வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு
இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஐரோப்பிய பிரதிநிதி பேச்சு!
பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் கலந்துரையாடல்
இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியது ; மலையகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்தல்
கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு - அமைச்சர் விமல் ரத்நாயக்க
திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4 பிக்குகள் உட்பட 10 பேருக்கும் நிபந்தனையின்கீழ் பிணை
வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு
10 Feb, 2026 | 06:45 PM
(எம்.மனோசித்ரா)
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2026 தொடக்கம் 2031 வரையான 6 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வலய ரீதியான உற்பத்தி ஆற்றல் வளங்களை (சுற்றுலா, மீன்பிடி போன்ற) அதிகரித்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தனியார் மூதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் நிறுவன ரீதியான வலுப்படுத்தல்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்ற கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கமைய, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அமைச்சு தனது ஏனைய ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நன்றி வீரகேசரி
இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஐரோப்பிய பிரதிநிதி பேச்சு!
10 Feb, 2026 | 03:00 PM
ஐரோப்பிய வெளிநடவடிக்கை சேவையின் (EEAS) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
`
ஐரோப்பிய ஒன்றிய - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27வது கூட்டத்தொடரில் இணைத் தலைமை தாங்குவதற்காக ஐரோப்பிய வெளிநடவடிக்கை சேவையின் (EEAS) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவோலா பம்பலோனி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார
முன்னேற்றம் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய சட்ட மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை ஆற்றிய முக்கிய பங்கிற்கு இதன்போது அமைச்சர் விஜித ஹேரத் நன்றி செலுத்தினார்.
அத்துடன் இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் கலந்துரையாடல்
12 Feb, 2026 | 07:31 PM
பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் கலந்துரையாடல் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தலைமையில் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி செயலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இங்கு பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தற்போதைய பௌதிக ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், இதன்போது ஆணைக்குழு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்பும் கிடைத்தது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணைப் பிரதித் தலைவர்களான சமிந்த்ராணி கிரியெல்ல, சமன்மலி குணசிங்க மற்றும் ஒன்றியத்தின் ஏனைய உறுப்பினர்களான ஹேமாலி வீரசேகர, லக்மாலி ஹேமச்சந்திர, நிலந்தி கொட்டஹச்சி, ஒஷானி உமங்கா ஆகியோர் பங்கேற்றதுடன், ஒன்றியத்தின் செயலாளர், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலகம், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி
இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியது ; மலையகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்தல்
12 Feb, 2026 | 07:33 PM
இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும், பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின், உள்நாட்டுக்கான புதிய பணிப்பாளர் ஷானன் கவுலின் (Shannon Cowlin) தெரிவித்தார்.
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நாட்டுக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷானன் கவுலின், இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
புதிய பணிப்பாளரை ஜனாதிபதியிடம் ஆசிய அபிவிருத்தி வங்கியின்
பிராந்திய பணிப்பாளர் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு செயல்முறையின் வினைத்திறன் குறித்து தூதுக்குழுவினர் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இச்சகலந்துரையாடலில் 'டித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எட்டப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
மத்திய மலைநாடு மற்றும் மலைப்பகுதிகளில் நிலவும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகளை விளக்கிய ஜனாதிபதி, அந்த சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை மீளமைக்கவும், நீர் மூலங்களைப் பாதுகாக்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிரந்தர வாழ்வாதாரங்களை உருவாக்கித் தருவது தொடர்பான அவசரத் தேவையை வலியுறுத்தினார். இச்சவால்களை எதிர்கொள்ள நீண்டகால வேலைத்திட்டமொன்றின் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள், எதிர்பார்க்கப்படும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடான ஆதரவு மற்றும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
இதன் மூலம் நிலையான அபிவிருத்திக்காக இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையிலான பரஸ்பர அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் அதன் தெற்காசிய திணைக்களத்தின் (SARD) பணிப்பாளர் நாயகம் சோனா சிரேஸ்தா (Sona Shrestha), உள்நாட்டுக்கான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் லிலியா அலெக்சான்யன் (Lilia Aleksanyan) மற்றும் பிரதம பொருளாதார அதிகாரி லக்ஷினி பெர்னாண்டோ ஆகியோரும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி. அபொன்சு ஆகியோரும் கலந்துகொண்டனர். நன்றி வீரகேசரி
கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு - அமைச்சர் விமல் ரத்நாயக்க
12 Feb, 2026 | 02:56 PM
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
கொக்கிளாய் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை எதிர்வரும் மேமாதத்திற்குள் துறைசார்ந்தவர்கள் கையளித்தால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிக்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்நேற்று புதன்கிழமை 11
இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தினை அமைப்பதற்கு முன்வந்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றேன்.
அதேபோல் கொக்கிளாய் - புல்மோட்டை்இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றேன்.
ஏற்கனவே கடந்த 13.08.2025 அன்று இடம்பெற்ற ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலத்தை அமைக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தேன்.
அதற்கமைய 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கு சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே சாத்தியவள ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தங்களிடம் கோரிக்கையை முன்வைக்கின்றேன். என அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் மேமாதத்திற்குள் குறித்த பாலத்தினை
அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை துறைசார்ந்தவர்கள் சமர்ப்பித்தால் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார்.
அந்தவகையில் எதிர்வரும் மேமாதத்திற்குள் தம்மால் கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலம் அமைப்பதற்குரியாசாத்தியவள அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4 பிக்குகள் உட்பட 10 பேருக்கும் நிபந்தனையின்கீழ் பிணை
Published By: Vishnu
11 Feb, 2026 | 07:26 PM
பேரையும் எதிர்வரும் வழக்குத் தவணையின்போது முன்னிலையாகுமாறும், சர்ச்சைக்குரிய புத்தர்சிலையை கொண்டு வந்த வாகனத்தை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, மேற்படி வழக்கு தொடர்பில் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் நடைபெறும் அனைத்து வழக்குத் தவணைகளுக்கும் எதிராளிகள் அனைவரும் தவறாது சமூகமளிக்க வேண்டும், வழக்கு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், குறித்த வழக்கு முழுமையாக முடிவுறுத்தப்படும்வரை வழக்கு தொடர்பாக எங்கும் விமர்சிக்கக்கூடாது, இந்த வழக்கின் வழக்காளி மற்றும் சாட்சிகள் எவரையும் அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது, இந்த காலப்பகுதியில் பிரதேசத்தில் எவ்விதமான பொது அமைதிக்கோ, சமய சமய சகவாழ்வுக்கோ இடையூறு எதனையும் ஏற்படுத்தக்கூடாது. இவற்றில் ஒன்றை அல்லது அனைத்தையும் மீறினால் வழங்கப்பட்டுள்ள பிணை இரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறித்த நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதான டச்பே கடற்கரை பகுதியில் கடற்கரையில் இருந்து சுமார் 11 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வருடம் 2025 நவம்பர் மாதம் 16, 17ஆம் திகதிகளில் சட்ட விரோதமான முறையில் கட்டுமானத்தை மேற்கொண்டார்கள் எனவும் புத்தர் சிலையை நிறுவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் 17.11.2025 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் தரப்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை. பின்னர் 14.01.2026 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது முன்னிலையாகி இருந்த கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரையும் 19.01.2026 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
பின்னர் குறித்த வழக்கானது 19.01.2026 அன்று விசாரணைக்காக
எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேலும் ஒரு எதிராளி சரணடைந்திருந்ததுடன் எதிராளிகள் சார்பில் கோரப்பட்ட பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு 10 பேருக்கும் விளக்கமறியல் 28.01.2026 வரை நீடிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் குறித்த வழக்கினை நிராகரிக்கக்கோரி எதிரிகளால் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அது பெப்ரவரி 3ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து குறித்த வழக்கானது பெப்ரவரி 02, பெப்ரவரி 09 ஆகிய திகதிகளில் விசாரணைக்காக அழைக்கப்பட்டதுடன் கடந்த 9ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (11) குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரும் தலா 10 இலட்சம் பெறுமதியான இரு சரீரப் பிணையிலும், பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் மேல் நீதிமன்றினால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டனர். நன்றி வீரகேசரி












No comments:
Post a Comment