இன்புற்றிங்கே வாழ்ந்திடுவோம்!


சங்கர சுப்பிரமணியன்-


புதியதோர் உலகம் செய்வோம்
நாமெல்லாம் ஒன்றென நிலைகாண
சாதியில்லா தமிழினம் காண்போம்

இணையற்ற உலகு படைப்போம்
இங்கு மதமெனும் மதம்பிடியாத
சகோதரத்துவம் இனி காண்போம்

கற்க கசடற கற்க என்று மட்டுமே
இங்கே இனி இல்லாமல் அதையே
எல்லோரும் கற்க வகை செய்வோம்

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
இறையை அங்குளான் இங்குளானென
எண்ணாமல் ஏழையின் சிரிப்பில்
அவனுள்ளானென நிலை செய்து
பசிக்கும் குழந்தைக்கு பால்வார்த்து
பயனடையச் செய்து மகிழ்வோம்

மாட்டுச் செல்வம் உள்ள நாடெல்லாம்
மகவெதுவும் பாலுக்காய் ஏங்கவில்லை
பாலில் இறைவன் குளிக்கும் நாட்டிலோ
பாலுக்கு தவிக்கும் மகவிங்கு ஏராளம்

நம் மனிதரோ இருக்கவும் இடமின்றி
படுக்கவும் பாயின்றி நடைபாதையில்
மழையிலும் குளிரிலும் சுருண்டிருக்க
கற்கட்டிடத்தில் கவலையின்றி உண்டு

ஊஞ்சலில் ஒய்யாரமாய் ஆடிவிளையாடி
ஆனந்தமாய் துயில்கொள்ளும் நிலையை
ஏழைமக்களுக்கும் நாம் இங்கு செய்து
இன்புற்றிங்கே நன்றாய் வாழ்ந்திடுவோம்!



No comments: