இலங்கைச் செய்திகள்

பொரளையிலுள்ள இந்துக்களின் தகனசாலை நவீனமயப்படுத்தப்படும் : லயன் மனோகரனிடம் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி உறுதி

வடக்கு மாகாண சபைக்கு இரு புதிய செயலாளர்கள் நியமனம்!

எதிர்க்கட்சியில் அமர விருப்பமில்லை சபை நடுவில் ஆசனத்தை போட்டுத் தாருங்கள் - அச்சுனா சபையில் கோரிக்கை

அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்

 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ! 


பொரளையிலுள்ள இந்துக்களின் தகனசாலை நவீனமயப்படுத்தப்படும் : லயன் மனோகரனிடம் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி உறுதி

Published By: Digital Desk 7

19 Dec, 2024 | 10:14 AM


19 Dec, 2024 | 10:14 AM
image

கொழும்பு மாநகர சபையினால் பராமரிக்கப்படும் பொரளையில் உள்ள இந்து மக்களின் உடல்களை தகனம் செய்யும் தகனசாலையை மீள நிர்மாணித்து நவீனமயப்படுத்தப்படுமென கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி கீர்த்திகா ரட்ணவர்தன உறுதியளித்தார். 

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொரளை கனத்தையிலுள்ள இந்து மக்களின் இறந்த உடல்களை தகனம் செய்யும் தகனசாலைப் பகுதி பராமரிப்பின்றி காணப்படுவதாக வீரகேசரி பத்திரிகையில் அண்மையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான சிதம்பரம்பிள்ளை லயன் மனோகரன் குறித்த செய்தி தொடர்பில், கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி கீர்த்திகா ரட்ணவர்தனவுக்கு தெரியப்படுத்தியதுடன்  கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். 

கொவிட் தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுடன் கூடிய காலகட்டத்தில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை மற்றும் கடந்த காலங்களில் குத்தகைக்கு வழங்கப்பட்டவர்களால் பொரளை கனத்தையிலுள்ள இந்து மக்களின் இறந்த உடல்களை தகனம் செய்யும் பகுதி பராமரிக்கப்படாமையுமே இதற்கு காரணம் எனவும் குத்தகைக்கு எடுத்தவர்கள் அவற்றை கைவிட்டு சென்றுள்ளதாகவும் இதற்கு கொழும்பு மாநகர சபையால் கடந்த காலங்களில் நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதனை மீண்டும் நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி திருமதி கீர்த்திகா ரட்ணவர்தன உறுதியளித்தார்.

குறிப்பாக வடிகால் நிர்மாணிப்பு உள்ளிட்ட குறைபாடுகளை மேற்கொண்டு நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரியில் முன்னெடுக்கப்படும் எனவும் அதற்குரிய அனைத்து நடவடிக்கைளும் இடம்பெற்று வருவதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி திருமதி கீர்த்திகா ரட்ணவர்தன இதன்போது தெரிவித்தார்.

இது குறித்து கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித்த நாணயக்காரவின் கவனத்திற்கும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிதம்பரம்பிள்ளை லயன் மனோகரன் கொண்டு சென்றுள்ளதையடுத்து மாநாகர ஆணையாளரும் இது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மிகவிரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாதம்பிட்டியிலுள்ள மயானத்தையும் குழுவொன்று நியமித்து நிர்மாணம் செய்யவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பொரளையிலுள்ள மயானத்திற்கு சிதம்பரம்பிள்ளை லயன் மனோகரனுடன் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் மீள் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். 

இதேவேளை, மாநகர சபைக்கு பொதுமக்கள் வருகை தந்து அதிகாரிகளிடம் பிரச்சினைகளை முன்வைக்கும் பொதுமக்கள் சந்திப்புக்கான நாளை கொழும்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர் பாலித்த நாணயக்கார மீண்டும் அமுல்படுத்தியுள்ளார்.

ஆகையால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை கொழும்பு மாநகர சபையின் முதலாம் மாடியிலுள்ள அலுவலகத்தில் மக்கள் தங்களது பிரச்சினைகளை தெரியப்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி வீரகேசரி 






வடக்கு மாகாண சபைக்கு இரு புதிய செயலாளர்கள் நியமனம்!

Published By: Digital Desk 7

19 Dec, 2024 | 01:54 PM

image

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் புதன்கிழமை (18) மதியம் ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதன் அவர்களுக்கும், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக ப.ஜெயராணி அவர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  நன்றி வீரகேசரி 







எதிர்க்கட்சியில் அமர விருப்பமில்லை சபை நடுவில் ஆசனத்தை போட்டுத் தாருங்கள் - அச்சுனா சபையில் கோரிக்கை

Published By: Digital Desk 7

19 Dec, 2024 | 01:51 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) 

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்கு செல்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே  எதிர்க்கட்சியில் அமர  விருப்பமில்லை ஆகவே  சபையின் நடுவில் அமர்வதற்கு  ஆசனம் ஒதுக்கித் தருமாறு  யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான 2 ஆம் நாள் விவாதத்தின்போது சபை முதல்வரான பிமல் ரத்னாயக்க , 

எதிர்க்கட்சி எம்.பி.யான அர்ச்சுனாவை எம்முடன் தொடர்புபடுத்தி எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அச்சுனா  கிண்ணியாவில் எமது மேடையில் ஏறவில்லை .உங்கள் மேடையில்தான் ஏறினார் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவைப்பார்த்து குறிப்பிட்டார். ஆகவே அவரை எம்முடன் தொடர்புப்படுத்தி பேச வேண்டாம். ஆகவே கண்ணாடி அறையில் இருந்துக் கொண்டு கல்லெறிய வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

அப்போது எழுந்த ஆவேசமாக உரையாற்றிய  எம்.பி. அச்சுனா, எதிர்க்கட்சித் தலைவர் தனது கல்வி தகைமைகளை சபைக்கு அறிவித்தார். ஆனால் அவற்றை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை. ஆகவே கல்விச் சான்றிதழ்களை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் அவை உண்மையானதா என்பதை உரிய நிறுவனத்துடன் தொடர்புக் கொண்டு ஆராய வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் என்னுடன் உரையாற்றிய தொலைபேசி குரல் பதிவு உள்ளது , வேண்டுமாயின் அதனை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  எனக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை.

இந்த எதிர்கட்சிப்பக்கத்தில் அமர விருப்பம் இல்லை. எனவே எனக்கு சபையின் நடுவே ஆசனம் ஒன்றைப் போட்டுத்தாருங்கள் என சபாபீடத்திடம்  கோரினார்.

இவ்விடயத்தை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் குறிப்பிட்டார்.   நன்றி வீரகேசரி 





அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர் 

8 Dec, 2024 | 04:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை  சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து  நீக்கப்பட்டது.

பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்  கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது  பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார்.

முதலில் யாழ். வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் தெளிவாக பேசிய அர்ச்சுனா பின்னர், தடம் மாறி நிலையியற்கட்டளைகளுக்கும் சபைக்கு முரணாகவும் பேசத் தொடங்கினார். அப்போது சில தடவைகள் குறுக்கிட்ட சபாநாயகர், விசேட கூற்று தொடர்பான ஆவணத்தில் என்ன இருக்கின்றதோ அதை மட்டும் பேசுமாறு வலியுறுத்தியபோதும் அர்ச்சுனா அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

 யாழ். போதனா  வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது  கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எம்.பி. அர்ச்சுனா, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஆகியோரையும்  கடுமையாக  விமர்சித்தார்.  இதன்போது சபாநாயகரால் அர்ச்சுனா எம்.பி.க்கு மீண்டும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும் அரச தரப்பினரும் அர்ச்சுனா எம்.பி.யுடன் முரண்படத் தொடங்கினர்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்து விடயத்துக்கு முரணாகவே கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, அர்ச்சுனா எம்.பி. யாழ். வைத்தியசாலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கின்றார்.  ஆனால், விசேட கூற்றை முன்வைப்பதாயின் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த கூற்று தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு     அறிவிக்கப்படவில்லை. ஆகையால், இவருக்கு பாராளுமன்ற செயலாளர் எவ்வாறு கூற்றை முன்வைக்க அனுமதித்தார் எனக் கேட்கின்றேன் அத்துடன், இவர் விடயத்துக்கு முரணாக பேசும் விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரின்  நிலையியற்கட்டளைகளுக்கு முறையான கருத்துக்களை ஹன்சாட்  பதிவிலிருந்து நீக்குமாறு   சபாநாயகர் அறிவித்தார்.   நன்றி வீரகேசரி 






சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ! 

18 Dec, 2024 | 05:05 PM
image

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  தேவைப்பாடுகள் மற்றும் மேம்பாடுகள் தொடர்பில் வைத்தியசாலையின்  நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (17) இடம்பெற்றது. 

இந்தச் சந்திப்பில் பிரதம செயலாளர் இ.இளங்கோவன், சுகாதார அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் அ.சாந்தசீலன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் பத்திரண, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பு மருத்துவ அதிகாரி கோ.ரஜீவ் ஆகியோருடன், நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்.  

 நன்றி வீரகேசரி 





No comments: