கிறிஸ்தவம் - தவக்கால சிந்தனை திருவிழிப்பு சனி

March 30, 2024 6:47 am 

ஆண்டவரின் பாடுகளின் பின் வருகின்ற சனிக்கிழமை அமைதியானது. நாம் எல்லோரும் கிறிஸ்துவின் இராவுணவுப் பெருவிழா, அவரது பாடுகள், மரணம் என்கிற பெரிய வெள்ளி வழிபாடு போன்றவற்றை கடந்து சில மணித்தியாலங்கள் அமைதியாக அவருடன் காத்திருக்கின்றோம்.

இன்றிரவு பாஸ்கா திருவிழிப்பு என்கிற மாபெரும் எழுச்சி நமக்குள் காத்துக் கிடக்கிறது. அவ்வேளையில் புதிய நெருப்பு, கிறிஸ்து சாவிலிருந்து உயிர்த்து விட்டார் என்கிற பேரிகை, புதிய நம்பிக்கையாளர்களின் (சகோதர, சகோதரிகளின், குழந்தைகளின்) திருமுழுக்கு என்று வழிபாடுகள் தொடரும்.

இவற்றிற்கு முன்பதாக ஒரு நீண்ட அமைதி. அது நமக்கான ஆசீர்வாதமாகும். அடுத்து என்ன நிகழவுள்ளது என்பதற்கு முன்பதாக நமக்கு ஓர் அமைதியான நேரம், காலம் தரப்பட்டுள்ளது. நாம் அதற்காக காத்திருக்கின்றோம்.

கிறிஸ்துவின் உயிர்ப்பானது சடுதியாக வந்துவிடாது. அதற்கான காத்திருப்பின் பிற்பாடுதான் நிகழும். கடவுள் நமது செயற்றிட்டத்திற்கு ஏற்பவல்ல, அவரது செயற்றிட்டத்திற்கு ஏற்பவே செயல்படுவார்.

புனித சனியின் அமைதியானது நினைவூட்டுவது என்னவெனில், கடவுளின் மீட்புச் செயலானது நாம் காணாத போதும், கவனியாத போதும் உறுதியாக நடைபெறுகிறது என்பதனை எடுத்துரைக்கின்றது. ஏனெனில் நமது எதிர்நோக்கு கிறிஸ்துவில் உள்ளது. அவர் கல்வாரி நிகழ்வு முடிந்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்ட பிற்பாடும் தனது பணியினை தொடர்கிறார்.

புனித சனியில் நமது மீட்பராகிய இயேசுகிறிஸ்து பாதாளத்தில் இறங்கி, ஆதாமையும் அவரோடு கூடவே துயில் கொண்டுள்ள அனைவரையும் தட்டியெழுப்பி ‘எழுந்திருங்கள், சாவிலிருந்து வாழ்வுக்கு வாருங்கள்’ என்கிற உன்னத உத்தான அழைப்பினை விடுக்கின்றார். இயேசுவின் உயிர்ப்பானது சாவின் மீது அவர் கொண்ட வெற்றியாகும்.

(திருகோணமலை மறைமாவட்டம்) - நன்றி தினகரன் 

No comments: