கலைக் கோயில் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 காதலிக்க நேரமில்லை வெற்றி படத்தை இயக்கிய கையோடு ஸ்ரீதர்


இயக்கிய அடுத்தப் படம் கலைக் கோயில். ஆனால் இந்தப் படத்தை அவர் தனது சித்ராலயா பட நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவில்லை. கலரிலும் உருவாக்கவில்லை. சிறிய பஜட்டில் , இரண்டாம் நிலை நட்சத்திரங்களை வைத்து படமாக்கினார்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் இளம் இசையமைப்பாளர்களாக , மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்துடன் படு பிசியாக படங்களுக்கு

இசையமைத்துக் கொண்டிருந்த விசுவநாதன் ராமமூர்த்தி இருவரில் ஒருவரான விஸ்வநாதனுக்கு வரக் கூடாத ஆசையாக படம் தயாரிக்கும் ஆசை வந்தது. அதன் விளைவாக படத் தயாரிப்பாளராக அவர் உருவெடுத்தார். ஆனால் தன்னுடைய இசை பாட்னரான ராமமூர்த்தியுடன் அல்லாமல் , பிரபல அரங்க அமைப்பாளராக கங்காவுடன் இணைந்து படத்தை தயாரித்தார்.

இசையமைப்பாளர் தயாரித்த படத்தின் கதையும் இசை கலைஞன் ஒருவனின் கதைதான். வீணை வித்துவானான நிதியானந்தத்திடம் அடைக்கலமாக வருகிறான் கண்ணன். வாரிசு இல்லாத நித்தியானந்தன் கண்ணனிடம் இருக்கும் இசைத் திறமையை அறிந்து அவனுக்கு இசைப் பயிற்சி கொடுத்து அவனையும் வீணை வித்துவானாக்குகிறார். அத்துடன் தன் சகோதரியின் மகள் கமலாவையும் அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
என்னத்தான் அமைந்தாலும் தன்னுடைய இசைத் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் கச்சேரி நடத்தும் வாய்ப்பு கிட்டவில்லையே என்று கண்ணன் பொருமுகிறான். நித்தியானந்தன் வீணை வாசிப்பை நிறுத்தினால்தான் தனக்கு வாய்ப்பு கிட்டும் என்று நம்பி அவரிடம் அதனை கோரிக்கையாக வைக்கிறான். அவரும் அதனை ஏற்று வீணை வாசிப்பை நிறுத்தி , வீட்டை விட்டும் வெளியேறி விடுகிறார்.

இதே காலகட்டத்தில் நடனக்காரியான சரோஜாவின் அறிமுகம் கண்ணனுக்கு ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது. பலவீனமான மனநிலையில் மதுவுக்கு கண்ணன் அடிமையாகிறான். அவனது வித்துவத்துக்கும் பங்கம் ஏற்படுகிறது. இதில் இருந்து அவன் மீண்டானா என்பதே மீதிக் கதை.

விஸ்வநாதனின் வாழ்வில் நடந்த ஒன்டிரண்டு சம்பவங்களை உள்ளடக்கி படத்தின் கதையை ஸ்ரீதர் எழுதியிருந்தார். படத்துக்கு வசனத்தை அவரும் கோபுவும் இணைந்து எழுதினார்கள். இசைத் துறையில் புகழ் பெற்று விளங்குபவர்கள் எவ்வாறு மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையாகி தங்கள் உன்னத நிலையில் இருந்து கீழே விழுகிறார்கள் என்பதை படம் தெளிவாக உணர்த்தியது.


கண்ணனாக முத்துராமனும், கமலாவாக சந்திரகாந்தாவும், சரோஜாவாக ராஜஸ்ரீயும் இயல்பாக நடித்திருந்தார்கள். வீணை வித்வானாக நடிக்க முதலில் எஸ் வி ரங்காராவ் ஒப்பந்தம் ஆகி , பின்னர் அவருக்கு பதில் எஸ் வி சுப்பையா நடித்தார். வேடப் பொருத்தம், மேக்கப் எல்லாம் கச்சிதமாக அவருக்கு பொருந்தியது. நடிப்பிலும் சோடை போகவில்லை. படத்தின் கலகலப்புக்கு நாகேஷ் இருக்கவே இருக்கிறார். இவர்களுடன் வி கோபாலகிருஷ்ணன், எஸ் என் லஷ்மி, வி எஸ் ராகவன், ஜெயந்தி, ஆகியோரும் நடித்தார்கள்.

படத்தின் கதை வீணை வித்வானை முன்னிலைப் படுத்தி இருந்ததால்

வீணை இசையை வித்துவான் சிட்டிபாபு மீட்டினார். படத்தின் டைட்டில் இசையிலேயே பிரமாதப் படுத்தியிருந்தார் அவர். அதுவரை காலமும் ஸ்ரீதர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வந்த ஏ வின்சென்ட் ஸ்ரீதரிடம் இருந்து இணக்கமாக விலகி விடவே இப் படத்தை பாலு ஒளிப்பதிவு செய்தார்.

கண்ணதாசனின் பாடல்களுக்கு விசுவநாதன், ராமமூர்த்தி இருவரும் இசையமைத்தார்கள். இந்தப் படத்தில்தான் பாலமுரளிகிருஷ்ணா திரைப் பாடல் ஒன்றை பாடி, தங்க ரத்தம் வந்தது தேரினிலே என்ற அப் பாடல் மிக பிரபலமானது. தேவியர் இருவர் முகனுக்கு, நான் உன்னை சேர்ந்த செல்வம் , முள்ளில் ரோஜா கல்லூரும் ரோஜா ஆகிய பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. படத் தயாரிப்பாளர் விசுவநாதன் இசையில் காட்டிய திறமையை , மற்றைய தயாரிப்பாளர் கங்கா தன் அரங்க அமைப்பில் காட்ட சந்தர்ப்பம் கிட்டவில்லை.


ஸ்ரீதருடைய படங்கள் பெரும்பாலும் முக்கோண காதல் கதைகளையே அடிப்படையாகக் கொண்டு தயாராவது வாடிக்கை. அதற்கு இப்படமும் தப்பவில்லை. ஜாலியாக அமைந்த கலர் படமான காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து வந்த இந்த செண்டிமெண்ட் படத்த்தினை ரசிகர்கள் ஏற்கும் மனநிலையில் இருக்கவில்லை. இதனால் விசுவநாதன், கங்கா இருவருக்கும் பொருள் நட்டமும், ஸ்ரீதருக்கு மன உளைச்சலையும் படம் பெற்று தந்தது. வெற்றிக்கு பிறகு தோல்வியும் வரலாம் என்பதை இப் படம் அவர்களுக்கு உணர்த்தியது.
படம் தோல்வி அடைந்த போதும் விஸ்வநாதனை , ஸ்ரீதர் இருவரின் நட்பிலும் விரிசல் வராமல் போனது ரசிகர்களின் அதிர்ஷ்டம். !

ஆனால் இருபது ஆண்டுகளுக்கு பிறகு இதே படத்தின் கதையை சில மாறுதல்களுடன் கலரில் படமாக்கி அப் படம் வெற்றி படமாகி தேசிய விருதையும் பெற்றுக் கொண்டது. அந்தப் படம் சிந்து பைரவி, இயக்கியவர் கே. பாலசந்தர்!

1 comment:

Anonymous said...

கலைக்கோயில் படத்தின் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும். படத்தின் விமர்சனம் நன்று.