பண்பாடு கலாசாரம் காத்திடுதல் முக்கியமே
பண்பாடு கலாசாரம் கண்போன் றிருக்கிறது
கண்ணின்றி வாழ்தல் எண்ணவே முடியாது
கண்ணான கலாசாரம் காத்திடுவோம் வாருங்கள்
காட்டிலே திரிந்தோம் நாட்டை உருவாக்கினோம்
கடவுளை உணர்ந்தோம் கருணையை அறிந்தோம்
மனிதனாய் வாழ வழிகளும் கண்டோம்
இலக்கியத்தை இலக்கணத்தை எம்முடமை ஆக்கினோம்
பண்பாடு கலாசாரம் பலவாறு காத்தோம்
பாருலகில் பக்குவமாய் வாழவும் செய்தோம்
நாகரிக எல்லைக்குள் நச்சுக்குள் புகுந்திடவே
ஆன்மீகம் அறமெல்லாம் அழுதுமே நிற்கிறது
ஆளுமைகள் பலபேரும் அகவொழுக்கம் குன்றுகிறார்
கல்வியொடு மருத்துவம் காசுக்குள் அமிழ்கிறது
கண்ணியமும் கெளரவும் கலங்கியே அழுகிறது
மூத்தோரை யாவரும் மூலையிலே ஒதுக்கிட்டார்
அவருரைத்த அறிவுரைகள் ஆழவே புதைத்திட்டார்
பாட்டியெனும் பக்குவத்தை பாராமல் ஒதுக்கிட்டார்
பகட்டான வாழ்வையே பண்பாடாய் ஆக்கிட்டார்
மதங்கண்ட மனிதன் மனிதத்தை மறந்திட்டான்
இதமான வார்த்தைகளை ஈயவே தயங்குகிறான்
சூழலை மறக்கின்றான் சூதினை அணைக்கின்றான்
கலாசாரம் பண்பாடு கதிகலங்கி நிற்கிறது
No comments:
Post a Comment