முகராசி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 முருகனின் அருளாசியையும், எம் ஜி ஆரின் முகராசியையும் மட்டும்


நம்பி படம் எடுத்து பணம் பார்த்தவர் சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பா தேவர். அந்த தேவர் 1966 எடுத்த படம் முகராசி . யாருக்கு கால்ஷீட் கொடுப்பதில் சுணக்கம் காட்டினாலும் தேவருக்கு மட்டும் உடனடியாக கால்ஷீட் கொடுத்து விடும் எம் ஜி ஆர் இந்தப் படத்துக்கும் கால்ஷீட்டை வாரி வழங்கி விட 17 நாட்களில் மள மளவென்று படத்தைத் தயாரித்து வெளியிட்டு விட்டார் தேவர். 



படத்தில் இரண்டு நட்சத்திர நடிகர்கள். முதன் முறையாக எம் ஜி ஆருடன் இந்தப் படத்தில் சேர்ந்து நடித்தார் ஜெமினி. காதல் மன்னன் என்ற போதும் இதில் அவருக்கு ஜோடி இல்லை. பாடலும் இல்லை. அவற்றை எல்லாம் எம் ஜி ஆரே பார்த்துக் கொண்டார். குணச்சித்திர நடிகராகவே படம் முழுக்க வருகிறார் ஜெமினி. ஒரு கால் இழந்தவராக வரும் அவர் சில காட்சிகளில் உருக்கமாகவும், சில காட்சிகளில் மூர்க்கமாகவும் நடித்து ரசிகர்களை கவருகிறார். 


படத்தில் எம் ஜி ஆருக்கு ஜோடி ஜெயலலிதா. அவரிடம் இருந்து

பெரியளவில் நடிப்பை எதிர் பார்க்காத தேவர் அவரின் கவர்ச்சியை படத்தில் நன்கு பயன்படுத்திக் கொண்டார். தண்ணீரில் நனைந்து ஈர உடையில் ஆடிப் படுகிறார், முழங்காலுக்கு மேல் காற்சட்டை அணிந்து வாத்தியரிடம் சிலம்பம் கற்கிறார், மூன்று டூயட் பாடுகிறார் , பாதி படத்துக்கு மேல் சேலை அணிந்து வருகிறார். அத்துடன் அவர் வேலை முடிந்தது. 



நம்பியார் வில்லன் . அடிக்கடி கழுத்தை சுளிக்கி ஒரு மேனரிசம் காட்டுகிறார். அவரின் கையாள் அசோகன். எம் ஜி ஆருடன் பிரமாதமாக சண்டை போடுகிறார். ஜெமினியை இதில் நடிக்க வைத்த தேவர் , பட வாய்ப்புகள் இன்றி இருந்த ஸ்ரீராமுக்கும் இப் படத்தில் வில்லன் வேடம் தந்தார். 


நாகேஷ், வி.கே. ராமசாமி, மனோரமா, ஜெயந்தி எல்லோரும் சேர்ந்து காமெடி என்ற பேரில் என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள். இவர்களுடன் பி. கே. சரஸ்வதி, தேவர், புத்தூர் நடராஜன் ஆகியோரும் நடித்திருந்தனர். 

 படத்துக்கான திரைக் கதை ஜி. பாலசுப்ரமணியம் என்று திரையில் காட்டப்பட்ட போதும் கதையை எழுதியவர் வி .சி. குகநாதன் என்பது பலரும் அறியாத கதை.

பாலசுப்ரமணியத்திடம் உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த

குகநாதன் பிட்டி த்ரீ என்ற ஆங்கிலப் படத்தை பார்த்து விட்டு அதனைத் தழுவி மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற கதையை எழுதி மேடை நாடமாக்கும் முயற்சியில் இருந்தார். எம் ஜி ஆரும் , தேவரும் பாலசுப்ரமணியத்திடம் கதை ஒன்றை கேட்ட போது அவரிடம் கதை ஒன்றும் இருக்கவில்லை. அந்த நேரம் குகநாதன் தான் எழுதி வைத்திருந்த கதையை அவரிடம் சொல்ல ஜி பி எஸுக்கு அக் கதை பிடித்து விட்டது. அன்றிரவு அவரிடம் கதையை சொல்லி விட்டு சென்ற குகநாதன் மறுநாள் காலை அவரை சந்தித்த போது ஜி பி எஸ் உருவாக்கியிருந்த திரைக் கதையை கேட்டு அசந்து விட்டார். ஒரு கதையை எவ்வாறு செப்பனிட்டு உருவாக்கலாம் என்பதை அன்று தான் தான் அறிந்து கொண்டதாக குகநாதன் என்னிடம் கூறினார். பின்னர் அக் கதை முகராசி என்ற பேரில் படமானது! 

 

படத்தின் வசனங்களை ஆர் . கே. சண்முகம் எழுதினார். என் .எஸ் . வர்மா ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். எம் ஜி ஆரை முதன்மை படுத்தி அவரின் கமெரா சுழன்றது. ஷியாம்சுந்தரின் சண்டையமைப்பு சோடை போகவில்லை. 


பாடல்களை கண்ணதாசன் இயற்றினார். மனித வாழ்வின் நிலையாமையை விளக்கும் வகையில் அமைந்த உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு பாடல் கருத்தோடு அமைந்தது. உனக்கும் எனக்கும்தான் பொருத்தம், முகத்தை காட்டி காட்டி மூடி கொள்வது நியாயமா பாடல்கள் இனிமையாக ஒலித்தன. கே வி மகாதேவன் இசை படத்துக்கு ஏதுவாக அமைந்தது. 


வழக்கம் போல் தேவரின் தம்பி எம் .ஏ . திருமுகம் படத்தை டைரக்ட்

செய்தார். மிகக் குறுகிய காலத்தில் படமாகி திரையுலகையும் , ரசிகர்களையும் முகராசி வியப்பில் ஆழ்த்தியது. முகராசி நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. பின்னர் இப் படம் சிங்களத்திலும் தாஹக்கின் எகெக் என்ற பேரில் விஜயகுமாரதுங்க நடிப்பில் படமானது.

No comments: