செக்கியூரிட்டி - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்


வவனியாவில் இருந்து மன்னார் போகும் பாதையின் தொடக்கத்தில் எமது வேலைத்தலம் இருந்தது. வேலைத்தலத்திற்கு முன்னே சில அரச அதிகாரிகளின் வசிப்பிடம். பின்னே புகையிரதப்பாதை. எதிரே மன்னார் வீதிக்கு அப்பால் ஒரு சிங்கள மகாவித்தியாலயம்.

வளவிற்குள் ஒரு டோசர், மூன்று பக் லோடர், ஒரு ஹெவி றக், ஒரு கல்லுடைக்கும் இயந்திரம், இரண்டு வைபிறேஷன் மிஷின்கள், ஏழெட்டு டிராக்டர்கள்.

வளவைச் சுற்றி முட்கம்பி வேலி நாற்புறமும் ஓடுகிறது. தற்காலிக வேலிதான். அதற்குள்ளால் மனிதர்களும் நாய்களும் நுழைந்து வெளியேறலாம். வாகனங்களை நகர்த்த முடியாது; களவெடுத்துக் கொண்டு போக முடியாது. வாகனங்களை முன்னேயுள்ள செக்கியூரிட்டி கேற்றிற்குள்ளால் பதிவு செய்துவிட்டுத்தான் கொண்டுபோக முடியும். ஒரு பொறியியலாளர், அவருக்கு உதவியாக ஒரு அட்மினிஸ்றேற்றிவ் அஷிஸ்டென்ற், இரண்டு செக்கியூரிட்டிகள் மற்றும் இருபத்தைந்து தொழிலாளர்கள். இங்கே ஒரு பெண் பிரஜைகளும் வேலை செய்யவில்லை.

ஆனந்தனும் ரானும் எமது நிரந்தர செக்கியூரிட்டிகள். தலமைப்பீடத்தால் நியமிக்கப்பட்டவர்கள். வேலைநாட்களில் மாலை நான்குமணியிலிருந்து மறுநாள் காலை எட்டுமணி வரையும் - சனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேரமும் வேலை செய்வார்கள்.

இந்த ஒற்றைப்பட எண்களால் எப்பவுமே பிரச்சினைதான். வாரத்தில் ஏழுநாட்கள் இருப்பதாலும், அந்த ஏழுநாட்களில் ஐந்துநாட்கள் வேலைநாட்கள் என்பதாலும் - எப்பவுமே ஆனந்தனுக்கும் ராமனுக்கும் றோஸ்ரர் போடுவதில் அஷிஸ்டென்ற் செல்வாவுக்குப் பிரச்சினைதான். பிள்ளையாருக்கும் முருகனுக்கும் கூட ஒரு மாம்பழத்தால்தானே பிரச்சினை வந்தது. இரண்டுமாம்பழங்கள் இருந்திருந்தால் பிரச்சினை வந்திருக்குமா? இதன் காரணமாக ஒவ்வொரு மாதக்கடைசியிலும், அவர்கள் இருவரும் வேலை பார்த்த நேரத்திற்கு அமைய றோஸ்ரர் அஜஸ்ட் பண்ணப்படும். சிலவேளைகளில் கடைசி இரண்டு நாட்களும் ஒருவரே வேலை செய்ய வேண்டி வரும். அதனடிப்படையில் நேற்றும் இன்றும் ஆனந்தனுக்கு முறை. இதை அவர்கள் இருவருக்குமே ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இருப்பினும் ராமன் இன்று தன்னுடைய வேலைநாள் என்று சொல்லிக் கொண்டு வந்து விட்டான். எப்படிச் சொன்னாலும் அவன் புரிந்து கொள்வதாக இல்லை. தனக்கு மாற்றித் தரும்படி கெஞ்சிக் கொண்டு நிற்கின்றான். மாற்றிக் கொடுப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் எல்லாக் கணக்கு வழக்குகளும் பிழைத்து விடும். நாலுமணியானதும் ஆனந்தன் வேலையைப் பாரமெடுத்தான். அதன் பிறகுதான் ராமனுக்கு விசர் பிடித்தது. அங்கும் இங்கும் ஓடித் திரிந்தான். பின்னர் ஆனந்தனுடன் செக்கியூரிட்டி அறைக்குள் போய் இருந்து கொண்டான். அங்கிருந்தபடியே என்னை நோக்கி அக்கினிப்பார்வையை வீசி எறிந்தான்.

"நாளைக்கு நான் வரமாட்டேன் சேர். எனக்கொரு முக்கியமான வேலை இருக்கு" என்றொரு அஸ்திரத்தைத் தூக்கிப் போட்டான். அந்த அஸ்திரத்தை ஆனந்தன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவனுக்கு தொடர்ந்து மூன்றுநாட்கள் வேலை என்றாகிவிடும். நான் அவன் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

நானும் செல்வாவும் ஒபிசைப் பூட்டினோம். நேரம் ஐந்தரை ஆகிவிட்டது. வாசலில் வைத்து திரும்பவும் எங்களை மடக்கிப் பிடித்தான் ராமன்.

"உங்கடை கூட்டல் கழித்தல் எல்லாம் பிழை சேர். உண்மையிலை இண்டைக்கு என்ரை ரேண். ஒருநாளைக்கு இதுக்கு தெய்வம் முடிவு சொல்லும்" சொல்லிவிட்டு வேகமாகப் போய் விட்டான். நான் எனது அறைக்குள் புகுந்து கொண்டேன்.

"செல்வா.... நீர் கொஞ்சம் பிந்திப் போம். வழி தெருவிலை சிலவேளை நிப்பான். ஏன் சும்மா சோலியை."

இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டேன். எனக்கு வேலை ஸ்தலத்தில் தங்குவதற்கு ஒரு அறை தந்திருந்தார்கள். அடுத்த அறையில் இருந்தவர்கள் கத்திக் குளறிக் கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். 'ஒருவேளை ராமன் சொல்லுவதுதான் சரியாக இருக்குமோ?' உறக்கம் வரவில்லை. திறப்பை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒபிஸ் றூமைத் திறந்தேன். செல்வாவின் மேசை லாச்சியைத் திறந்து அந்த பைலை எடுத்தேன். நானே கூட்டிப் பார்க்கத் தொடங்கினேன். செல்வா செய்தது சரியாகத்தான் இருந்தது. உவன் ராமன்தான் குளறுபடி விடுகிறான்.

தேநீர் தந்தார்கள். குடித்துவிட்டு மீண்டும் உறங்கப் போனேன். இரவுப் புகையிரதம் ஊளையிட்டு விட்டுச் சென்றது. நேரம் ஒரு மணி. இனி விடிய நாலு முப்பதிற்குப் பிறகுதான் அடுத்த புகையிரதச் சத்தம் கேட்கும்.

இரண்டொருதடவை விளாமரத்திலுருந்து பழங்கள் விழும் ஒசை கேட்டது. அதன் பிறகு உறங்கி விட்டேன். 'சேர்! சேர்!!' என்றபடி கதவைத் தட்டினார்கள். வழக்கமாக பறவைகளின் கிரீச்சிட்ட ஒலியுடன் காலை விடியும். அப்போது மணி ஐந்தரையோ ஆல்லது ஆறாகவோ இருக்கும். அப்படி எந்தவொரு அசுமாத்தமும் இல்லாமல் யாரது? நேரத்தைப் பார்த்தேன். மணி இரண்டு.

"சேர்! சேர்!! அது நான் ஆனந்தன் சேர். கதவைத் திறவுங்கோ" செக்கியூரிட்டியின் கலவரமான குரல். கதவுக்கு வெளியே போர்வையினால் உடலை மூடியபடி நடுங்கிக் கொண்டு நின்றான் ஆனந்தன். கலவரத்தில் பக்கத்து அறையில் படுத்திருந்தவர்களில் சந்திரசேகரமும் குமாரவேளும் வந்துவிட்டார்கள். முள் வேலியைக் காட்டியபடியே 'பே! பே!!' என்று உளறினான் ஆனந்தன். கேற்றைத் திறந்து கொண்டு நானும் சந்திரசேகரமும் வீதிக்கு விரைந்தோம்.

வீதிக்கும் வேலிக்குமிடையே குறுக்காக நின்றபடி ஒரு பெண் ஆடாது அசையாது எங்களையே பார்த்தபடி நின்றாள்.

"பக்கத்து வீட்டு வேலைக்காரி" என்றான் சந்திரசேகரம். அந்தச் சிறுபெண் - அந்த வீட்டிலிருக்கும் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பாடசாலை போவதைக் கண்டிருக்கிறேன். உள்ளே இருவரும் திரும்பி வந்தோம். இப்பொழுதும் ஆனந்தன் சுயநினைவின்றியே இருந்தான். ஒரு குவளை நீரை அவன் முகத்தின் மீது விட்டெறிந்தான் குமாரவேள். அப்போது சிரித்தான்.

"எத்தினை நாளா நடக்குது உந்த விளையாட்டு?"

"சத்தியமா எனக்கொண்டும் தெரியாது சேர்!"

"அப்ப என்ன நடந்ததெண்டு சொல்லும்?"

"உண்மையைச் சொல்லுறன் சேர். ஆனா என்னை ஒண்டும் செய்து போடாதையுங்கோ சேர். வெளியிலை நல்ல பனி. போர்வையாலை மூடிக் கொண்டு இருந்தன். என்னையும் அறியாமல் நித்திரையாப் போனன். அப்பத்தான் ஆரோ என்னைச் சுரண்டிறமாதிரி இருந்தது. போர்வையை விலத்திப் பார்த்தா அந்தப்பிள்ளை நிக்குது."

"எந்தப் பிள்ளை?"

"அதுதான் ராமனின்ரை கேர்ள் பிரண்ட்!"

திரும்பவும் நாலுபேராக வீதிக்கு விரைந்தோம். அங்கே அந்தப்பெண்ணைக் காணவில்லை. வீதி துடைத்துவிட்டது போன்று வெறுமையாகிக் கிடந்தது.

"விடியப் பாக்கலாம்."

விடிந்ததும் முதல் வேலையாக பக்கத்து வீடு சென்று அந்த அதிகாரியிடம் நடந்தவற்றைச் சொன்னேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவர், “நான் பாத்துக் கொள்கின்றேன்என்றார்.

மாலை ராமன் வேலைக்கு வந்தான்.

"என்ன எல்லாம் பிழைச்சுப் போச்சுப் போல"

ஒன்றுமே தெரியாதவன் போல நின்றான். எல்லாரும் மாறி மாறி அவனை விசாரித்தோம்.

"சேர்! நான் இஞ்சையிருக்கிற வாகனங்களுக்குத்தான் செக்கியூரிட்டி. அடுத்த வீட்டுப் பிள்ளைக்கெல்லாம் நான் செக்கியூரிட்டி இல்லை" என்றான் ராமன்.

நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது, முன் வீட்டிலிருந்த அந்த அதிகாரி தனது சைக்கிளை எடுத்து வந்து வீட்டிற்கு முன்பாக நிறுத்தினார். சற்று நேரத்தில் அந்த வேலைக்காரப்பெண் அழகாக உடுத்தியபடி சூட்கேஸ் ஒன்றுடன் வெளியே வந்தாள். ராமன் அவளைக் கண்டு கொண்டான். அவளும் அவனை ஒருதடவை பார்த்தாள். பின் தலையைக் குனிந்தபடி சைக்கிள் கரியரில் ஏறினாள்.

அவளை அதிகாரி மேலும் கீழும் பார்த்தார். வரும்போது ஒரு குட்டிப்பெண்ணாக வந்தவள் இப்பொழுது பெரியவளாகி விட்டாள். 'அவள் இனியும் இங்கிருப்பது பாதுகாப்பானது அல்ல' என்ற தீர்மானத்துடன் அவளைக் பெற்றோருடன் சேர்த்து விடுவதற்காக சைக்கிளை மெதுவாக உழக்கத் தொடங்கினார்.

நன்றி : செம்மலர் (பங்குனி, 2024)

kssutha@hotmail.com

No comments: