மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா
நாளும் நல்லது கோளும் நல்லது
மாதமும் நல்லது வருடமும் நல்லது
மனதில் இறையைத் தினமும் நினைத்தால்
எல்லா நாளும் இன்பமாய் இருக்கும்
இதனைக் கருத்தில் இருத்திய முன்னோர்
இறையை நினைத்திட எல்லாம் செய்தனர்
மாதம் அனைத்தையும் மாண்புடை ஆக்கி
மனமதில் இறையைத் துதித்திட வைத்தனர்
தையினைத் தொடர்ந்து வருகின்ற மாதங்கள்
ஒவ்வொன்றும் முக்கியம் ஆக்கியே வைத்தனர்
பண்பாட்டை இணைத்தனர் பக்குவம் இணைத்தனர்
கார்த்திகை என்றதும் ஒளியே தெரியும்
ஒளியினூடே உமை மைந்தன் தெரிவான்
கந்தக் கடவுளை எண்ணிடும் நிலையில்
கார்த்திகைத் தீபம் ஏற்றியே நிற்போம்
கனற் பொறியாக வந்தவன் கந்தன்
கார்த்திகைப் பெண்கள் கைகளில் தவழ்ந்தவன்
அருவாய் உருவாய் ஆனவன் கந்தன்
ஆனந்த தாண்டவ சிவானார் மைந்தன்
கார்த்திகை தீபம் தத்துவம் நிறைந்தது
கந்தனின் தோற்றம் நிகழ்ந்ததும் இத்தினம்
மாலவன் பிரம்மா மருளது அகன்று
மனமது மெய்மை உணர்ந்ததும் இத்தினம்
ஒளியின் பிளம்பாய் இருப்பது இறையே
இருளெனும் மாயையை ஒழிப்பது இறையே
என்னும் தத்துவம் எல்லோர் மனத்திலும்
இறுக்கமாய் பதியவே இத்தினம் அமைந்தது
வீடுகள் வீதிகள் விளக்குகள் ஒளிரும்
வெளிச்சமோ இருளினை விரட்டியே நிற்கும்
ஆலயம் அனைத்திலும் தீபங்கள் ஒளிரும்
அனைவரும் அகமும் இறையினைத் துதிக்கும்
வள்ளலார் இறைவனை ஒளியினில் கண்டார்
ஒளியை வணங்குதல் உயர்வென உரைத்தார்
இறையின் தரிசனம் ஒளியே ஆகும்
ஒளியாய் இருப்பது இறைவனே ஆகும்
தீபங்கள் என்பது தீமையை அகற்றும்
தீபங்கள் என்பது தீயதை எடுக்கா
தீபங்கள் முன்னே தெரிவது தூய்மை
தீபங்கள் உள்ளே இருப்பது இறையே
மழையும் பெய்யும் குளிரும் இருக்கும்
வெள்ளம் பெருகி வீதியில் ஓடும்
உள்ளம் எல்லாம் கந்தன் நினைப்பால்
உவப்பாய் யாவரும் தீபங்கள் ஏற்றுவார்
பக்தி சிரத்தையாய் பக்குவம் பேணி
கார்த்திகைத் தீபத்தை ஏற்றுவோம் வாரீர்
கார்த்திகை தீபத்தில் கந்தன் தெரிவான்
கந்தனை வணங்குவோம் கவலைகள் அகலும்
No comments:
Post a Comment