ஆசைமுகம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் இரட்டை வேடங்களில் நடித்து ஏராளமானப் படங்கள்


வெளிவந்துள்ளன. ஆனால் அவர் மூன்று வேடங்களில் நடித்தப் படம் ஒன்றும் இருக்கிறது. அதுதான் ஆசைமுகம். எம் ஜி ஆரின் ஆசைமுகம் என்று சொல்லும் வண்ணம் படத்துக்கு இந்தப் பெயரை வைத்தவர் வசனகர்த்தா அரூர்தாஸ் . இந்த ஆசைமுகத்தில் எம் ஜி ஆர் மூன்று முகங்களை காட்டி நடித்திருந்தார்.

 

பெரிய நிறுவனங்களான தேவர் பிலிம்ஸ், விஜயா காம்பைன்ஸ் , ஏவி எம், போன்ற பேனர்களில் படங்களில் நடிக்கும் சமயம் அவ்வப்போது சிறிய, புதிய தயாரிப்பாளர்களின் படங்களிலும் நடித்துக் கொடுப்பது எம் ஜி ஆருக்கு வாடிக்கை. அந்த விதத்தில் புதிய தயாரிப்பாளரான பி .எல் . மோகன்ராம் தயாரித்த இந்த படத்திலும் நடிக்க எம் ஜி ஆர் ஒப்புக்கொண்டார். தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோயினாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் எம் ஆர் சந்தானலஷ்மி. எம் கே தியாகராஜ பகவதருடன் இவர் அமராவதியாக நடித்த அம்பிகாபதி படம் பெரும் வெற்றி கண்டது. இவரின் மகளை திருமணம் செய்திருந்த மோகன்ராம் , இயக்குனர் பி. புல்லையா , ஏ காசிலிங்கம் இருவரிடமும் உதவி டைரக்டராக பணிபுரிந்து விட்டு சொந்தப் படம் எடுக்கும் ஆசையில் எம் ஜி ஆரை அணுகினார். ஏற்கனவே எம் ஜி ஆருக்கு பரிச்சியமானவர் என்பதால் எம் ஜி ஆரும் இசைந்தார்.

தன் கைக்கு அடக்கமான தயாரிப்பாளர் என்றவுடன் எம் ஜி ஆர்

தனக்கு வேண்டிய விதத்தில் சில ஆலோசனைகளை முன் வைத்தார். படத்தை ப . நீலகண்டன் இயக்க வேண்டும், ஆரூர்தாஸ் வசனம் எழுத வேண்டும் , தனக்கு வேண்டிய எஸ் எம் சுப்பையா நாயுடு இசையமைக்க வேண்டும் , கதாநாயகி சரோஜாதேவி என்று எம் ஜி ஆர் சொன்னதில் எஸ் எம் எஸ் இசையமைப்பதையும், சரோஜாதேவி ஹீரோயினாக நடிப்பதையும் மோகன்ராம் ஏற்றுக் கொண்டார். ஆனால் தன் குரு புல்லையாவை டைரக்ட் பண்ணவும் , வசனங்களை துறையூர் மூர்த்தி எழுதவும் ஏற்கனவே பேசி விட்டேன் என்று அவர் சொல்லவும் எம் ஜி ஆர் அரை மனதோடு அதற்கு உடன் பட்டார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கி சில தினங்களில் வசனகர்த்தா துறையூர் மூர்த்திக்கும் எம் ஜி ஆருக்கும் இடையில் தகராறு ஏற்பட , படத்தில் இருந்து மூர்த்தி ஒதுங்கி கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆரூர்தாஸ் வசனகர்த்தாவாக அமர்த்தப்பட்டார்.


செல்வந்தர் சிவசங்கரனின் மகன் மனோகர் பூந்தோட்டத்தில் செல்வியை சந்திக்கிறான். கண்டதும் காதல் மலர்கிறது. திருமணத்துக்கு நாளும் குறிக்கப் படுகிறது. ஆனால் கல்யாணத் தரகர் ஒருவரின் சதியால் திருமணம் தடைப் படுகிறது. இதற்கிடையில் மனோகரும், செல்வியும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்ய திட்டமிடுகிறார்கள். இதே காலகட்டத்தில் வரதன் என்ற நயவஞ்சகன் தன்னுடைய நண்பன் வஜ்ரவேல் என்பவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி என்ற முகத்துக்கான அறுவை சிகிச்சை ஒன்றை செய்து மனோகரின் முகத்துக்கு அவனை மாற்றுகிறான். அவனும் சிவசங்கரனின் வீட்டில் மனோகர் மாதிரி குடியேறுகிறான். இந்த ஆள் மாறாட்டம் தெரியாது செல்வியும் அவனை மனோகர் என்று நம்பி பழகுகிறாள். உண்மையான மனோகர் தன்னுடைய பர்மா தாத்தாவின் வேடத்தில் தன் வீட்டுக்கே வந்து போலி மனோகர் செல்வியை நெருங்கா வண்ணம் பாதுகாப்பு கொடுக்கிறான். மனோகர் எவ்வாறு தன்னை நிரூபித்து போலியை அடையாளப்படுத்தினான் என்பதே மீதிக் கதை.
 
தமிழுக்கு புதிதான பிளாஸ்டிக் சர்ஜெரி என்ற கருவை கொண்டு

படத்தின் கதையை டி .என். பாலு எழுதியிருந்தார். கதை கோர்வையாக அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆரூர்தாஸ், மூர்த்தி எழுதிய வசனங்களும் துணை நின்றன. யார் எழுதிய வசனம் எது என்று தெரியா விட்டாலும் இருவரையும் பாராட்டலாம்.
 
மூன்று வேடங்களில் வரும் எம் ஜி ஆரின் பர்மா தாத்தா வேடம் நன்றாக இருந்தது. வளைந்து வளைந்து நடப்பதும், வக்கணையாக பேசுவதிலும் கவருகிறார் அவர். வில்லன் வேடத்தை அவர் முழு மனதோடு செய்ததாகத் தெரியவில்லை. சரோஜாதேவி மூன்று எம் ஜி ஆருக்கு ஈடு கொடுக்கிறார். நடிப்பிலும் திறமையை காட்டுகிறார். இரண்டாவது ஹீரோயினாக வரும் கீதஞ்சலிக்கு கிடைத்த வாய்ப்பை அவர் வீணாக்கவில்லை. நம்பியார், ராமதாஸ் என்று இரண்டு வில்லன்கள். இவர்களுடன் கே டி சந்தானம், லஷ்மிப்ரபா, கே ஆர் ராம்சிங், சி கே சரஸ்வதி, கொட்டப்புளி ஜெயராமன், கரிக்கோல் ராஜு , கே கே சௌந்தர் ஆகியோரும் நடித்திருந்தனர்.


இவர்கள் எல்லோரும் இருந்தாலும் இன்னும் ஒருவர் படம் முழுவதும் வந்து கலகலப்பை தருகிறார். நாகேஷ்தான் அவர்! மூன்று எம் ஜி ஆர் என்றால் நான்காவது பாத்திரம் நாகேஷ் தான். முழுப் படமும் வந்து ஜமாய்க்கிறார். 

படத்துக்கு இரண்டு வசனகர்த்தா என்றால் , ஒளிப்பதிவாளர்கள் மூன்று பேர். பி எல் ராய். சுப்பராவ், சுந்தரபாபு என்று மூன்று காமெராமேன்கள் . ஆளுக்கு ஒரு எம் ஜி ஆரை படமாக்கினார்களோ என்னவோ. அதே போல் ஜம்புலிங்கம், கிருஷ்ணன், தாஸ் என்று முன்று படத்தொகுப்பாளர்கள். ஸ்டண்ட் மாஸ்டர் ஆர் என் நம்பியார் அமைத்த இரண்டு எம் ஜி ஆரும் போடும் சண்டைக் காட்சி நன்றாக இருந்தது.
 
பாடல்களை வாலி எழுத எஸ் எம் சுப்பையா நாயுடு இசையமைத்தார். எத்தனைப் பெரிய மனிதருக்கு இத்தனை சிறிய மனம் இருக்கு, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல, என்னை காதலித்தால் மட்டும் போதுமா பாடல்கள் எடுபட்டன.

படத்தின் கதை சற்று புதுமை என்ற போதும் எம் ஜி ஆருக்கு எம் ஜி ஆர் வில்லன் என்பதை ரசிகர்கள் ரசிக்கவில்லை. அது மட்டுமன்றி சரோஜாதேவியை எம் ஜி ஆர் பலாத்காரம் செய்ய முயலும் காட்சியும் ரசிகர்களுக்கு அலர்ஜியாக இருந்தது.
 
பி. புல்லையாவின் இயக்கம் ஓகே என்ற போதும் வேறு எம் ஜி ஆர் படங்களை அவர் பிறகு இயக்கவில்லை. அதே போல் இப் படத்துக்கு பிறகு மோகன்ராமும் எம் ஜி ஆர் நடிப்பில் படம் எதுவும் தயாரிக்கவில்லை. ஜெய்சங்கரின் நிரந்தர தயாரிப்பாளராகி விட்டார் அவர். ஆனாலும் மோகன்ராமுக்கு இலாபம் தந்த படமாகவே எம் ஜி ஆரின் ஆசைமுகம் திகழ்ந்தது!

No comments: