வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
மன்னார் காற்றாலைத் திட்ட ஆய்வுக்காக சென்ற குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்!
ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்!
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை!
08 Oct, 2025 | 03:49 PM
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகள் இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு வழங்கும் போர்வையில் பல நிதி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் போது நிறுவனம் குறித்து நன்கு ஆராய்ந்து அதற்கு பின்னர் வாகனங்களை வாடகைக்கு எடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாகனங்களை வாடகைக்கு வழங்குவதாக கூறி விளம்பரப்படுத்தி இணையவழி ஊடாக பணத்தைப் பெற்றுக்கொண்டு வாடகை சேவையை வழங்காமல் மோசடி செய்தமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
மன்னார் காற்றாலைத் திட்ட ஆய்வுக்காக சென்ற குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்!
08 Oct, 2025 | 03:15 PM
இரண்டு மாதங்களுக்கும் மேலாக உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக போராடுகின்ற போதிலும், அவர்களையும் மீறி காற்றாலைகளை நிறுவுவதற்காக நிலத்தை ஆய்வு செய்ய மன்னாருக்கு சென்ற ஒரு குழுவினரை அந்தக் கிராமமக்கள் விரட்டியடித்துள்ளனர்.
காற்றாலைகளை நிறுவுவதற்கான நிலத்தை ஆய்வு செய்வதற்காக மன்னார், பேசாலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பேசாலை கிராமத்துக்கு GEO ENGINEERING CONSULTANS (PVT) LTDஇன் அதிகாரிகள் குழு அதன் இயந்திரங்களுடன் சென்றதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கிராம மக்கள்
போராட்டம் நடத்தி, ஆய்வுக்காக சென்ற குழுவினரை விரட்டியுள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் வகையில், மன்னார் தீவில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலைத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி அறிவித்த ஒரு மாத காலத்திற்கு முன்னரே, புதிய பணிகள் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டன என்பதை போராட்டக்காரர்கள் அண்மையில் வெளிப்படுத்தினர்.
விலைமனுக் கோரல் மற்றும் ஒப்பந்தங்கள் ஊடாக, மன்னாரில் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 20 மெகாவாட் மற்றும் 50 மெகாவாட் காற்றாலைத் திட்ட கட்டுமானப் பணிகளை, தற்காலிகமாக நிறுத்திவைக்க, கடந்த ஆகஸ்ட் 13ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி தீர்மானித்தார்.
இந்நிலையில், அரச அதிகாரிகளுடனான எந்தவொரு கலந்துரையாடலிலும் தீர்வு காணப்படவில்லை என மன்னார் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இழக்கச் செய்யும் எனக் கூறிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.
போராட்டக்காரர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, மன்னார் தீவில் நிறுவப்படவுள்ள புதிய காற்றாலைத் திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் இலங்கையின் மிகப் பெரிய தீவான மன்னாரில், மக்களின் வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் அழிவை ஏற்படுத்தும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் உயர் மின் காற்றாலைகள் நிர்மாணிக்கப்படுவதை எதிர்க்கும் உள்ளூர்வாசிகள், இந்தத் திட்டங்களை உடனடியாக மன்னார் தீவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஏகமனதாக கோருகின்றனர். நன்றி வீரகேசரி
ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி
Published By: Digital Desk 3
08 Oct, 2025 | 02:29 PM
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் இரண்டு முன்னாள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (08) அனுமதி அளித்துள்ளது.
ஷானி அபேசேகர, முன்னாள் சிஐடி அதிகாரிகளான சுகத் மெண்டிஸ் மற்றும் நவரத்தின பிரேமரத்ன ஆகிய இருவருடன் சேர்ந்து, 2021 ஆகஸ்ட் மாதம் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் தாங்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்தனர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களை ஜோடித்ததாகக் கூறி மூவரும் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
ஆயுதக் கிடங்கு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டதாகவும், அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகவும் நீதிமன்றம் விசாரித்தது. 2013 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அன்று முகமது ஷியாம் கொலை தொடர்பான விசாரணையின் போது அப்போதைய பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் உதவியாளர்கள் அளித்த வாக்குமூலங்களைத் தொடர்ந்து ஆயுதக் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிபதிகள் மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மூன்று மனுக்களையும் தொடர்வதற்கு அனுமதி வழங்கியதுடன், மே 14 ஆம் திகதி வாதத்திற்கு ஒத்திவைத்தது.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி சாந்த ஜயவர்தன, ஷெஹான் டி சில்வா மற்றும் ஹபீல் பாரிஸ் ஆகியோர் ஆஜராகினர். முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் நெவில் டி சில்வா சார்பில் சட்டத்தரணி சஞ்சீவ விஜேவிக்கிரம ஆஜராகியிருந்ததுடன், சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி சஜித் பண்டார ஆஜரானார். நன்றி வீரகேசரி
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்!
08 Oct, 2025 | 11:35 AM
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் (8) அரியாலை கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்துக்கு வரவேண்டும் என்று கூறி, வீதியை வழிமறித்து நின்றனர். இதனால் அவ்வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
பின்னர், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட
இடத்துக்குச் சென்றார். இதன்போது தமது பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள், “இந்தப் பகுதியில் இனிமேல் குப்பை கொட்டுவதற்காக குப்பை கொட்டும் வாகனங்கள் வந்தால் அந்த வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர், இந்தப் பிரச்சினை தொடர்பான கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் மகஜர் ஒன்றினை மக்கள் தவிசாளரிடம் கையளித்தனர்.
மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர், போராட்டக்காரர்கள் பேரணியாக ஆளுநர் செயலகத்துக்குச் சென்று, அங்கும் மகஜர் ஒன்றை வழங்கினர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், உலகமெங்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வருகின்றனர். அரியாலையூர் மக்களாகிய நாமும் நமது ஊரைப் பாதுகாப்பதற்காக நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம், தூய காற்று போன்ற இயற்கையின் கொடைகளை காப்பாற்றுவதற்காக போராடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நல்லூர் பிரதேச சபை, எமது ஊர் மக்களுடன் எந்த வகையிலும் கலந்து பேசாமல், சூழலை மாசுபடுத்தக்கூடிய குப்பைகளை எமது ஊருக்குக் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது எமது ஊர் மக்களால் மட்டுமல்ல, இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.
இயற்கைப் பசளை உற்பத்தி என்ற பெயரில் ஏமாற்றுத்
தளமாக எந்த வகையிலும் வகைப்படுத்தப்படாத - மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி, எமது ஊரை குப்பைமேடாக மாற்றும் முயற்சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிடவேண்டும்.
எமது இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறையான எமக்கு மட்டுமானதல்ல, எதிர்கால தலைமுறைக்கும் சொந்தமானவையாகும்.
எமது ஊரின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உண்டு. இதனால் மக்களுக்கும் இயற்கைக்கும் விரோதமான குப்பை மேட்டுத் திட்டத்தைக் கண்டித்தும் அதனைக் கைவிடக் கோரியும் மக்கள் அணிதிரள வேண்டும் எனத் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை
08 Oct, 2025 | 11:28 AM
வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீற் பாவனையை தடை எனவும், பதிலீடாக வாழை இலையைப் பயன்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது.
அக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க வைப்பது ஆகியவற்றை பின்பற்றலாம் என்றும் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment