உலகச் செய்திகள்

 காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்; உதவிக்கு அழைப்பு விடுப்பு

உக்ரைன் போருக்கு தீர்வு காண ரஷ்ய ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் பேச்சு

அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதி பிரதான பாலம் இடிந்து பெரும் சேதம்

133 பேர் கொல்லப்பட்ட மொஸ்கோ தாக்குதலின் ‘நால்வரும்’ சிக்கினர்

காசா எல்லைக்குச் சென்ற ஐ.நா. தலைவர் போரை நிறுத்துமாறு மன்றாட்டம்


காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்; உதவிக்கு அழைப்பு விடுப்பு

- பஞ்சம் அச்சுறுத்தல் அதிகரிப்புடன், சர்வதேச போர் நிறுத்தம் அழுத்தம்

March 28, 2024 8:42 am 

காசாவில் பஞ்சம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்து போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

முற்றுகையில் உள்ள காசாவுக்கு உதவிகள் தேவைப்படுவதோடு அந்தப் பகுதியில் வானில் இருந்து தொடர்ந்து உதவிகளை போடுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. எனினும் அவ்வாறு விழும் உதவிகளை பெறும் முயற்சியில் 18 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், வானில் இருந்து உதவிகளை போடுவதை நிறுத்தும்படி ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்னும் இஸ்ரேலிய தரைப்படை நுழையாத பகுதியாக இருக்கும் தெற்கு காசாவின் ரபாவில் இஸ்ரேலின் வான் தாக்குதலை அடுத்து இரவு வானில் பாரிய தீப்பிழப்பு வெளியானது. இங்கு 1.5 மில்லியன் மக்கள் நிரம்பி வழிவதோடு, பெரும்பாலானவர்கள் காசாவின் தெற்கு விளிம்பு வரை இடம்பெயர்ந்து எகிப்துடனான எல்லையில் இருக்கும் இந்தப் பகுதியை அடைந்துள்ளனர்.

வடக்கு காசாவில் உள்ள காசா நகரிலும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களால் நேற்று கறும்புகை வெளியான வண்ணம் இருந்தது. இங்குள்ள காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலியப் படை ஒரு வாரத்துக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 66 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் ரபா மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட மூவரும் உள்ளடங்குகின்றனர்.

அதேபோன்று காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேர் கொல்லப்பட்டு மேலும் 102 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி ஆறு மாதங்களாக நீடிக்கும் போரில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32,490 ஆக அதிகரித்துள்ளது.

காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு நாட்கள் கடந்திருந்தபோதும் மோதல்களில் எந்தத் தணிவும் ஏற்படவில்லை.

கான் யூனிஸ் நகரில் இருக்கும் மேலும் இரு மருத்துவமனைகளை இஸ்ரேலியப் படை சுற்றிவளைத்திருப்பதோடு இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் தற்காலிக முகாம் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி இருக்கும் நிலையில் அவர்கள் உயிர் ஆபத்தை சந்தித்து வருவதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் எச்சரித்துள்ளது.

போருக்கு மத்தியில் மக்கள் சிக்கியுள்ள சூழலில், வானில் இருந்து உதவிகள் போடுவதை நிறுத்துமாறு நன்கொடை நாடுகளை ஹமாஸ் கேட்டுள்ளது. கடலில் விழுந்த இந்த உதவிப் பொதிகளை பெற முயன்ற 12 பலஸ்தீனர்கள் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து ஹமாஸ் இந்தக் கோரிக்கையை விடுத்தது.

உதவியைக் பெற முயன்ற மேலும் ஆறு பேர் நெரிசலில் சிக்க உயிரிழந்ததாக ஹமாஸ் மற்றும் சுவிஸை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளன.

‘ஒரு டின் மீன் கலனை பெறுவதற்காக மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று காசா குடியிருப்பாளரான முஹமது அல் சபாவி ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். உதவிப் பொதி ஒன்றில் இருந்து இவ்வாறான ஒரு கலனை பெற்று அதனை கையில் வைத்துக் கொண்டே அவர் இதனைத் தெரிவித்தார்.

காசாவுக்குள் மேலும் உதவி வாகனங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஹமாஸ், இது காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த காசா போரினால் அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து உட்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள 2.4 மில்லியன் மக்கள் தொகையில் அனைவருக்கும் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ.நா கூறுகிறது.

விரைவான பஞ்சம் ஒன்றை தடுப்பதற்கு வான் அல்லது கடல் வழிகளை விடவும் வீதிகள் மூலம் காசாவுக்கு உதவிகள் விரைவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று ஐ.நா சிறுவர் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

அவசியமான உதவிகள் ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே தங்கி உள்ளன. உதவிகளை நிரப்பிய லொறிகள் எகிப்துடனான காசாவின் தெற்கு எல்லையில் காத்துக் கிடக்கின்றன என்று யுனிசெப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் சுட்டிக்காட்டினார்.

உதவிகளை தரை வழியாக எடுத்துச் செல்ல தொடர்ந்து முயற்சிப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில், தொடர்ந்தும் வானில் இருந்து உதவிகளை போடுவதாக கூறியுள்ளது.

ஜோர்தான், எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜெர்மனி நாடுகாளில் அனுப்பப்பட்ட விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் வீசப்பட்ட உதவிப் பொதிகளை நோக்கி மக்கள் குவியும் காட்சியை ஏ.எப்.பி. தொலைகாட்சி வெளியிட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் தனது போர் நடவடிக்கையை விட்டுக்கொடுக்காது தொடர்ந்து செயற்பட்டு வருவதோடு கட்டாரில் இடம்பெற்று வரும் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தையும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் முன்னெப்போதும் அனுபவிக்காத அரசியல் தனிமைப்படுத்தலை எதிர்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் பாதுகாப்பை இழந்திருப்பதாகவும் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே குறிப்பட்டுள்ளார்.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய படை நேற்று நடத்திய சுற்றிவளைப்புகளில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இதன்போது இஸ்ரேலின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக ஜெனின் நகரில் இஸ்ரேலிய படையின் துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் பதற்றம் நீடித்து வருகிறது.

மறுபுறம் வடக்கு இஸ்ரேல் மீது லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சரமாரி ரொக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தெற்கு லெபனானில் கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார மையம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு மருத்துவ உதவியாளர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே ஹிஸ்புல்லா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.   நன்றி தினகரன் 





உக்ரைன் போருக்கு தீர்வு காண ரஷ்ய ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் பேச்சு

March 27, 2024 3:20 pm 

உக்ரைனுக்கு எதிரான போருக்கு தீர்வு காண்பது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சமயம் உக்ரைன் மீதான போருக்கு உரையாடல் மற்றும் இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பது தொடர்பிலான இந்திய நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுப்பதற்கு இரு தலைவர்களும் இந்த உரையாடலின் போது இணக்கம் கண்டுள்ளனர்.

அதேநேரம் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்த பல்வேறு விடயங்கள் குறித்தும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துப் பரிமாறல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள தொலைபேசி உரையாடலின் விபரங்களை வெளியிட்டுள்ள கிரெம்ளின் மாளிகை, உக்ரைனுடனான போருக்கு தீர்வு காணவென அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க உக்ரைன் மறுப்பதாக ஜனாதிபதி புட்டின் இந்தியப் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இரு தரப்பு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 





அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதி பிரதான பாலம் இடிந்து பெரும் சேதம்

March 27, 2024 8:00 am 

அமெரிக்காவின் பெல்டிமோர் நகரில் உள்ள பிரதான பாலம் ஒன்று சரக்குக் கப்பல் மோதியதை அடுத்து நேற்று (26) இடிந்து விழுந்துள்ளது. இதில் பல வாகனங்களும் 20 பேர் வரையும் நீரில் விழுந்துள்ளனர்.

கொள்கலன் கப்பல் ஒன்று பிரான்சிஸ் ஸ்கொட் பாலத்தில் மோதியதை அடுத்து அந்த பாலத்தின் ஒட்டுமொத்த இரும்புக் கட்டமைப்பும் படப்ஸ்கோ நதியில் சரிந்து விழும் காட்சி சி.சி.டி.வி. கெமராவில் பதிவாகியுள்ளது. இதன்போது அங்கிருந்த வாகனங்களும் நதியில் விழுந்துள்ளன.

பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் காண முடிகிறது. மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. 300 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது.

சம்பவ இடத்தில் அதிக உயிருடற்சேதம் நிகழ்ந்திருப்பதாகத் தீயணைப்புத் துறைப் பேச்சாளர் கூறியுள்ளார். ஆனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதன்போது தண்ணீரில் தத்தளித்த பலரும் மீட்கப்பட்டுள்ளனர்.

1.6 மைல் தூரம் உடைய நான்கு பாதைகள் கொண்ட இந்தப் பாலம் பல்டிமோர் நகரின் தென் மேற்காக படப்ஸ்கோ நதிக்கு மேலால் அமைந்துள்ளது. 1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பாலத்தின் மூலம் வருடத்திற்கு 11 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன.   நன்றி தினகரன் 






133 பேர் கொல்லப்பட்ட மொஸ்கோ தாக்குதலின் ‘நால்வரும்’ சிக்கினர்

March 25, 2024 8:35 am

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் மக்கள் நிரம்பிய இசை நிகழ்ச்சி மண்டபம் ஒன்றில் தாக்குதல் நடத்திய நான்கு துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அந்தக் கட்டடத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் கண்மூடித்தனமாக சூடு நடத்தி இருப்பதோடு அந்த வளாகத்திற்கு தீ வைத்த நிலையில் குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 140 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும் நான்கு துப்பாக்கிதாரிகள் உக்ரைனை நோக்கி செல்லும் வழியில் பிடிபட்டதாகவும் ரஷ்ய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) குழு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல்களில் தொடர்புபட்டவர்கள் என முகமூடி அணிந்த நால்வரின புகைப்படத்தை ஐ.எஸ். டெலிகிராம் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை (23) வெளியிட்டிருந்தது. பின்னர் தாக்குதலின்போது எடுக்கப்பட்ட காட்சிகளையும் அந்தக் குழு வெளியிட்டது. இதில் துப்பாக்கிதாரி ஒருவர் பலர் மீது சூடு நடத்துவது பதிவாகியுள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி உரை ஒன்றில் இந்தப் படுகொலையை கண்டித்த புட்டின், ‘காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்’ என்று வர்ணித்தார். தாக்குதல்தாரிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக பாதுகாப்பு தரப்பினர் முன்னர் குறிப்பிட்டதை அவர் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டி இருந்தார். எனினும் இந்தத் தாக்குதலில் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டிருப்பதாக கூறும் குற்றச்சாட்டை அபத்தமானது என்று உக்ரைன் நிராகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த இசை மண்டபத்தில் தாக்குதல் இடம்பெறும்போது அங்கு 6,200 பேர் வரை இருந்துள்ளனர்.

அப்போது அங்குள்ள மக்கள் அச்சத்தில் சிதறி ஓட ஆரம்பித்துள்ளனர். தாக்குதல்தாரிகள் பெட்ரோல் குண்டுகளை வீசியதை அடுத்து அந்த மண்பத்தில் தீ பரவ ஆரம்பித்ததாக பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி புட்டின் நேற்று தேசிய துக்க தினத்தை அறிவித்ததோடு பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டன.

இந்த ‘கொடூரமான’ தாக்குதலை கண்டித்த வெள்ளை மாளிகை, இஸ்லாமிய அரசு ஒரு பொதுவான பயங்கரவாத எதிரி என்றும் அனைத்து இடங்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டது.   நன்றி தினகரன் 





காசா எல்லைக்குச் சென்ற ஐ.நா. தலைவர் போரை நிறுத்துமாறு மன்றாட்டம்

- தாக்குதல்கள் தொடரும் நிலையில் பேச்சில் முன்னேற்றமில்லை

March 25, 2024 10:31 am 

ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அன்டோனியோ குட்டரஸ் காசா வாயிலுக்கு கடந்த சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டு, மேலும் உதவிகள் செல்வதை அனுமதிக்கும் வகையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்ததோடு இஸ்ரேல் – ஹமாஸ் போரின் பயங்கரத்தை உலகம் பார்த்திருந்தது போதும் என்றும் வலியுறுத்தினார்.

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்த நீடிப்பதோடு, காசா நகருக்கு வெளியே உதவி விநியோகம் இடம்பெறும் இடத்தில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் 19 பேர் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் நடத்தியதாகவும் செல் குண்டுகளை வீசியதாகவும் காசா நிர்வாகம் கூறியது. ‘குவைட் சுற்றுவட்டப்பாதையில் உதவி லொறிகளுக்காக காத்திருந்தபோது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ டாங்கி சூடு நடத்தியதோடு செல் குண்டுகளை வீசியது’ என்று காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இந்த மாத ஆரம்பத்திலும் இதே இடத்தில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் காசாவில் உதவி வாகனங்களுடன் தொடர்புட்ட சம்பவங்களில் இஸ்ரேலிய படையினரால் இதுவரை குறைந்தது 560 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 1,523 பேர் காயமடைந்திருப்பதாக ஜெனீவாவை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்புக் குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

‘இஸ்ரேல் பட்டினியை ஒரு போர் குற்றமாக பயன்படுத்துகிறது’ என்றும் அந்த கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

காசாவை முழுமையாக முற்றுகையில் வைத்திருக்கும் இஸ்ரேல் அங்கு உதவிகள் செல்வதை கட்டுப்படுத்தி வரும் நிலையில் உணவு, நீர், மருந்து மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதோடு அந்தப் பகுதி பஞ்சம் ஒன்றை நெருங்கி இருப்பதாக ஐ.நா மற்றும் உதவி அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

‘சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் என காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் இடைவிடாத பயங்கரத்தில் சிக்கியுள்ளனர்’ என்று உதவிகள் செல்வதற்கான பிரதான நுழைவாயிலாக இருக்கும் காசாவுடனான ரபா எல்லைக் கடவையின் எகிப்து பக்கத்தில் இருந்து குட்டரஸ் தெரிவித்தார்.

இந்த ரபா பகுதியில் காசாவின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு தமது துருப்புகளை அனுப்பப்போவதாக இஸ்ரேல் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

‘இது போதுமானது என்ற உலகின் அதிகப் பெரும்பான்மையான மக்களின் குரலையே நான் பிரதிபலிக்கிறேன்’ என்று கூறிய குட்டரஸ், ‘அங்கு சமூகங்கள் அழிக்கப்பட்டுள்ளன, வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த குடும்பங்கள் மற்றும் தலைமுறைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன’ என்று அவர் கூறினார்.

ஒக்டோபர் 7 தாக்குதல் அல்லது பலஸ்தீனர்கள் மீதான கூட்டுத் தண்டனையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று கூறிய அவர் காசா முழுவதும் மனிதாபிமான பொருட்கள் செல்வதை முழுமையாக மற்றும் தடங்கலற்ற வகையில் அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தினார். ‘வாயிலின் ஒரு பக்கத்தில் நிவாரண லொறிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அதேநேரம் மறுபக்கத்தில் பட்டினி நீடிப்பது தார்மீக சீற்றத்தை ஏற்படுத்துகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அல் ஷிபா மருத்துவமனை வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றைய (24) தினத்திலும் தொடர்ந்தன. அல் ஷிபா மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் 59 வயது முகமது அங்குள்ள நிலைமையை ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு விபரித்துள்ளார். வீதிகளில் சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும் கட்டடங்கள் தீக்கிரையாகி வீதிகள் டாங்கிகளால் முடக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘காசா நரக நெருப்பை விடவும் மோசமாக மாறியிருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்றார்.

மறுபுறம் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலிய தரைப்படை மற்றும் விமானப் படையின் கடுமையான தாக்குதல்கள் மற்றும் ரபா மற்றும் டெயிர் அல் பலாவில் இடம்பெற்ற குண்டு வீச்சுகளில் குறைந்தது 14 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் கொல்லப்பட்டு மேலும் 106 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று கூறியது. இதன்படி கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இடம்பெறும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32,226 ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றபோதும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் இன்றி நீடித்து வருகிறது.

பணயக்கைதிகள் சிலரை விடுவித்து போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் தொடர்ந்தும் முயற்சி இடம்பெற்று வருகிறது. எனினும் போர் தரப்புகள் இடையே தொடர்ந்தும் ஆழமான இடைவெளி இருப்பதாக இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் அறிந்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘(ஹமாஸ்) அமைப்பு வெளிக்காட்டும் நெகிழ்வுப் போக்கை எதிரிகள் பலவீனம் என்று புரிந்து கொண்டிருப்பதால் ஹமாஸ் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நிலைகளில் ஆழமான வேறுபாடு ஒன்று உள்ளது’ என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 





No comments: