ஆனந்தி அக்கா ஒரு சமயம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியபோது,
சிங்கள அரசோடு ஒத்தோடு வாழும் தமிழ் அரசியல்வாதி கிண்டலடித்தார்
இப்படி,
“அவர் அதை லண்டனில் இருந்து தானே சொல்கிறார்”
என்று.
ஆனால் நாம் எங்கு வாழ்ந்தாலும், ஊடகத் துறையில் இயங்கினாலும் நம் இன, மொழி உணர்வோடு இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஆனந்தி அக்கா.
தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை இருமுறை பேட்டி காணும் பேறு பெற்றவர்.
1970 களில் பகுதி லண்டன் பிபிசியின் பகுதி நேர தயாரிப்பாளராக பணி புரியத் தொடங்கிய ஆனந்தி 80 களில் முழு நேரத் தயாரிப்பாளரானர். இவரது பல தொடர்கள், முக்கிய நபர்களுடனான பேட்டிகள் போன்றவை தமிழோசை நேயர்களிடையே பிரபலம்
இலங்கை வானொலிப் பாரம்பரியத்தோடு தன் ஊடக வாழ்வைத் தொடங்கியவர். இலங்கை வானொலி ஊடகத்தில் புகழ்பூத்த ஊடகர் சானாவின் வானொலி நாடகங்களில் நடித்தவர்.
தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு"
அப்பாசொல்லுறார்.
மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளைவிரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஆகாசவாணியையும்அரசியல் தத்தெடுத்துக் கொள்ள லண்டன் பிபிசியும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும்தான் எங்களுக்கு அப்போது வானொலிக்காந்திகள்.
பெரும்பாலான வீடுகளின் திண்ணையில் றேடியோவை இருத்தி வைத்துச் சுற்றும் சூழக் காதைத் தீட்டிக் கொண்டிருக்கும் ஊர்ப்பெருசுகள் லண்டன் தமிழோசையின் முக்கிய தலைப்புச் செய்திகளில் இருந்து அடுத்த அரைமணி நேரம் புகையிலை உணர்த்தலில் இருந்து, வெங்காயநடுகை வரை எல்லா கிராமிய சமாச்சாரங்களையும் ஓரமாகப் போட்டு விட்டு வானொலியின் சொல்லை வேதம் கற்கும் மாணவன் போன்ற சிரத்தையோடுகாது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழோசை ஒலிபரப்பு முடிந்ததும் செய்தியின்பின்னணியில் தோரணையில் ஆளாளுக்கு அரசியலை அலச ஆரம்பிப்பார்கள். இது எங்களூரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததொன்று.
சுந்தா சுந்தரலிங்கம் அங்கிள், சங்கரண்ணா, விமல் அண்ணா வரிசையில் ஆனந்தி அக்காவும் இப்போது ஊடகப் பரப்பில் வரலாறாகிப் போய் விட்டார்.
ஆனந்தி அக்காவின் ஊடக வரலாற்றை ஒரு சமயம் ஒலி ஆவணப்படுத்த அழைத்தேன்.
அச்சமயம் அவரின் கணவர் உடல் நலம் குன்றியிருந்ததால் அவரைப் பராமரிக்கும் பணியில் இருந்தவரைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. ஆனால் இவர் போன்ற ஆளுமைகள் தம் ஊடக வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கலாம் என இப்போது தோன்றுகின்றது.
ஆனந்தி அக்காவுக்கு அகவணக்கம் 

கானா பிரபா
23.02.2025
No comments:
Post a Comment