இலங்கைச் செய்திகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் யாழ். நீதிமன்ற நீதவான்! 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்!

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

வரவு - செலவுத் திட்ட உரையில் மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டமை மகிழ்ச்சி - ராதாகிருஷ்ணன்

கொள்ளையிடப்பட்ட பணத்தினை வெளிக்கொண்டுவர வேண்டும் - சாணக்கியன்

தமிழகத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது சிவகங்கை கப்பல் !  


யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் யாழ். நீதிமன்ற நீதவான்!  

20 Feb, 2025 | 04:21 PM
image

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் (20) பார்வையிட்டார்.

இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இந்த பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நன்றி  வீரகேசரி 








காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்!   

20 Feb, 2025 | 01:30 PM
image

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் (20) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் இருந்து ஏ9 வீதி வழியாக டிப்போ சந்தி வரை சென்றது.

 இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

நன்றி வீரகேசரி 




காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!   

Published By: Digital Desk 7

18 Feb, 2025 | 09:08 AM
image

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும். இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.



 நன்றி வீரகேசரி 







வரவு - செலவுத் திட்ட உரையில் மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டமை மகிழ்ச்சி - ராதாகிருஷ்ணன்  

7 Feb, 2025 | 09:03 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன. கடந்த காலங்களிலும் இவ்வாறு பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.இருப்பினும் ஏதும் நடைமுறையில் சாத்தியமடையவில்லை. வரவு செலவுத் திட்ட உரையில் மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டமை மகிழ்ச்சிக்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற அமர்வில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தார்.

வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கு பரிந்துரைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறு பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் அதிகாரபூர்வமாக தீர்மானங்களை அறிவித்தார்.இருப்பினும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.ஆகவே பரிந்துரைகள் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டங்களே மீண்டும் சொல்லப்படுகிறது. இது விசனத்துக்குரியது. பெருந்தோட்ட பகுதிகளில் வீடமைப்பு உட்கட்டமைப்புக்கு 4 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. பெருந்தோட்டத்துக்கு தனி வீடா, மாடி வீடா என்பது குறிப்பிடப்படவில்லை.

பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் வரவு செலவுத் திட்டத்தில் விரிவாக குறிப்பிடப்படாமை வருத்தத்துக்குரியது.இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தில் மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்றார்   நன்றி வீரகேசரி 








கொள்ளையிடப்பட்ட பணத்தினை வெளிக்கொண்டுவர வேண்டும் - சாணக்கியன்  

Published By: Digital Desk 7

17 Feb, 2025 | 09:34 PM
image

பட்டியல்வெளியிடுவதை விடுத்து மக்கள் எதிர்பார்க்கும் கொள்ளையிடப்பட்ட பணத்தினை வெளிக்கொண்டுவரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 18 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழக தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நடைபெற்றது.

பெரியகல்லாறு கலாசார  மண்டபத்தில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,ஆலயங்களின் வண்ணக்கர்மார்கள்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது கழக ரீதியில் சாதனைகளை நிலைநாட்டிய விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர் தரத்திற்கு தோற்றி பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் மற்றும் கிராமத்தில் பல்வேறு துறைகளில் சாதனைபடைத்த சாதனையாளர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் கலை நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

அனைவருக்கும் தெரியும் தற்போது புதிதாக ஒரு அரசாங்கம் வந்திருக்கின்றது. நாங்கள் வாகனம் ஓடுவதற்கு முன்னர் வாகனம் பழகும்போது எல்போர்ட் போட்டு கொண்டு தான் ஓடுவது வழக்கம் ஆனால் இந்த அரசாங்கமும் எல்போட் போடாமலே இப்போது பழகிக் கொண்டிருக்கின்றார்கள். 21 மாவட்டங்களிலே இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

எத்தனையோ நம்பிக்கைகளையும், வாக்குறுதிகளையும், அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள். பெரியநீலாவணைப் பிரதேசத்திலே புதிதாக ஒரு மதுபானசாலை அமைய பெற்றுள்ளது. அதனை பார்வையிடுவதற்காகவும் நாம் சென்றிருந்தோம். மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கும் பொழுது பல விடயங்களை மக்களுக்கு செய்யும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து இருந்தார்கள்.

களவு எடுத்து பணத்தை கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனாலும் எந்த ஒரு விடயத்தையும் இந்த எல்போர்ட் அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை. எமது பிரதேசங்களில் இருக்கும் சிறிய பிரச்சனைகளைகூட அரசாங்க தீர்த்து வைக்கவில்லை. அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடைபெறுகின்றன, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன, ஆனால் நடைமுறையில் எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. இதே விடயம்தான் புதிய அரசாங்கத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை கௌரவிக்கும் செயற்பாடானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஏனெனில் எமது பிள்ளைகள் கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கினால் மாத்திரம்தான் எமது பிரதேசங்களை நாங்கள் மீண்டும் கட்டி எழுப்ப முடியும்.

ஒரு காலத்திலேயே இலங்கையிலே இருக்கின்ற அரச திணைக்களங்களிலே தமிழர்கள்தான் அதிகளவு பதவிகளை வைகித்திருந்தார்கள். இந்த நிலையில் கல்வியில் எமது மாணவர்களை ஊக்கப்படுத்தினால்தான் எதிர்காலத்திலே மாணவர்கள் சிறந்த நிலையை அடைந்து கொள்வார்கள் அப்போது எமது கிராமங்களும் அபிவிருத்தி அடைந்து கொண்டு செல்லும் என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி 






தமிழகத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது சிவகங்கை கப்பல் !  

Published By: Digital Desk 7

22 Feb, 2025 | 02:16 PM
image

நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இன்று சனிக்கிழமை (22) காலை  இலங்கை காங்கேசன்துறையை , சிவகங்கை கப்பல் வந்தடைந்தது.

இவ்வாறு தமிழகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலானது இன்று மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா - இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று துவங்கும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது. 

3, மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் ஆரம்பித்ததால், இந்திய-இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த கப்பலானது இன்று மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அத்துடன் இந்த கப்பல் சேவையானது செவ்வாய் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களும் இடம்பெறும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

நன்றி வீரகேசரி 



No comments: