இந்திய சினிமாவில் கலைப்படங்கள் என்ற பட்டியல் வரும் போது அங்கே இயக்குநர் ஜெயபாரதி என்ற ஆளுமையும் இருப்பார்.
ஆனாலும் தனது தணியாத தாகம் நிறைவாறாத நிலையில் கடந்த டிசெம்பர் 6 ஆம் திகதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
இயக்குநர் கே.பாலசந்தரின் மூன்று முடிச்சு படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுக்க வேண்டிய சூழலும், “கிராமத்து அத்தியாயம்” படத்தில் ஒரு பாடல் காட்சியோடு ஜெயபாரதிக்குப் பதில் இன்னொரு நாயகனை மாற்றி விட்டார்கள்.
இங்கே எதற்காக? என்ற பெயரில் இயக்குநர் ஜெயபாரதி எழுதிய நூல் குறித்த என் வாசிப்பனுபவத்தை இங்கே அவரை அஞ்சலித்துப் பகிர்கின்றேன்.
இயக்குநர் ஜெயபாரதி இப்படிச்
சொல்கிறார், நான் பகவத் கீதையை ஆழ்ந்து படித்தவன்
இல்லை! இருந்தாலும் எப்போதோ படித்தபோது பாஞ்சாலி கிருஷ்ணனிடம் கேட்டது நினைவுக்கு
வந்தது.
"தீயவர்களின் (கெளரவர்களின்) மனங்களை
மாற்றி இந்த மகாபாரதப் போரை நீங்கள் தவிர்த்திருக்கலாமே!"
அதற்குக் கண்ணன்,
"ஒருவன் என்னவாக இருக்க வேண்டுக் என்பதை
அவன் மனமோ அல்லது அவனின் அறிவோ தீர்மானிப்பதில்லை, அவனின்
ஆன்மாதான் தீர்மானிக்கிறது. ஆன்மா முடிவு செய்ததை மாற்றும் சக்தி எனக்கில்லை
பாஞ்சாலி"
கிருஷ்ணன் சொன்ன இந்தமாதிரியான ஓர்மம் வயப்பட்ட, நல்ல சினிமாவைத் தமிழ் ரசிகனுக்குக் காட்டவேண்டும், நாமும் நல்ல சினிமா எடுக்கலாம் என்ற வைராக்கியத்யோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கலைஞன் சினிமாச் சூதாடிகளின் மத்தியில் தன் சுயத்தைத் தொலைக்காமல் தன் ஒவ்வொரு முயற்சிலும் போராடிச் சளைக்காமல் தன் நாற்பதாண்டுக் கலையுலக வாழ்வைத் தொடவிருக்கும் இயக்குநர் ஜெயபாரதியின் வாக்குமூலம் தான் இந்த நூல்.
வாக்குமூலம் என்று இந்தப் படைப்பை
அடையாளப்படுத்தியதை நிரூபிக்குமாற்போல
"நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை. இது இறைவன் மீது ஆணை"
என்ற சத்தியப்பிரமாணத்தோடு நல்ல சினிமா எடுக்கப் புறப்பட்ட கதை ஒவ்வொன்றாய் சொல்லப்படுகிறது.
து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி என்று இருவருமே இலக்கிய உலகில் அறியப்பட்ட பெரும் எழுத்தாளர் தம்பதியின் மகனாக வாய்த்த ஜெயராமன் பின்னாளில் ஜெய் என்றும் ஜெயபாரதி ஆகியும் எழுத்தாளராகத் இலக்கிய உலகில் தடம் பதித்து அங்கிருந்து கொண்டே ஜ்வாலா என்ற திரையமைப்பை உருவாக்கி நல்ல சினிமாவை மொழி கடந்தும் தேடிக் கொணர்ந்து பகிர்ந்து அதுவும் தீராமல் நல்ல சினிமாவை நாமும் எடுக்கலாம் என்று சாதித்துக் காட்ட முனைந்த கலைப்படைப்பாளியின் சோதனைப் பக்கங்களைத் தான் இந்த நூல் அவரின் அனுபவ வெளிப்பாடாக உள்ளதை உள்ளவாறு பகிர்கின்றது. சில தருணங்களில் வாக்கியக் கோர்வைகளின் இடைவெளியில் அடைப்புக்குறிக்குள் அவரின் மனசாட்சியும் பேசுகிறது.
எத்தனையோ வகை வகையான வாழ்வியல் அனுபவங்கள், குறிப்பாகச் சினிமா உள்ளிட்ட கலையுலகப் பிரபலங்களின் வாழ்க்கைப் பகிர்வுகளை இன்னார் எழுதியும் பிறருக்குச் சொல்லக் கேட்டு எழுதியதையும் படித்திருக்கிறேன். ஆனால் அப்படியான பஞ்சுமெத்தை அனுபவத்தை இந்த நூல் தரவில்லை. முள் படுக்கையில் நடந்தவனின் ஊமைக் குரலாக, எந்த விதமான சால்ஜாய்ப்புகளுமோ, முகஸ்துதியோ, ஒளிவு மறைவோ இல்லாது சொல்லிக் கொண்டே போகின்றார் ஜெயபாரதி.
Crowd-funding என்ற முறைமையில் பொதுசனத்திடமிருந்து
நிதி திரட்டி வெளிவந்த முதல் படைப்பு என்ற அங்கீகாரத்தைப் பெறும்
"குடிசை" படத்தில் இருந்து ஒவ்வொரு படமாகச் சொல்லிக் கொண்டே போகின்றார்.
ஒவ்வொரு படம் எடுக்கும் போதும், பாதியில் எடுத்து அப்படியே கைவிட்ட
போதும், மூலப் படம் இன்னொரு படமாக மாறிய போதும் என்று
வித விதமான சவால்கள். இப்படியாகத் தனது குடிசை, ஊமை
ஜனங்கள் ( தேநீர் என்று எடுக்கப்பட்ட
படம்), உச்சி வெயில், நண்பா
நண்பா, ரெண்டும் ரெண்டும் அஞ்சு, புத்ரன், குருஷேத்திரம் என்று ஒவ்வொரு பட
அனுபவங்களும் பதிவாகியிருக்கின்றது.
முதற் படமான குடிசை படம் வெளியான
பின்னர் எழுந்த அதிர்வலைகளை மற்றைய படங்கள் அளவுக்கு ஆவணப்படுத்தவில்லையோ என்ற அவா
எழுகிறது.
இயக்குநர் மனோபாலாவின் இன்னொரு முகமான புத்தக, போஸ்டர் வடிவமைப்பாளர் என்ற உண்மை போல எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இயங்கிய கலைஞர்களது நிழலும் நிஜமும் பேசுகின்றன.
உச்சி வெயில் படம் எடுத்த அனுபவத்தைப்
பகிர்ந்த அத்தியாயத்தில் இரு வேறு பகுதிகள் தான் தமிழ் சினிமாவின் இருவேறு
குணாதிசியங்களைக் காட்டுகிறது.
காட்சி 1
மக்களிடம் நிதி திரட்டி உச்சி வெயில்
படத்தை எடுத்து முடிக்க உத்தேசிக்கும் ஜெயபாரதி, நடிகை
ராதிகாவிடமும் அவ்வாறே உதவி கேட்டுப் போகிறார்.
"ரொம்ப இருட்டாவே படம் பூராவும்
இருக்கும், நடிகர்கள் மெல்ல பேசுவாங்க.., எப்போதாவது மியூசிக் கேக்கும். இதுதானே நீங்க டைரக்ட் பண்ணப் போற
படம்? I don't like such film! " என்றார் ராதிகா.
காட்சி 2
உச்சி வெயில் படப்பிடிப்பு முடிவில்.
"மேடம் எவ்வளவு payment தரச்சொல்லட்டும்" - இயக்குநர் ஜெயபாரதி
"உங்களுக்கு நான் எவ்வளவு payment
தரணும் இப்போ" நடிகை ஶ்ரீவித்யா
சினிமா உலகில் எச்சரிக்கையாக இருந்து
கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் காலி பண்ணி விடுவார்கள் என்பதற்கு உதாரணமாக தேநீர்
படத்தின் உருவாக்கத்தின் போது
இளையராஜா, ஜெயபாரதி
சந்திப்பு வழியாக ராஜா உணர்த்துகிறார்.
இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இளையராஜா ஜெயபாரதியின் முதல் படத்துக்கே வாய்ப்பைக் கொடுக்க அன்றைய பரபரப்பான சூழலிலும் முன் வந்ததை முந்திய அத்தியாயம் ஒன்றில் காட்டுகிறார்.
"இளையராஜா சார் குடிசை படத்துக்கு பின்னணி இசையமைக்க விரும்புகிறார் அவர்
பங்களிப்பாக இருக்க வேண்டும் என்று"
1979 இல் படம் தயாரிக்கப்பட்ட போது
இளையராஜாவை முன் வைத்து எழுப்பபடும் விமர்சனங்களுக்கு எல்லாம் விளக்கம், இப்படியான அனுபவப் பகிர்வுகளைப் படிக்கும் போது தான் இன்று வரை அவர் எவ்வளவு தூரம் சூதாடிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்ற ஒரு வளையம் போட்டிருக்கிறார் என்பதாக அமைந்திருக்கும்.
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தேசியத்
திரைப்பட வாரியம் வரை எல்லாரையும் மறு விசாரணை செய்கிறது ஜெயபாரதியின் மனசாட்சி.
எப்போதோ சுராங்கனி பாடி நிதி திரட்டிப் படம் பண்ண உதவிய சிலோன் ஏ.ஈ.மனோகர் வரை
ஒருவர் விடாமல் தேடிப்பிடித்து நன்றி பாராட்டுகள் அந்தந்த நிகழ்வுகளை நினைவில்
மீட்டி.
தன்னால் உறுதிப்படுத்தாதை இன்னார் சொன்னது என்றும் ஆவணப்படுத்துகிறார்.
இங்கே எதற்காகப் படமெடுக்கிறீர்கள்
என்ற வைரமுத்துவின் உரிமை கலந்த அக்கறையையும், யாரோ
ஒரு வாடகைக் கார்க்காரன் தன் சினிமாத்துறையின் யோக்கியதை குறித்துக் கேட்ட
கேள்வியையுமே நாமும் இவரைப் பார்த்துக் கேட்க முடிகிறது.
அதற்கான பதிலாக தன் படைப்பின் மீது நம்பிக்கையும், நல்லதைக் கொடுக்க வேண்டும் என்ற நேர்மையும் உள்ள இந்தக் கலைஞனின் பதிலே மேற் சொன்ன கீதையின் சாரம்.
"இங்கே எதற்காக" இயக்குநர் ஜெயபாரதியால் எழுதப்பட்ட இந்த நூல் டிஸ்கவரி புக் போலஸ் வெளியீடாக டிசெம்பர் 2014 வெளியாகியிருக்கிறது.
நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகனொருவன்
மொழி கடந்து ஒவ்வொன்றாய்த் தேடிப் பார்த்துச் சுகம் கொள்ளும் அனுபவம் போன்றதல்ல
இது.
அந்த ரசிகனுக்கு நல்ல சினிமாவை உள்
வீட்டில் இருந்து காட்ட வேண்டும் என்ற முனைப்போடு பயணித்துக் கொண்டிருக்கும் கலைப்
படைப்பாளியின் தீராத தாகம், வலிமிகு அனுபவப் பகிர்வாய்ச் சாட்சியம்
பறையும் வாக்குமூலம் என்பேன்.
"நல்ல படமெடுத்தால் தியேட்டர் வந்து
பார்ப்போம் என்று சொல்வாங்க,
அதெல்லாம் சும்மா"
என்று சொல்லும் இயக்குநர் ஜெயபாரதியின்
வாக்குமூலம் தான் திரும்பத் திரும்ப மனதில் அறையுமாற் போல இருக்கிறது.
கானா பிரபா
No comments:
Post a Comment