மங்களச் செம்பொருள் சிவனார் விரதம் !

 


  








மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ....... அவுஸ்திரேலியா



மார்கழி சென்றிட தைவந்து நிற்கும்
மங்கலம் பொங்கிட பொங்கலும் மலரும்
ஆதவன் ஆதாரம் ஆகியே இருப்பதால்
அனைவரும் போற்றி பொங்கியே மகிழ்வர்

பொங்கலை அடுத்துப் பூசம் மலரும்
கந்தக் கடவுள் சிந்தையில் நிறைவார்
ஆதவன் ஒளியே அரன்மைந்தன் ஒளியே
ஒளியே உயர்வாய் ஆகியே நிற்கும்

ஆதியும் அந்தமும் காணா ஒளியாய்
பேரொளி ஒன்று தோன்றியே நின்றது
அடிமுடி காணென அசரீரி ஒலித்தது
அயனும் மாலும் ஓடினார் தேடினார் 

ஆணவ நிலையில் தேடிய அவர்கள்
அடிமுடி காணா அலமந்தி நின்றனர்
தேவ தேவனாம் சிவனும் தோன்றி
தெளிவினைக் கொடுத்து தரிசனம் காட்டினர்

சிவனின் தரிசனம் தெளிவினைக் கொடுக்க
அயனும் மாலும் ஆணவம் அகன்றனர் 
ஆணவம் அகன்றிட அமைந்த நன்னாளே
மாநிலம் போற்றிடும் மகத்துவம் பெற்றது

மகத்துவம் பெற்ற மகா சிவராத்திரி 
மக்கள் மனத்தினைப் பக்குவம் ஆக்கிடும் 
பசித்திரு என்றும் தனித்திரு என்றும்
விழித்திரு என்றும் விளம்பிடும்  ராத்திரி 

சிவமே செம்பொருள் சிவமே இன்பம்
சிவமே அன்பு சிவமே கருணை 
அனைத்தும் ஆகியே இருப்பது சிவமே
அகத்தில் அமர்த்தினால் அது பேரின்பம் 

பற்பல கதைகள் பரவியே இருக்குது
நற்கரு உணர்த்தவே அக்கதை வந்தது
கதைகளை விமர்சனம் செய்வதை விட்டு 
கருவினைத் தேடுவார் கண்களைத் திறப்பார் 

சமயக் கதைகள் தத்துவம் பொதிந்தன
உள்ளே நுழைந்தால் உண்மை விளங்கும்
அறிவியல் இருக்கும் ஆன்மீகம் இருக்கும்
அகத்தில் அமர்த்தினால் வெளிச்சம் கிடைக்கும்

மாசி மாதம் மகத்தான மாதம்
மாபெரும் விரதம் அமைந்த நல்மாதம்
பூதலம் சக்தி பொலிந்திடு மாதம்
ஆதலால் விரதமாய் ஆக்கிய மாதம் 

ஈதர் என்பது இயக்கிடும் சக்தி
எங்கும் நிறைந்து இருக்கும் சக்தி
பூதல மாந்தர் உள்ளே நுழைந்தால்
ஆதாரம் ஆகிடும் அனைத்தும் சிறக்கும்

மாசி மாத சிவராத்திரி வேளை 
ஈதர் சக்தியின் ஈர்ப்பு பெருகிடும்
பெருகிடும் சக்தியை உடலுனுள் செலுத்திட
அமைந்த நல்லொழுங்கே விரதமாய் மலர்ந்தது

மெஞ்ஞானத் துடனே விஞ்ஞானம் இணையுது
அஞ்ஞானம் அகன்றிட மெஞ்ஞானம் விரியுது
அஞ்ஞானம் அகலவே ஆண்டவன் தெரிவான்
ஆண்டவன் தெரிந்திட ஆணவம் அழிந்திடும் 

சிவராத்திரி என்பது சிறப்புடை விரதம்
உயர்வுடை யாவும் அளித்திடும் விரதம் 
மனதைச் செம்மை ஆக்கிடும் விரதம்
மங்களச் செம்பொருள் சிவனார் விரதம் 



















1 comment:

Anonymous said...

இன்றைய நாளில் ஒரு தெய்வீகக் கவிதை
போற்றி ஓம்.நமசிவாய