மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
காயும் அழகு கனியும் அழகு
பூவும் அழகு மொட்டும் அழகு
ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு அழகு
அழகை ரசிப்போம் ஆனந்த மடைவோம்
மழலை அழகு பிள்ளை அழகு
தவழும் நிலையில் அதுவும் அழகு
பல்லே இல்லா வாயும் அழகு
முளைக்கும் பல்லு இன்னும் அழகு
கொஞ்சும் போது கடிப்பதும் அழகு
கெஞ்சும் வேளை துப்புதல் அழகு
அஞ்சாப் பாம்பை பிடிப்பதும் அழகு
காலை எடுத்து வைப்பதும் அழகு
இடறி விழுந்து எழுவதும் அழகு
பிடித்துப் பிடித்து நடப்பதும் அழகு
பெற்றவர் மகிழ்ந்து நிற்பதும் அழகு
பட்டுச் சட்டை அணிவதும் அழகு
பாத அணியுடன் நடப்பதும் அழகு
கிட்ட வந்து இழுப்பதும் அழகு
கிடுகிடு வென்று ஒடுவ தழகு
மீசை முளைத்தால் அதுவொரு அழகு
கூடவே தாடியும் அரும்புதல் அழகு
குழந்தை வளர்ந்தால் குதூகலம் பெருகும்
அதுவும் அழகே ஆனந்த இருப்பே
பருவம் அடைந்தால் பெரிய அழகு
பாவாடை தாவணி அணிந்தால் அழகு
பின்னல் பின்னி விட்டால் அழகு
முன்னும் அழகே பின்னும் அழகே
திருமணப் பருவம் அடைந்தால் அழகு
உறவினர் மகிழ்ந்து நின்றால் அழகு
அனைவரும் வாழ்த்தினால் அழகோ அழகு
ஆனந்தம் தருவதே அழகின் சிறப்பே
பட்டம் பெற்று வந்தால் அழகு
பதவி கிடைத்து உயர்ந்தால் அழகு
நல்ல திருமணம் வாய்த்தால் அழகு
நாளும் அழகு அரணாய் தொடரும்
பிள்ளைச் செல்வம் வாய்த்தால் அழகு
பெம்மான் அருளும் நிறைந்தால் அழகு
உள்ளம் தூய்மை ஆனால் அழகு
உயர்வுடை வாழ்வு உன்னத அழகே
காலம் செல்ல பற்பல மாற்றம்
தவண்டது நடந்தது ஓடின அனைத்தும்
எம்மை விட்டு அகன்றே போக
ஓய்வினை நாடி உடம்பது போகும்
முளைத்த மயிரும் களன்றே போகும்
இருக்கும் மயிரும் வெண்மையாய் மாறும்
அனைத்துப் பற்களும் ஆட்டங் காணும்
ஆடிய கால்கள் அமைதியாய் இருக்கும்
உழைத்த கரங்கள் ஓய்வினை எடுக்கும்
உடலின் உறுப்புகள் மெதுவாய் இயங்கும்
களைப்பு வந்து கண்களை இருட்டும்
மூத்தோர் என்னும் பட்டமும் சேரும்
ஆசி வாங்கிட அனைவரும் வருவார்
அன்பாய் ஆசியை வழங்கியே நிற்பார்
தாத்தா பாட்டி விருதாய் அமையும்
தானாய் அழகது ஒளிர்ந்துமே நிற்கும்
முதுமையும் அழகே முகமும் அழகே
பழுத்த பழமாய் இருப்பார் அவரே
எத்தனை அனுபவம் எத்தனை அனுபவம்
அத்தனை நிறைந்த பொக்கிஷம் அவரே !
No comments:
Post a Comment