கல்விப் பின்புலத்தில் படைப்பிலக்கியவாதியாகத் திகழும் தன்னார்வத் தொண்டர் ராணி சீதரன் ! முருகபூபதி


சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேச வைப்பதுமே ஒரு படைப்பிலக்கியவாதியின் பிரதான கடமை.  இக்கடமையை தனது ஆசிரியப்பணியின் ஊடாகவும்,  கலை, இலக்கிய செயற்பாடுகளின் மூலமும்  மேற்கொண்டு வருபவர்  சகோதரி திருமதி ராணி சீதரன் அவர்கள்.

இவர் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சண்முகதாஸ் முதலானவர்களின்  அபிமானத்திற்குரிய மாணவியாகத் திகழ்ந்தவர்.

அவர்களும்  எமது சமூகத்தில் கல்வி மற்றும் கலை, இலக்கியத்துறையில் ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்கள்.  அவர்களின் நிழலில் வளர்ந்திருக்கும்  ராணி சீதரன்,  தன்னையும்  இந்தத்துறையில்  ஆளுமையாக்கிக்கொண்டிருக்கிறார்.

தான் கற்றதையும் பெற்றதையும்  தனது சமூகத்திற்கு


உரியமுறையில் வழங்குவதற்கு இவர் தேர்ந்தெடுத்த துறைகள்தான் கல்வியும், கலை, இலக்கியமும்..

 ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக  ,
 தேசிய கல்வி நிறுவகத்தின்  தமிழ்த்துறையில்  சிரேஸ்ட விரிவுரையாளராக  தன்னை வளர்த்துக்கொண்டவர்.

சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் தொடர்ந்தும் எழுதிவருபவர். அத்துடன் கவியரங்குகளிலும் பங்குபற்றி வருபவர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து  மூன்று தசாப்த காலமாக 24 மணிநேரமும் ஒலிக்கும் இன்பத்தமிழ் வானொலியை நடத்திவருபவர் திரு. பாலசிங்கம் பிரபாகரன். இந்த வானொலி  சில வருடங்களுக்கு முன்னர் சித்திரை விழாவை மு;ன்னிட்டு மெய்நிகர் ஊடாக நடத்திய பன்னாட்டுக்கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கில்  ராணி சீதரனும் பங்கேற்று  பாராட்டுச்சான்றிதழ் பெற்றிருந்தார்.

அந்தப்போட்டியில் இவரைத் தேர்ந்தெடுத்தவர் தமிழகத்தின் சிறந்த கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான சினேகன். இந்நிகழ்வில் திரைப்பட கலைஞர் நெப்போலியனும் பங்கேற்று, ராணி சீதரனை பாராட்டியிருந்தார்.

எழுத்துலகில் வாழ்ந்தவாறு வான் அலைகளிலும் தனது குரலை ஒலித்தவர் ராணி சீதரன்.

ஆக்க இலக்கிய எழுத்துப்பணியில் இவர் இதுவரையில் வரவாக்கியிருக்கும் நூல்கள் வருமாறு:

சிறுகதைத் தொகுப்புகள் : மாங்கல்யம் தந்து நீயே,
கன்னியா தானம், நடுகல், நிலவும் சுடும்.

தேன்சிட்டு ( சிறுவர் பாடல் )


இலக்கியக் கட்டுரைகள்:



புறங்கைச்சுமை ( உளவியல் கட்டுரைகள் )


மூச்சுக்காற்றின் முணுமணுப்பு ( கவிதைத் தொகுப்பு )


பாட நூல்கள்( இலக்கியம் இலக்கணம் )

இவைதவிர,  பல  ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிரு;ப்பவர்.


முதுகலைமாணி முதுகல்விமாணி கல்வி டிப்ளோமா,
உளவளத்துணை டிப்ளோமா, என்பன இவரது மேலதிக தகைமைகள்.

அத்துடன் ஆன்மீக இலக்கியப் பேச்சாளராகவும் பயணிக்கின்றர்.


தனது நூல்களினால் கிடைக்கும் நிதியை,  பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித்தேவைகளுக்கு வழங்கி வரும் ராணி சீதரன், ஏனைய எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழுகின்றார். அத்துடன்  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சீர்மியத் தொண்டராகவும் இயங்கி வருகிறர்.

இலங்கை வடபுலத்தில் பண்ணாகத்தை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் ராணி சீதரன்,  புகழ்பெற்ற அரசியல் செயற்பாட்டாளரும் நாடாளுமன்றத்தின்   முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ( அமரர் ) அ. அமிர்தலிங்கம் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதையும் அறிகின்றோம்.

தமிழ் உணர்வுமிக்க சமூகச் சூழலில் வளர்ந்திருக்கும் ராணி சீதரன்,  அவ்வப்போது நான் வதியும் அவுஸ்திரேலியா கண்டத்திற்கும் வந்து
செல்பவர்.   இங்குதான் எனக்கு இவரது அறிமுகம் கிடைத்தது.  அறிமுகம் கிட்டிய நாள் முதல் என்னோடு தொடர்பிலிருப்பவர்.  இவரது உரையாடலில் இலக்கியம்தான் பேசுபொருளாக இருக்கும். 

அண்மையில் இவர்,  சிறுவர்களுக்கான சிலப்பதிகாரம் என்ற நூலையும் சிட்னியில் வெளியிட்டார். தமிழகப் பேராசிரியர் அரிமளம் பத்மநாதன், இந்நூலை வெளியிட,  தமிழ் அறிஞர், ஆய்வாளர் மன்னர் மன்னன் பெற்றுக்கொண்டார்.

வண்ணப்படங்களை உள்ளடக்கமாக, சிறுவர்களுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் இந்நூல் வெளிவந்துள்ளது.

ராணி சீதரன் தொடர்ந்தும் தனது கலை, இலக்கிய மற்றும் தன்னார்வத் தொண்டுப்பணிகளை தொடரவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

---0---

letchumananm@gmail.com

 

No comments: