தங்க மாம்பழம்!


…..சங்கர சுப்பிரமணியன்.


உயிரோடிருக்கு இருக்கும்போது தாய் கேட்டும் ஒரு மாம்பழம் வாங்கிக் கொடுக்காதவன் தாயை இழந்தபின் தங்க மாம்பழம் தானம் கொடுத்தானாம். இது கிட்டத்தட்ட கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்பது போல் இருந்தாலும் இடத்தைப் பொருத்து மாறுபடும்.

அதைப்போலவே முதலில் சொல்லப்பட்டது வட்டாரத்தைப் பொருத்து மாறலாம். இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் தளவாய்பட்டி தாமோதரன் செய்த செயல்தான் என்னை சொல்லவைத்தது. அவர் அப்படி என்ன செய்தார்? அவரது அப்பாவின் நினைவு நாளன்று அன்னதானம் போட்டு ஏழைகளுக்கு ஆடைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

இதனால் பலன் பெற்றோர் அனைவரும் நல்ல மனுசன் ஆண்டு தோறும் இதைவிடாமல் செய்கிறார் இந்த மவராசன் நல்லா இருக்க வேண்டும் என்று வாயார வாழ்த்திச் சென்றனர். அப்போது அங்கு வந்த பெரியவர் இதை ஆண்டுதோறும் செய்கிறீர்களே ஏதாவது முதன்மையான காரணம் இருக்கிறதா? என்றார்.

அவர் அப்படிக்கேட்டதும் கண்கலங்கிய அவர் தன்னையும் மீறி கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே,

“ஐயா, எனக்கு பதினொரு வயதிருக்கும். எனது அப்பா நண்பரால் ஏமாற்றப்பட்டு வீடு வாசலை இழந்தார். நோயுற்றார். அவரை குளிக்கவைக்க கிணற்றடிக்கு அழைத்துச் சென்றேன். அப்போது அவர் சொன்னவை இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது” என்று சொல்லி நிறுத்தவும் மீண்டும் கண்களில் கண்ணீர் கொட்டியது.

“சரிங்க, வேண்டாம். உங்கள் மனதை இந்ந அளவுக்கு பாதித்த விசயத்தை சொல்ல வேண்டாம். விடுங்கள்.” என்றார் பெரியவர்.

“அப்படியெல்லாம் இல்லை. உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிடுகிறேன். சொல்லாது போனல் அது மனதில் அழுத்திக் கொண்டிருக்கும்.”

“…………….”

“உன்னை ஒன்றுமில்லாமல் நடுத்தெருவில் விட்டுச் சென்றுவிடுவேன் போல் தெரிகிறது என்று சொல்லி கண்கலங்கினார். அதன் பின் ஒருமாதமே இருந்தவர் அவர் சொன்னபடியே என்னைத் திண்டாட வைத்துவிட்டு இறந்து போனார்” என்று சொல்லி, வந்த விம்மலை அடக்கினார்.

அதன்பின் நான் வாழ்வில் அடைந்த துயரங்களை சொல்லமுடியாது. இளவயதில் தகப்பனை இழந்தவன் என்னென்னவற்றை எல்லாம் அனுபவிப்பானோ அத்தனையையும் அனுபவித்தேன். படிப்படியாக முன்னேறிய நான் எனது தாயாரை அப்பா இல்லாமல் அவர் அடைந்த துன்பங்கள் யாவையுமே மறந்து போகும்படியாக நன்றாக கவனித்தேன். அம்மா இறக்கும்வரை மிகவும் மகிழ்வாகவே இருந்தார்கள்.

ஆனால் எனது அப்பாவை ஒரு நாள்கூட நல்லபடியாய் வைத்துப் பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்ற கவலைதான் எனக்கு அடிக்கடி வருகிறது என்றார். அமைக்கேட்ட கேட்ட பெரியவர் நீ என்ன வேண்டுமென்றா செய்கிறாய். பெற்றோரை தெருவில் விடும் இக்காலத்தில் இறந்து போன தந்தையை எண்ணி வாடுகிறாயே நீ வள்ளுவன் சொன்னதையும் மிஞ்சி நிற்கிறாய் என்றார்.

பெரியவர் சொன்னதைக்கேட்டு ஒன்றும் புரியாமல் தாமோதரன் விழிக்கவும் ஒன்றும் குழப்பமடையாதே என்றார். விளக்கமாகவே சொல்லிவிடுகிறேன். தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல் என்றார் வள்ளுவர். ஆனால் நீயோ அவர் உன்னை அவையத்து முந்தியிருக்கச் செய்யாது போனாலும் நீ இவன் தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல் என்றபடி நடக்கிறாயே. அதைத்தான் சொன்னேன் என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் மயிர்கூச்செறிந்த தாமோதரன் ஐயா நீங்கள் இப்படிச் சொல்வது என் தந்தையே வந்து என்னை மெச்சுவது போல் உள்ளது என்று கூறி பரவசம் அடைந்தான். அப்போது அவருக்கு பதிலளித்த ஒன்று பெரியவரை வியப்படையவைத்தது.

ஐயா சில ஆண்டுகளுக்குமுன் உங்களைப்போல் ஒருவர் தம்பி இப்படி அன்னதானம் ஆடைகளை ஏழைமக்களுக்கு உங்களின் தந்தையார் நினைவு தினத்தன்று செய்வது நல்லசெயல்தான். அத்தோடு காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு சென்று திதி கொடுக்கிறீர்களா என்றார். நான் அப்படி ஒன்றும் செய்வதில்லை என்றதும் பதில் பேசாமல் சென்றுவிட்டார். மறு ஆண்டு நான் ராமேஸ்வரம் சென்று திதி கொடுத்தேன்.

திதி கொடுத்துவந்த பின்னர் நான் புதிதாக எதையும் உணர்ந்ததில்லை. ஆனால் இதுபோல் அன்னதானமும் ஆடைகளையும் வழங்கும்போது என்னுள் ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என்று தாமோதரன் சொன்னதுதான் பெரியவரை வியப்படைய வைத்தது.

அதற்கு அந்த பெரியவர் நாம் என்ன செய்கிறோம் என்பது முதன்மையானதல்ல. அதனால் நம் மனது அமைதியும் மகிழ்ச்சியும் அடைகிறதா என்பதே அவசியம் என்றார். எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக் நாம் எதையும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று அவர் சொல்வது சரியெனப்பட்டது. தங்க மாம்பழம் தானம் கொடுத்தானா அல்லது கொடுக்க முடியுமா என்பதல்லாம் அவனுக்குத் தெரியாது.

ஆனால் ஆயிரக்கணக்கான கோடிகளை அரசியலில் கொள்ளையடித்து வைத்திருப்பவர்களால் சில கோடிகளை செலவு செய்து தங்கn மாம்பழம் கொடுக்க நினைத்தால் செய்யமுடியாதா என்ன? ஆதலால் வசதி இருந்து கொடுக்க மனமிருந்து அப்படி கொடுக்கும்போது ஒரு மன அமைதி கிடைக்கிறதென்றால் அப்படியும் நடந்திருக்கலாம் அல்லவா?

நடந்ததோ இல்லையோ தங்க மாம்பலம் தானம் கொடுத்ததால் தானம் கொடுத்தவருக்கு மன அமைதி கிடைத்திருக்கிறது. அதனால் அது பழமொழியாக வந்துள்ளது. எனக்கும் ராமேஸ்வரத்துக்கு போய் திதி கொடுத்தபோது வராத அமைதி ஏழைகளுக்கு அன்னதானம் போட்டு ஆடை வழங்குவதில் வருகிறது.

மரக்கறி உணவை உண்பவர்களுக்கு அதை சாப்பிடுவதால் கிடைக்கும் இன்பம் போலவே மாமிச உணவை சாப்பிடுபவர்களுக்கு அதை சாப்பிடுவதால் இன்பம் கிடைக்கிறது. இரண்டையும் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். ஆகையால் அவரவர்களுக்கு விரும்புவதை சாப்பிடுகிறார்கள் என்று எண்ணியபடியே ஐயா வாங்க அம்மா வாங்க இந்தாங்க என்று ஆடைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார் தாமோதரன்.

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: