அல்லாஹ்வின் அருள்மிகுந்த மாதம்

 March 27, 2024 7:00 am 0 comment


ஓர் இறை நம்பிக்கையாளன் அல்லாஹ்வின் ஏவல்களை ஏற்று நடப்பதற்கும், விலக்கல்களை தவிர்ந்து கொள்வதற்கும், பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், சுவனத்தில் நுழைவதற்கும், அல்லாஹ்வின் அருள் மிகவும் இன்றியமையாததாகும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் அருளின்றி யாரும் சுவர்க்கம் நுழைய முடியாது’ என்றார்கள். அதற்கு ஸஹாபாக்கள் நீங்களுமா? என்று கேட்க, நபியவர்கள் என்னையும் அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளவில்லையென்றால் சுவர்க்கம் நுழைய முடியாது’ என்று பதிலளித்தார்கள் (ஆதாரம்- ஸஹீஹுல் புஹாரி)அதனால் அல்லாஹ்வின் அருள் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் மிக மிக அத்தியவசியமானதாகும்.

‘உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், கருணையும் இல்லாமல் போயிருந்தால், உங்களில் சிலரைத் தவிர அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.’ என்றும் ‘உங்களின் மீது அல்லாஹ்வின் அருளும், கருணையும் இல்லாமல் போயிருந்தால், நீங்கள் நிச்சயம் எப்பொழுதோ பேரிழப்பிற்கு ஆளாகியிருப்பீர்கள்.’ என்றும் அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது.

ரஹ்மத் என்ற வார்த்தை ரிக்கத்-மென்மை, ஷஃபகத்-இரக்கம், தஅத்துஃப்-கிருபை என்ற பொருள்களைத் தரக்கூடிய சொற்களையும் கொண்டுள்ளன. இவ்வாறான ரஹ்மத்தை ரமழானில் கேட்போருக்கு தருவதாக அல்லாஹ் கூறியுள்ளான். அதனால் அவனது ரஹ்மத்தை பெற்றுக்கொள்வதற்காக, சொந்த பந்தங்களோடு சேர்ந்து வாழ்வதிலும் நற்காரியங்களில் அதிகதிகம் ஈடுபடுவதிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அவற்றின் ஊடாக அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் கருணையையும் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக இந்த ரமழான் காலப்பகுதியை உச்சளவில் பயன்படுத்திக் கொள்வோம்.

முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ் 
(காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்


நன்றி தினகரன் 

No comments: