December 6, 2024
ஓவ்வொரு பொருளுக்கும் காலாவதியாகும் காலம் உண்டு. அந்தப் பொருளின் பயன்பாடு என்பது அதன் பயன்பாட்டுக்கான கால எல்லைக்குள் மட்டும்தான். அதன் பின்னர் அந்தப்பொருள் என்ன தான் விலைமதிப்புள்ளதாக இருந்தாலும் அதற்கு எந்தப் பெறுமதியும் இருக்காது. இது பொருட்களுக்கு மட்டுமல்ல – இலக்கியம், அறிவியல், தத்துவம், அரசியல் என அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
ஒரு குறிப்பிட்ட துறையில், ஒரு காலகட்டத்தில் முதன்மையானவர்களாக போற்றப்படுபவர்கள் பிறிதொரு காலத்தில் பொருத்தமற்வர்களாகப் போகலாம் – ஏனெனில் அவர்களால் கால மாற்றத்தை புரிந்துகொண்டு செயற்பட முடியாமல் போகும் போது, புதியவர்கள் அவர்களை தாண்டிச் சென்றுவிடுவர். பின்னர் இப்படியும் ஒருவர் இருந்தார், அவர் இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான விடயங்களை முன்வைத்தார் என்னும் வரலாற்றுப் பதிவு மட்டுமே மிஞ்சியிருக்கும்.
இந்த அடிப்படையில் தமிழர் உரிமை அரசியலை எடுத்து நோக்கினால், ஆரம்பத்தில் தமிழ் மிதவாதிகளால் வழிநடத்தப்பட்ட தமிழர் அரசியல் பின்னர் ஆயுத இயங்களினால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆங்கில எழுத்துக்களை முன்னுக்கும் பின்னும் போட்டு, முப்பத்தேழு இயக்கங்கள் தோற்றம்பெற்றன. ஐந்து இயக்கங்களே பிரதான இயக்கங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய நான்கு இயக்கங்களும் 1990 களில் ஆயுத விடுதலைப் போராட்டத்தை கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாக அறிவித்தன.
ஈரோஸ் அமைப்பின் ஒரு பகுதி விடுதலைப் புலிகளோடு இணைந்து கொண்டது. இவற்றில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் வழிநடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் அங்கம் வகித்தன. புளொட் இயக்கத்தின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எப்) 2009இற்கு பின்னர் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. கூட்டமைப்பின் அங்கமாக இருந்த காலத்தில் கூட, முன்னாள் ஆயுத இயங்கங்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் கூட, தனித்துவமான அரசியல் கட்டமைப்பை இவர்கள் கொண்டிருக்கவில்லை.
பெயரளவிலான கட்டமைப்பு ஒன்றையே கொண்டிருந்தனர். இவர்களுக்கு வலுவான அரசியல் அடித்தளம் இல்லையென்பது கடந்த பொதுத் தேர்தலின் போது தெட்டத் தெளிவானது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் முன்னாள் ஆயுத அமைப்புக்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., டி.பி.எல்.எப். ஆகியவற்றின் தலைவர்கள் அரசியலில் காலாவதியாகிவிட்டனரா என்னும் கேள்வியை இலகுவாக புறம்தள்ளிவிட முடியாது. ஏனெனில், இவர்களால் இன்றைய காலத்திற்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்க முடியாது. ஏனெனில், குறிப்பிட்ட ஆயுத இயக்கங்கள் தோற்றம் பெற்ற காலத்தோடு ஒப்பிட்டால் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போன்ற பெயர்கள் காலாவதியாகிவிட்டன.
இவ்வாறான பெயர்களில் இனியும் அரசியலை முன்னெடுக்கலாம் என்று எண்ணினால் அது ஓர் அரசியல் தவறாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய இ;வ்வாறான இயக்கங்கள் இன்றைய ஜனநாயக அரசியலுக்கு எந்த வகையிலும் பொருத்த மானவை அல்ல. இலங்கை தமிழ் அரசு கட்சி புதிய சவால்களை எதிர்கொள்ளப் போதுமானதல்ல என்பதை புரிந்து கொண்ட போதுதான், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார். உண்மையில் இன்றைய சூழலில், பழக்கப்பட்ட ஒரு கட்சியென்னும் அடிப்படையில் தமிழ் அரசு கட்சி முதன்மையான ஒன்றாக நோக்கப்பட்டாலும் கூட, அரசியலை கையாளுதல் என்னும் அடிப்படையில், தமிழ் அரசுகட்சியும் அதன் பழைய முகத்தில் பொருத்தமற்ற ஒன்றுதான்.
எனினும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் கணிசமான ஆதரவு இருப்பதால் அவர்களை காலாவதியாகிப் போனவர்கள் என்று வாதிட முடியாது. இன்றைய சூழலில், முன்னாள் ஆயுத இயக்கங்களாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் தொடர்ந்தும் அரசியலில் இயங்க விருப்பம் கொண்டால், தங்களை புதுப்பித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் – குறித்த கட்சிகளின் தலைவர்கள் தங்களின் பொறுப்புக்களை அடுத்த தறைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். தங்களது கட்சிகளின் அடையாளத்தை புறம்தள்ளி, புதியதோர் அடையாளத்திற்குள் உள்நுழைய வேண்டும் – உதாரணம் தமிழர் விடுதலைக் கூட்டணி. ஒரு கூட்டணியாக இயங்குவதென்று முடிவெடுத்தால் அதன் பின்னர் குறித்த கட்சிகள் அனைத்தும் உறைநிலைக்குச் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் தமிழ் அரசு கட்சி இருந்தது போன்று. நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment