அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாரதி வாசகர் வட்டம் அமைத்த சுவாமி விபுலானந்தர் ! மார்ச் மாதம் அன்னாருக்கு 132 ஆவது பிறந்த தினம் ! முருகபூபதி

 மயில்வாகனன்  என்ற  இயற்பெயருடன்  இலங்கை,   கிழக்கு


மாகாணத்தில் காரைதீவில் 27-03-1892 ஆம்  திகதி பிறந்து பின்னாளில் சுவாமி விபுலானந்தர் என அழைக்கப்பட்டவர், 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி  தமது 55 ஆவது வயதில் மறைந்தார். 

மார்ச் மாதம் சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது பிறந்த தினம்,  தமிழ் கூறும் நல்லுலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

கல்முனை  மெதடிஸ்த  ஆங்கிலப் பாடசாலையில்  ஆரம்பக்கல்வியை பெற்றதன்  பின்னர்,  மட்டக்களப்பு  புனித  மைக்கல்  கல்லூரியிலும் பயின்று  கேம்ப்ரிட்ஜ்  பரீட்சையில்  சித்திபெற்று,   தான்  முன்னர்  கற்ற புனித  மைக்கல்  கல்லூரியில்  ஆசிரியராக  சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு,   கொழும்பில்  ஆசிரியப்பயிற்சிக்கல்லூரியில் இணைந்தவர்.

மதுரைத் தமிழ்ச்சங்கம்  நடத்திய  பரீட்சையில்  பண்டிதர்


பட்டத்தைப்பெற்ற   முதல்  இலங்கையர்  இவரே.  கொழும்பு  அரசினர் தொழில்   நுட்பக்கல்லூரியிலும்  யாழ்ப்பாணம்  புனித சம்பத்தரிசியார்  கல்லூரியிலும்  பணியாற்றியவர்.    லண்டன் பல்கலைக்கழகத்தின்   தேர்விலும்   சித்தியடைந்து,  மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும்   அதிபராக  பணியாற்றியவர்.   பின்னாளில் திருகோணமலை    இந்துக்கல்லூரியிலும்  அதிபராக  இருந்தவர் இந்தக்கல்விமான்.

யாழ்ப்பாணம்  ஆரியா  திராவிட  பாஷா  அபிவிருத்திச்சங்கத்தை அமைத்தவர்களில்  இவரும்  ஒருவராக   அறியப்படுகிறார். இராமகிருஷ்ண  இயக்கத்தில்  இணைந்து 1924 இல்  துறவறம் பூண்ட மயில்வாகனன்,  அதன் பிறகு  சுவாமி விபுலானந்தராகிறார்.

துறவியானபோதிலும்  தொடர்ச்சியாக  கல்விப்பணியாற்றியவர். அத்துடன்   இதழாசிரியர்.   ஷேக்‌ஸ்பியரின்  நாடகங்களை  ஆய்வுசெய்த எழுத்தாளர்.   இசை  ஆராய்ச்சியாளர்.   இசைத்தமிழ்பற்றிய   இவரது யாழ் நூல்  காலத்தையும்  வென்று  வாழ்கிறது.  1943  ஆம்  ஆண்டில்  இலங்கை  பல்கலைக்கழகம் இயங்கத்தொடங்கியதும்  அதன்  தமிழ்த்துறையில்  முதலாவது பேராசிரியராக  நியமிக்கப்பட்டவர்.   தமிழில்  ஆய்வுத்துறையை நெறிப்படுத்திய   முன்னோடி.

1947  ஆம்  ஆண்டு  மறைந்த  அடிகளாரின்  சமாதி  மட்டக்களப்பு கல்லடியில்   அமைந்துள்ளது.   அடிகளாருக்கு  இலங்கையில் ஞாபகார்த்த  அஞ்சல்  தலை  வெளியிடப்பட்டது. இலங்கையில்   இராமகிருஷ்ண  இயக்கத்தில்  அவர்  இணைந்திருந்த ஆரம்பகாலத்தில்,   அதன்  பொறுப்பிலிருந்த  பாடசாலைகளில்  முதல் வகுப்புத்தொடக்கம்,   எட்டாம்  வகுப்புவரையில்  மாணவர்களின் தமிழ்ப்பாடத்திட்டத்தில்   பாரதியின்   பாடல்களைச்சேர்த்திருக்கும் விபுலானந்தர், இந்திய சுதந்திரப்போராட்டக்காலத்திலேயே அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில், 1932 இல் Bharathi Study Circle என்னும் அமைப்பை நிறுவியவர்.    அத்துடன் அண்ணாமலைப்பல்கலைகழக வெளியீடுகளிலும் பாரதி பற்றி ஆங்கிலத்திலும் கட்டுரைகள்  எழுதியிருக்கிறார்.

சுவாமி விபுலானந்தரைப்பற்றிய ஆவணப்படமும் வெளியாகியுள்ளது.

விபுலானந்தரும் சுந்தர ராமசாமியும்

சுவாமி விபுலானந்தர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தம்.

இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தைப்பெற்றவரான தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் ஸ்தாபகருமான சுந்தரராமசாமி, இலங்கைப்பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களுக்கு 13-10-1992 ஆம் திகதி எழுதிய கடிதத்தைப் பார்ப்போம்.

"........ விபுலானந்த அடிகளைப்பற்றி இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஒன்று செ. யோகநாதன் எழுதியது. மற்றொன்று பெ.சு. மணி எழுதியது. இரண்டுமே அறிமுகம் என்ற அளவில் எனக்கு உபயோகமாக இருந்தன. அடிகள் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. தமிழுக்கு உண்மையான தொண்டாற்றியிருப்பவர்கள் பலருக்கும் தெரியாமல் இருக்கிறார்கள். மேலோட்டமானவர்கள் மிகுந்த புகழ் பெற்றிருக்கிறார்கள். கலாசாரவாதி, அரசியல்வாதிகளின் தயவில் வாழவேண்டிய பரிதாப நிலைதான் இன்றும் இருக்கிறது. அங்கு எப்படி என்று தெரியவில்லை. ( ஆதாரம்  கிழக்கிலங்கை ஏடு களம் - மே 1998)


சுந்தரராமசாமி குறிப்பிடும் பெ.சு. மணியின் நூலில் சுவாமி விபுலானந்தர் நோக்கில் மகாகவி பாரதியார் என்ற கட்டுரையில் பாரதியை அறியாத ஒரு தமிழ்மகன் பற்றிய தகவல் பதிவாகியிருக்கிறது.

ஒருசமயம் திருக்கோணமலை இந்துக்கல்லூரியில் நடந்த பாரதிவிழாவில் ஒருவர் பாரதியைப்பற்றி அறிந்தார். ஆனால், அவரே சில நாட்களுக்குப்பிறகு அந்தக்கல்லூரிக்கு வந்து, பாரதி படத்தைப்பார்த்துவிட்டு, " இவர் யார்...? " என சுவாமி விபுலானந்தரிடம் கேட்டார்.

பாரதியை நினைவில் நிறுத்தத்தவறிய அவர்மீது துறவியாக இருந்தும்


சுவாமி விபுலானந்தர் சற்றே சீற்றமடைந்தார்.                          " அவர்தாம் கவி அரசர் பாரதி. தமிழகத்தை உய்விக்க வந்த தெய்வம்" என்று சற்று கடுகடுத்த குரலில் கூறினார் விபுலானந்தர்.

1947 இல் மறைந்த சுவாமி விபுலானந்தர், தாம் ஸ்தாபித்த கல்லடி சிவானந்தா வித்தியாலய வளாகத்தில் அமையப்பெற்ற கல்லறையிலேயே  நிரந்தரத்துயில்கொண்டார்.















----0---

 

No comments: