உலகச் செய்திகள்

காசா நகரை முழுமையாக இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் திட்டம்- இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி 

காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் போட்டது கனடா -இஸ்ரேலிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டு

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் - ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

சிங்கப்பூர் தமிழ் மக்களின் 200 ஆண்டு கால வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டது

இந்தியாவுக்கு வர்த்தக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு



காசா நகரை முழுமையாக இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் திட்டம்- இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி 

Published By: Rajeeban

08 Aug, 2025 | 08:21 AM

காசா நகரை இஸ்ரேலிய இராணுவத்தினரின முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவருவதற்கான பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் காசா நகரத்தை கைப்பற்றுவதற்கான திட்டம் குறித்தும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஐந்து அம்ச திட்டம் குறித்தும் தெரிவித்துள்ளுத

காசா நகரை கைப்பற்றுவதற்கான திட்டத்தினை இஸ்ரேலிய இராணுவத்தினர் முன்னெடுப்பார்கள் அதேவேளை மோதல் இடம்பெறும் பகுதிக்கு வெளியே உள்ள மக்களிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஐந்து கொள்கைகளை இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் முன்வைத்துள்ளது.

ஹமாசிடமிருந்து ஆயுதங்களை களைதல்,உயிருடன் உள்ள உயிரிழந்த அனைத்து பணயக்கைதிகளையும் மீட்டுக்கொண்டுவருதல், காசா பள்ளத்தாக்கின் பாதுகாப்பை இஸ்ரேலிய படையினர் பொறுப்பேற்றல்,பாலஸ்தீன அதிகாரசபை அல்லது ஹமாஸ் இல்லாத மாற்று பாலஸ்தீன அரசாங்கத்தை அமைத்தல் ஆகியவை குறித்து இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 




காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் போட்டது கனடா -இஸ்ரேலிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டு

05 Aug, 2025 | 10:47 AM

காசாவிற்குள் வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள கனடா இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது என குற்றம்சாட்டியுள்ளது.

சிசி - 130 ஜே ஹேர்குலிஸ் விமானத்தை பயன்படுத்தி கனடாவின் ஆயுதப்படையினர் காசாவுக்குள் மனிதாபிமான உதவி பொருட்களை போட்டனர் என தெரிவித்துள்ள கனடா அரசாங்கம் 21600 பவுண்ட் மனிதாபிமான உதவிகளை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கனடாவின் ஆயுதப்படையினர் தங்கள் விமானங்களை பயன்படுத்தி முதல்தடவையாக காசாவுக்குள் மனிதாபிமான பொருட்களை போட்டுள்ளனர் என கனடா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கனடா எகிப்து உட்பட ஆறுநாடுகள் 120 உணவுப்பொதிகளை காசாவிற்குள் வீசியுள்ளன என எகிப்து தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் மனிதாபிமான அமைப்புகளிற்கு சவாலை தோற்றுவித்துள்ளன என தெரிவித்துள்ள கனடா மனிதாபிமான உதவிகளை தடுப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் இதனை உடனடியாக கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.   நன்றி வீரகேசரி 




உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் - ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

05 Aug, 2025 | 04:16 PM

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் இன்று மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பால் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது.

இது குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில்


“தாராலி ஜஉத்தரகாசிஸ பகுதியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரும் இழப்புகள் குறித்த செய்தி மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. 

தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படைஇ மாவட்ட நிர்வாகக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. அனைவரின் பாதுகாப்புக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று கூறினார்.


இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் "ஹர்சிலுக்கு அருகிலுள்ள கீர் காட் பகுதியில் தாராலி கிராமத்தில் ஒரு பெரிய மண்சரிவு ஏற்பட்டது இதனால் குடியிருப்பு வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐபெக்ஸ் படையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர். சேதத்தின் அளவு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த இயற்கை பேரிடரின் போது மக்களுக்கு ஆதரவாக ராணுவம் உறுதியாக நிற்கும்" என்று தெரிவித்தது.

இந்த நிலையில் இடிபாடுகளுக்குள் சுமார் 10-12 பேர்


புதைந்திருக்கலாம் என்று கிராமவாசி ராஜேஷ் பன்வார் தெரிவித்தார். 20-25 ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.   நன்றி வீரகேசரி 





சிங்கப்பூர் தமிழ் மக்களின் 200 ஆண்டு கால வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டது

05 Aug, 2025 | 10:31 AM

காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் தேசிய நூலக சபை கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் சனிக்கிழமை (02) நடைபெற்ற விழாவில், 'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு ஜனாதிபதி  தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் தமிழர்க் கலைக் களஞ்சியம் எடுத்துரைக்கும் பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்டுவந்த சமூகச் சீர்திருத்தங்கள் குறித்த தகவல்களைத் தனது உரையில் சிங்கப்பூரின் ஜனாதிபதி  மேற்கோள் காட்டியுள்ளார்.

இவ்விழாவில் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் உரையாற்றுகையில்,

‘‘பண்பாட்டை பேணும் உறைவிடமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ வேண்டும். எந்த வகையிலான பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ளாத சமூக முன்னேற்றம் தொடர்ந்து நிலவ வேண்டியது மிகவும் அவசியம்.

பல துணை இனக் கலாச்சாரங்கள் உட்பட பண்பாடுகளைப் பாதுகாக்கக்கூடிய இடமாக நமது நாடு இருக்க வேண்டும். இதுவே உலகளாவிய இந்திய சமூகத்துக்கு மத்தியில் சிங்கப்பூர் தமிழர்களையும் சிங்கப்பூர் இந்தியர்களையும் தனித்துவமிக்கவர்களாகத் திகழச் செய்யும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக சபையும் இணைந்து உருவாக்கி உள்ள ‘சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியம்’ மின் நூல், சிங்கப்பூரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவான முதல் கலைக்களஞ்சியம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

இதன் அங்கமாக, தமிழ்ச் சமூகத்தின் கதைகள், வரலாற்றைத் தலைமுறை கடந்தும் கடத்தும் நோக்கில் ஏறத்தாழ 375 பகுதிகளில் பல்வேறு தகவல்களை விவரிக்கும் துல்லியமான பதிவுகள் தகுந்த ஆதாரத்துடனும் புகைப்படங்களுடனும் தேசிய நூலக சபையின் மின்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

கலைக்களஞ்சியத்தை இணையவெளியில் படிப்பதற்கான வழிமுறை, இருமொழிகளிலும் ஒருசேரப் படிக்க உதவும் தொழில்நுட்பம், வாழும் கலைக்களஞ்சியத்தில் புதிய தலைப்புகளை இணைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியம் தொகுப்பின் துணை ஆசிரியர்கள் அழகிய பாண்டியன், சிவானந்தம் நீலகண்டன் ஆகிய இருவரும் விளக்கியுள்ளனர்.

விழாவில் சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகியும் தொகுப்பின் ஆசிரியருமான அருண் மகிழ்நன் உரையாற்றுகையில்,

‘‘இந்த மின் நூல் மக்களைப் பற்றி மக்களால் உருவாக்கப்பட்ட தேர். இந்த அருஞ்செல்வம் உருப்பெற உதவி புரிந்தோருக்கு நன்றி. இதனை வாழும் களஞ்சியமாக நிலைக்கச் செய்ய, சமூகத்தைத் தொடர்ந்து ஈடுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய நூலக சபையின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் துணை இயக்குநருமான அழகிய பாண்டியன் மேலும் கூறும்போது, ‘‘இந்தக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான மூன்று ஆண்டுப் பயணம் சுவாரசியமானது. 

எதிர்காலச் சந்ததியினருக்கான ஒரு கருவூலத்தை உருவாக்குவதில் பங்காற்ற கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். தேசிய நூலக சபை இருக்கும் வரை சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியம் வாழும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

விழாவில் அதிபர் தர்மனின் மனைவி ஜேன் இத்தோகி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், பங்காளித்துவ அமைப்பினர், தொண்டூழியர்கள் உட்பட ஏறத்தாழ 600 பேர் கலந்துகொண்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 







இந்தியாவுக்கு வர்த்தக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு

Published By: Rajeeban

06 Aug, 2025 | 05:35 PM

இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் வர்த்தக அழுத்தத்தை சட்டப்பூர்வமானது என தாங்கள் கருதவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, தான் சந்திக்கும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்டும் நோக்கில் தன்னிடம் உள்ள கச்சா எண்ணெயை ரஷ்யா குறைந்த விலைக்கு விற்கிறது.

ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளிடம் கூடுதல் கச்சா எண்ணெயை வாங்கி வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும், உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான வரியை 25% ஆக உயர்த்திய  ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், "ரஷ்யா உடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க பல நாடுகளை அமெரிக்கா கட்டாயப்படுத்துகிறது என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். உண்மையில் அச்சுறுத்தல்களை அமெரிக்கா வழங்குகிறது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை என நாங்கள் கருதவில்லை. இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு தங்கள் வர்த்தக கூட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 


















No comments: