நாளை நமதே - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

படத்தில் நடிப்பதற்கு உச்ச நடிகரை அணுகிய போது முதலில் அவர் மறுத்து விட்டார். இசையமைப்பதற்கு இசையமைப்பாளரை அணுகிய போது முதலில் அவரும் மறுத்து விட்டார். இயக்குவதற்கு டைரக்டரை முதலில் கேட்ட போது அவரும் ஆர்வம் காட்டவில்லை. இவ்வளவுக்கு பின்னரும் அதே நடிகர், மியூசிக் டைரக்டர், அதே இயக்குனர் பணியாற்ற படம் தயாராகி திரைக்கு வந்தது. அந்தப் படம் தான் நாளை நமதே. 


 ஹிந்தியில் வெளிவந்து அமோக வெற்றியை பெற்ற படம் யாதோங்கி

பாரத். இளம் நடிகர்களுடன் நடுத்தர வயதான தர்மேந்திராவும் நடித்த இப் படம் அப் படத்தின் படல்களுக்காகவும், இசைக்காகவும் நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்தது. இந்த யாதோங்கி பாரத்தை தமிழில் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தயாரிப்பாளர் கே. எஸ். ஆர் மூர்த்திக்கு எப்படியோ ஏற்பட்டு விட்டது. அது மட்டுமின்றி படத்தை எம் ஜி ஆர் நடிப்பில் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு தோன்றி விட்டது. யாதோங்கி பாரத் சென்னையில் நூறு நாட்கள் அல்ல, நூறு வாரங்கள் ஓடித் தள்ளியது. இவ்வாறு தமிழகத்தில் வெற்றி பெறும் ஹிந்தி படங்களை மீண்டும் தமிழில் எடுக்க முன் வருவோர் குறைவு. ஆனாலும் மூர்த்திக்கு ஓர் ஆசை . ஹிந்தி படத்துக்கு கிடைத்த வெற்றியை பார்த்து மிரண்டு போன எம் ஜி ஆர் தமிழில் தான் நடித்தால் சரியாக வருமா என்று ஆரம்பத்தில் தயங்கினார். ஆனாலும் மூர்த்தி அவரை சமாதான படுத்தி சம்மதிக்கவும் வைத்து விட்டார். 



மலையாளத்தில் படங்களை டைரக்ட் பண்ணி விருதுகளை பெற்றவர் கே. எஸ் சேதுமாதவன். இவருடைய ஓடையில் நின்னு, பனிதீர்த்தவீடு, மறுபக்கம், நம்மவர் போன்ற படங்கள் இந்திய தேசிய விருதுகளை சுவீகரித்து கொண்டன.ஆரம்ப காலத்தில் தமிழில் இவர் இயக்கிய பால்மனம், கல்யாண ஊர்வலம் இரண்டு படங்களும் சரிவர போகாததால் தமிழ் சினிமாவை விட்டு இவர் விலகியே இருந்தார். இந்த சேதுமாதவனின் சகோதரர்தான் மூர்த்தி. ஆனாலும் படத்தை இயக்க சேதுமாதவனுக்கு முதலில் இஷ்டம் இல்லை. நாளை நமதே தயாரிப்பு பற்றி எம் ஜி ஆரிடம் பேசப் போன மூர்த்தி தன்னுடன் சேதுமாதவனையும் அழைத்து சென்றார். சென்ற இடத்தில் படத்தை சேதுமாதவனா இயக்கப் போகிறார் என்று எம் ஜி ஆர் கேட்க மூர்த்தி ஆம் என்று சொல்லி விட்டார். இதன் காரணமாக சேதுமாதவன் எம் ஜி ஆர் படத்துக்கு டைரக்டரானார். 

 அதே போல் உலகம் சுற்றும் வாலிபனுக்கு இசையமைக்கும் போது

எம் ஜி ஆர் கொடுத்த இம்சை காரணமாக நாளை நமதே படத்துக்கு மியூசிக் போட எம் எஸ் விஸ்வநாதன் மறுத்தார். ஆனாலும் எம் ஜி ஆரிடம் அவர் ஜம்பம் பலிக்கவில்லை. 

 படத்தில் இரண்டு எம் ஜி ஆர். முரட்டுத்தனம் , அடிதடி, இரக்க குணத்துக்கு ஒரு எம் ஜி ஆர் என்றால் காதல், சரசம், சல்லாபத்துக்கு இன்னுமொரு எம் ஜி ஆர். இவர்கள் இவர்களுக்கும் நடுவே கிளப்பில் ஆடிப் பாடி சகோதரர்களை தேட சந்திரமோகன். இரண்டு எம் ஜி ஆர் களில் மனதை கவர்பவர் முரடனாக வரும் சங்கர்தான். பாசம் படத்துக்கு பின் இதில் தான் கடுமையான முகத்தைக் கொண்ட மேக் அப்பில் எம் ஜி ஆர் நடித்திருந்தார். சிரிப்பில்லாத முகம், அளவான வார்த்தைகள், உணர்ச்சியை வெளிப்படுத்தாத பார்வை. இவருக்கு ஜோடியும் இல்லை, பாடலும் இல்லை. அதற்கு நேர் எதிர் விஜய்யாக வரும் எம் ஜி ஆர். ஒரே ஜாலி, துள்ளல், ரொமான்ஸ்தான். அதிலும் லதாவுடனான சில காதல் காட்சிகள் சென்சார் கண்களில் மண்ணைத் தூவி விடுகின்றன. அவருக்கு ஈடு கொடுத்து, இளமை விருந்தளிக்கிறார் லதா. 



முரட்டு எம் ஜி ஆர் பேசாத இடங்களில் எல்லாம் பேசி சிரிப்பூட்டுகிறார் நாகேஷ். வெண்ணிற ஆடையில் அறிமுகமான நிர்மலா இதில் கருப்பு சேலை அணிந்து சோகமாக நடமாடுகிறார். இரண்டு வித சைஸ்களில் சப்பாத்து அணிந்து மிரட்டும் நம்பியார் இறுதி காட்சியில் மிரளுவது ஜோர். இவர்களுடன் வி எஸ் ராகவன், மாலி, ராஜஸ்ரீ, கே. கண்ணன் , வி.கோபாலகிருஷ்ணன், எஸ் .வி .ராமதாஸ், என்று ஒரு செட் நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். 



இது போதாதென எம் ஜி ஆரின் அண்ணனான எம் . ஜி. சக்ரபாணியும் சில காட்சிகளில் தோன்றினார். ஒரே கால கட்டத்தில் திரையுலகிற்கு அறிமுகமான அண்ணனும், தம்பியும் பல படங்களில் சேர்ந்து நடித்து , இந்தப் படமே சக்ரபாணியின் கடைசிப் படமானது. 


இப் படத்துக்கு எல்லாப் பாடல்களையும் வாலி இயற்றினார். அவரின்

பாடல்களாக அன்பு மலர்களே, நான் ஒரு மேடை பாடகன், நீல நயனங்களில், என்னை விட்டால் யாருமில்லை, காதல் என்பது காவியமானால் பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ரசிகர்களை சொக்கி இழுத்தன. 

 படத்தில் மற்றும்மொரு ஹைலைட் லவ் இஸ் எ கேம் பாடலும் அதன் நடனமுமாகும். கட்டுடல் கொண்ட ஆலம் இப் பாடலில் கவர்ச்சியாக ஆடி ரசிகர்களை கிறங்கடித்தார். 

 சலீம் ஜாவேத் எழுதிய கதைக்கு வசனம் எழுதியவர் வியட்நாம் வீடு சுந்தரம். படத்தை அனுபவஸ்தரான பி எல் ராய் ஒளிப்பதிவு செய்தார். வண்ணப்பட காட்சிகள் ரம்மியமாக இருந்தன. 

 ஹிந்திப் படத்தின் தழுவல் என்பதால் சேதுராமனின் டைரக்க்ஷனில் குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை . ஆனால் படப்பிடிப்பின் ஆரம்பத்தில் அவர் செய்த சம்பவம் எம் ஜி ஆரை ஆடிப் போக வைத்தது. முதல் நாள் படப்பிடிப்பு காலை ஒன்பது மணிக்கு தொடங்குவதாக இருந்த போதும் எம் ஜி ஆர் பத்தே முக்கால் மணிக்குத்தான் வந்தார். இரண்டாம் நாள் ஷுட்டிங்கிட்ற்கு எம் ஜி ஆர் தாமதமாக வந்த போது எல்லோர் முன்னிலையிலும் எம் ஜி ஆரிடம் நாளை எத்தனை மணிக்கு வருவீர்கள் , பத்தரை மணிக்கென்றால் நான் படப்பிடிப்பை பத்தரைக்கே வைத்து விடுகிறேன், ஒன்றரை மணித்தியாலம் எல்லோருக்கும் வீணாகுகிறது என்று சேதுமாதவன் சொல்லி விட்டார். அடுத்த நாள் முதல் படப்பிடிப்புக்கு ஒன்பது மணிக்கு முன்னமே எம் ஜி ஆர் ஆஜராகி விட்டார். அந்த வகையில் சேதுராமன் முத்திரை பதித்து விட்டார்! 

 படம் தமிழகத்தில் ஓடியதை விட இலங்கையில் நீண்ட காலம் ஓடி வெள்ளிவிழா கண்டது.

No comments: