பாலஸ்தீனம் தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாடு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?

 Published By: Vishnu

05 Aug, 2025 | 02:43 AM

(ஸ்ரான்லி ஜொனி)

இஸ்ரேல் காசாவில் போர்நிறுத்தம் ஒன்றுக்கு இணக்கி, பெருமளவு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு அனுமதிக்காவிட்டால்,  இரு அரசுகள் விதிமுறையின் அடிப்படையில் நீண்டகால சமாதானம் நோக்கிச் செயற்படுவதில் உறுதிப்பாட்டை காண்பிக்காவிட்டால், எதிர்வரும் செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் தனது அரசாங்கம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்ராமெர் கடந்தவாரம் அறிவித்தார்.

மற்றைய நாடுகளின் அறிவிப்பு என்ன? 

செப்டெம்பரில் பாலஸ்தீனத்தின் அரசு அந்தஸ்தை (Statehood ) பாரிஸ்  அங்கீகரிக்கும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரகடனம் செய்த சில தினங்களில் ஸ்ராமெரின் அறிவிப்பு வந்தது. தங்களுக்கும் அதே நோக்கம் இருப்பதாக கனடாவும் போர்த்துக்கலும் கூட அறிவித்தன. 

காசாவில் 21 மாதகால போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,இஸ்ரேல் அதன் மிகப்பெரிய இராஜதந்திர நெருக்கடிகளில் ஒன்றுக்கு முகங்கொடுக்கிறது. இஸ்ரேலின் பாரம்பரியமான நேச அணிகளான மேற்குலகின் பல நாடுகள் பாலஸ்தீனத்தின் அரசு அந்தஸ்து தொடர்பில் அனுகூலமான நிலைப்பாடுகளை கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. 

அங்கீகாரப் போக்கின் முக்கியத்துவம் என்ன? 

ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கெனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துவிட்டன.  இதுவரை பலம் பொருந்திய மேற்கு நாடுகள் அவ்வாறான அங்கீகாரத்தை எதிர்த்து வந்தன. இஸ்ரேல் -- பாலஸ்தீன முரண்நிலைக்கு காணப்படக்கூடிய இறுதி இராஜதந்திர தீர்வின் ஒரு அங்கமாகவே அத்தகைய அங்கீகாரம் அமையவேண்டும் என்று அந்த நாடுகள் காரணமும் கூறின. ஆனால், அந்த நிலைப்பாடு தற்போது மாற்றமடையத் தொடங்கியிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஐந்து  நிரந்தர உறுப்பு நாடுகளில்   ரஷ்யாவும் சீனாவும் ஏற்கெனவே பாலஸ்தீனத்தை அங்கீகரித்துவிட்டன. பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் தற்போது அறிவித்திருப்பதன் பிரகாரம் செப்டெம்பரில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தால், இஸ்ரேலின் நெருங்கிய நேச அணியும் காப்பாளருமான அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் தனிமைப் படுத்தப்பட்டுவிடும். முன்னேறிய பொருளாதார நாடுகளின் ஜி - 7 குழுவின் உறுப்பினர்களாகவும் இருக்கும் பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தால், அது ஏனைய நாடுகள் மீது செல்வாக்கைச் செலுத்தி அவையும் அங்கீகரிக்கக் கூடும்.குறிப்பாக, இஸ்ரேல் -- பாலஸ்தீன பிரச்சினையில் பிரிட்டனுக்கு இருக்கின்ற  மையப் பாத்திரத்தை அடிப்டையாகக் கொண்டு நோக்கும்போது அதன் நகர்வு வரலாற்று ரீதியான கனதியைக் கொண்டிருக்கிறது. 1917 பல்ஃபோர் பிரகடனத்தில், பாலஸ்தீனத்தில் யூத தாயகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்ற சியோனிசவாதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலாவது பெரிய வல்லரசு பிரிட்டனேயாகும்.

பல்ஃபோர் பிரகடனம் என்றால் என்ன? 

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சரான சேர் ஆர்தர் பல்ஃபோர் 1917 நவம்பர் 2  ஆம் திகதி பிரகடனத்தை வெளியிட்டு அதை பிரிட்டிஷ் யூத சமூகத்தின் தலைவரும சியோனிசவாதியுமான வோல்டர் றொத்சைல்டுக்கு அனுப்பினார். முதலாவது  உலகப் போருக்கு மத்தியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் பல்ஃபோர் பின்வருமாறு குறிப்பிட்டார் ; 

" யூத மக்களுக்காக பாலஸ்தீனத்தில் தேசிய தாயகம் ஒன்று அமைக்கப்டுவதை மாட்சிமை தங்கிய மன்னரின் அரசாங்கம் அனுகூலமான முறையில் நோக்குவதுடன் அந்த குறாக்கோள் சாதிக்கப்படுவதற்கு வசதியாக அதனால் இயன்ற முயற்சிகளைச் செய்யும்."

ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் ஏற்கெனவே பாலஸ்தீனத்துக்கு புலம்பெயரத் தொடங்கி விட்டார்கள். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் முதலாவது உலகப் போரின் முடிவு வரை, பாலஸதீனம் ஒட்டோமன் சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது.  பல்ஃபோர் பிரகடனம் செய்யப்பட்ட நேரமளவில் பாலஸ்தீனத்தில் சுமார் 60 ஆயிரம் யூதர்கள் ( மொத்த சனத்தொகையில் 9 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ) இருந்தார்கள். ' யூதப் பிரச்சினைக்கு ' ஒப்பேறக்கூடிய ஒரே தீர்வு பாலஸ்தீனத்தில் தேசிய தாயகம் ஒன்றை அமைப்பதேயாகும் என்று சியோனிசத்   தலைவர்கள் வாதிட்டனர்.

போருக்கு பின்னர் பிரிட்டன் என்ன செய்தது? 

' பாலஸ்தீனத்தில்' யூத தாயகம் ஒன்றுக்கு ஆதரவு வழங்குவதற்கு பிரிட்டன் உறுதியளித்த அதேவேளை, ஒட்டோமன்களுக்கு எதிராக அரபுக்கள் கிளர்ச்சி செய்தால் அராபியர்களின் சுதந்திரத்துக்கும் ஆதரவளிப்பதாகவும் அது உறுதியளித்தது. ஆனால், பிரிட்டனும் பிரான்ஸும் போர் முடிவடைந்ததும் ஒட்டோமன் நிலப்பிராந்தியங்களை பிரிப்பதற்கு இரகசிய உடன்படிக்கை ஒன்றை  ( சைக்ஸ் -- பிக்கொற் உடன்படிக்கை ) ஏறகெனவே செய்திருந்தன.

போருக்கு பிறகு பிரிட்டன் நாடுகள் கழகத்தின் (League if Nations) ஆணையின் கீழ் பாலஸ்தீனத்தில் காலனித்துவ நிருவாகம் ஒன்றை நிறுவியது. அடுத்து வந்த தசாப்தங்களில் பாலஸ்தீனத்தை நோக்கிய யூதப் புலம்பெயர்வு தீவிரமடைந்தது. பாலஸ்தீனத்தில் இருந்த யூத சமூகம்,  தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்துறைகள் தொடக்கம் பரா இராணுவக் குழுக்கள் மற்றும் நிருவாகக் கட்டமைப்புக்கள் வரை தங்களது சொந்த நிறுவனங்களைக் கட்டியெழுப்பத் தொடங்கியது.  இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்த நேரமளவில் பாலஸ்தீனத்தில் சனத்தொகையின் 30  சதவீதத்தினராக யூதர்கள் அதிகரித்து விட்டனர். 1930 களினன இறுதிப்பகுதியில்,  நாடுகள் கழகத்தின் கீழான ஆணை நடைமுறைப்படுத்த முடியாதது என்ற முடிவுக்கு வந்த  பிரிட்டன் பாலஸ்தீனம் பிரிக்கப்படுவதை ஆதரித்தது. போருக்கு பிறகு பிரிட்டன் ( 1948 மே 15 காலாவதியாகவிருந்த ) ஆணையை முடிவுக்குக் கொண்டுவரும் அதன் நோக்கத்தை ஐக்கிய நாடுகளுக்கு அறிவித்தது. மே 14 சியோனிசத் தலைவர்கள் ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலிய அரசைப் பிரகடனம் செய்தனர். சில நிமிடங்களுக்குள்  அந்த அரசை அமெரிக்கா அங்கீகரித்தது. அந்த அரசுப் பிரகடனம் உடனடியாகவே முதலாவது அரபு - இஸ்ரேல் போரை மூளவைத்தது.

ஏன் இப்போது பிரிட்டன் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போகிறது? 

நெருக்கடியில் பிரிட்டன் வகித்த வரலாற்று ரீதியான பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது பல்ஃபோர் பிரகடனம் வெளியிடப்பட்டு 108 வருடங்களுக்கு பிறகு பாலஸ்தீன அரசக்கு பிரிட்டன் வழங்கக்கூடிய ஒரு அங்கீகாரம் மிகப்பெரிய அடையாள பூர்வமான முக்கியத்துவத்தை பெறுகிறது. அத்தகைய அங்கீகாரம் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு மீது உடனடியான தாக்கம் எதையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம் என்ற போதிலும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பிலான லண்டனின் கொள்கையில் ஒரு மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்பது தெளிவானது.

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதாக குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. காசா அழிவுகளினதும் பட்டினியில் வாடும் சிறுவர்களினதும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேலை நிபந்தனையற்ற முறையில் தொடர்ந்தும் ஆதரிப்பது மேற்கு நாடுகள் பலவற்றைப் பொறுத்தவரை நியாயப்படுத்த முடியாததாக மாறிவிட்டது.   நன்றி வீரகேசரி 

No comments: