட்டதரணி முஸ்தபா நிலியுடன் தொலைபேசியில் பேசிய பின்னர் அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாக 'நர்கீஸ் அறக்கட்டளை' தெரிவித்துள்ளது.

"பல வாரங்களாகத் தனிச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர், தற்போதுதான் தனது சட்டதரணியிடம் பேச அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரானிய நீதித்துறையின் இந்த அடக்குமுறை சர்வதேச விதிகளை மீறுவதாகும்." என அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2023-ஆம் ஆண்டு சிறையில் இருக்கும்போதே இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஈரான் அரசு தற்போது அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள சூழலில், உள்நாட்டில் போராட்டக் குரல்களை ஒடுக்க இத்தகைய கடும் தண்டனைகளை வழங்கி வருவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பையும் சேர்த்து, நர்கீஸ் முகமதிக்கு விதிக்கப்பட்ட மொத்த சிறைக்காலம் சுமார் 44 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  நன்றி வீரகேசரி 





No comments: