முரணாகத் தெரிவதேன் குதம்பாய்?

 


-சங்கர சுப்பிரமணியன்.





ஆக்கிய சோற்றின் பயன் என்னவென்றால்
பசிக்குப் புசிக்க என்று சொல்வது முறையா
அல்ல அவ்வுணவின் பயன் என்னவென்றால்
அதை கடலில் போடுவது என்பது முறையா

போர்பயிற்சி எடுத்து நிற்கும் வீரரெல்லாம்
போர் வந்தால் நாட்டைப் பாதுகாப்பதற்கா
அல்லது அது வித்தைகாட்டி நாட்டு மக்களை
மகிழ்விக்கத்தான் என்றால் சரியாயிருக்குமா

ஏற்பது இகழ்ச்சி என்று சொன்ன ஔவையும்
பிச்சை புகினும் கற்கை நன்று என்றுரைத்தார்
கல்லாதாரை முகத்திரண்டு புண்ணுடையார்
என்று வள்ளுவனும் வழிமொழிந்தே சென்றார்

கேடில் விழுச்செல்வம் கல்வி என்றவர்தான்
மாடல்ல மற்றவை என்று சொல்லிச் சென்றார்
கால்லாதாரை எலாம் முதுகாட்டில் காக்கை 
உகக்கும் பிணம் என்றார் ஔவைபிராட்டியும்

இவ்வாறெல்லாம் உணர்ந்து தெளிந்த பின்னே
திருக்குறளில் கற்றதனாலாய பயனென்கொல்
கல்லாதார் கண்திறாஅர் எனின் என்று வருமா
வாலறிவன் நற்றாள் தொழாஅர் என்றே வருமா

வாலறிவன் என்பதற்கு ஆன்றோர் சான்றோர் 
என்றெலாம் உற்ற பொருள் பலவும் இருக்க
காற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதெலாம்
ஏட்டுச் சுரைக்காய்தானோ சொல் குதம்பாய்?


No comments: