உலகச் செய்திகள்

அமெரிக்காவில் தீபாவளிக்காக பாடசாலைகள் விடுமுறை

காசாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் 45 பேர் பலி: லெபனான், சிரியாவிலும் தாக்குதல்

இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு தயார்

படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தம்

கிழக்கு ஸ்பெயின் மழைவெள்ளத்தில் 63 பேர் உயிரிழப்பு



அமெரிக்காவில் தீபாவளிக்காக பாடசாலைகள் விடுமுறை

November 1, 2024 10:00 am 

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக நியூயோர்க் பாடசாலைகளுக்கு இன்று தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்கள் வீடுகளில் தீபாவளி கொண்டாடுகிறார்கள். இதேபோல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அக்டோபர்  28 அன்று ஜனாதிபதி  பைடன் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் நியூயார்க் நகரில் முதல்முறையாக தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள இந்து சமயத் தலைவர்கள் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த அதிகாரிகள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை ஏற்று நியூயார்க் மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தீபாவளியை முன்னிட்டு நாளை விடுமுறை அறிவிப்பு செய்யப்பட்டு இருப்பதாக நியூயார்க் மேயர் எரிக் ஆடமின் அலுவலகத்தில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான துணை ஆணையர் திலிப் சவுகான் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,’ நியூயார்க் மாநகரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்வதா அல்லது பண்டிகை கொண்டாடுவதா என்ற குழப்பத்தில் இருப்பது வாடிக்கை. தற்போது தீபாவளிக்கு அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையாக இருப்பதால், மாணவர்கள் இனி தீபாவளியைக் கொண்டாடலாம். பள்ளிக்குச் செல்வதை தேர்வு செய்ய வேண்டியதில்லை.

நியூயார்க் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்தது. நியூயார்க் நகரில் 11 லட்சம் மாணவர்கள் படித்துவருகிறார்கள்.

நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் இந்த தீபாவளி விடுமுறையை அறிவித்துள்ளார். எனவே, நாங்கள் அனைவரும் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்’ என்றார்.   நன்றி தினகரன் 

 




காசாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் 45 பேர் பலி: லெபனான், சிரியாவிலும் தாக்குதல்

தற்காலிக போர் நிறுத்தத்தை நிராகரித்தது ஹமாஸ்

November 1, 2024 7:00 am 

காசாவில் குறிப்பாக வடக்கு காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 45 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற ஒரு தாக்குதலில் மருத்துவ விநியோகங்கள் தீவியில் கருகிய நிலையில் மருத்துவ செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் லெபனான் மற்றும் சிரியாவிலும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களை தொடர்ந்த நிலையில் அந்தப் பகுதிகளிலும் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

வடக்கு காசாவில் இருந்து ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு கலைக்கப்பட்டு விட்டதாக இஸ்ரேல் கடந்த ஜனவரியில் கூறியது. எனினும் வடக்கு காசாவை கடந்த ஒரு மாதமாக முற்றுகை இட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவம் அங்கு ஹமாஸ் போராளிகள் ஒருங்கிணைவதை தடுக்கும் படை நடடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறி வருகிறது.

வடக்கு காசாவின் ஜபலியா, பெயித் ஹனூன் மற்றும் பெயித் லஹியாவுக்கு இந்த மாத ஆரம்பத்தில் 
டாங்கிகளை அனுப்பிய இஸ்ரேல் அங்க சரமாரித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.


பெயித் லஹியா சிறு நகரில் இருக்கும் மருத்துவமனையில் மூன்றாவது மாடி மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மருத்துவ பணியாளர்கள் சிறு காயத்திற்கு உட்பட்டதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஈத் சபா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

கடந்த வாரம் இஸ்ரேலியப் படை இந்த மருத்துவமனைக்குள் ஊடுருவிய நிலையில் தற்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை. இந்த மருத்துவனை சுற்றிவளைப்பில் சுமார் 100 ஹமாஸ் போராளிகளை பிடித்ததாக இஸ்ரேல் அப்போது குறிப்பிட்டிருந்தது. இந்த மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேலிய டாங்கிகள் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆக்கிரமிப்பாளர்களின் (இஸ்ரேல்) கொடூரத்தில் இருந்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பாதுகாப்பதற்கு அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் காசா சுகாதார அழைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் அபூ ஷமலா குடும்ப வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் மூவர் கொல்லப்பட்டனர். ஜபலியாவில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவமான வபா குறிப்பிட்டது.

வடக்கு காசாவின் பெயித் ஹனூனில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் 43 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் அங்கு பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் நிரந்த போர் நிறுத்தம் அன்றி தற்காலி போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் நிராகரித்துள்ளார்.

‘போரை தற்காலிமாக நிறுத்தும் திட்டம், பின்னர் தாக்குதலை ஆரம்பிப்பதற்காகும். தற்காலிகமன்றி போரை முடிவுக்குக் கொண்டுவரும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கே ஹமாஸ் ஆதரவு அளிக்கிறது’ என்று ஹமாஸ் மூத்த தலைவர் தஹர் அல் நுனு ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

காசா போர் நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியஸ்தம் வகிப்பவர்கள் ஒரு மாதத்திற்குக் குறைவான காலத்திற்கு போர் நிறுத்தத் திட்டம் ஒன்றை ஹமாஸிடம் முன்வைத்திருப்பதாக அது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் கடந்த புதன்கிழமை கூறி இருந்தது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 131 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பவஸ்தீனர்கள் எண்ணிக்கை 43,204 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 101,641 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை லெபனானை ஒட்டிய எல்லைக்கு அருகில்  சிரியாவின் குசைர் பிராந்தியத்தில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதன்போதும் அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் மீது சரமாரித் தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியா மீது இஸ்ரேல் கடந்த பல ஆண்டுகளாக தாக்குதல்களை நடத்தி வருவதோடு காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இந்தத் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. ஈரானுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் வெளிப்படையாக எந்தக் கருத்தும் கூறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் ஆறு லெபனான் சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டு நால்வர் காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் ஒக்டோபர் ஆரம்பம் தொடக்கம் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்திருப்பதாகவும் மேலும் 279 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் போரினால் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பு தெரிவித்துள்ளது. ‘இந்த ஆண்டு ஒக்டோபர் 4 தொடக்கம் குறைந்தது ஒரு குழந்தை கொல்லப்பட்டு மற்றும் 10 குழந்தைகள் காயமடைந்துள்ளன’ என்று யுனிசெப் நிறுவனம் கூறியது.

‘லெபானின் தற்போதைய போர் குழந்தைகளின் உயிரைப் பறிப்பாதாக உள்ளது’ என்று அந்த நிறுவனம் கூறியது.   நன்றி தினகரன் 





இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு தயார்

ஹிஸ்புல்லா புதிய தலைவர்

November 1, 2024 8:20 am 

காசா மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் வடக்குப் பகுதி மீது லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் தங்களுடைய வடக்குப் பகுதிக்கு அச்சுறுத்தல் என நினைத்த இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. புலனாய்வுத்துறையின் இரகசிய தகவல்படி ஹிஸ்புல்லா நிலைகளை துல்லியமாக தாக்கி அழித்து வருகிறது. அந்த வகையில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் ஹஸ்ரல்லாவை வான்தாக்குதல் மூலம் கொலை செய்தது. மேலும் சில முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்கி கொன்றது.

தற்போது பால்பெக் என்ற கிராமத்தில் உள்ள மக்களை முழுமையாக வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே ஹிஸ்புல்லா- இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நவம்பர் 5ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்த நிலையில், அவருக்குப் பதிலாக நைம் காசிம் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் இஸ்ரேல் உடனான மோதல் குறித்து கூறுகையில் “லெபனானில் இஸ்ரேலின் பல மாதங்களாக வான் மற்றும் தரைவழி தாக்குதலை ஹிஸ்புல்லாவால் தடுக்க முடியும். இருந்தபோதிலும், இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்த விரும்பினால், நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் எனச் செல்வோம். அதுவும், எங்களுக்கு சாதகமாக மற்றும் வசதியான நிபந்தனைகள் கீழ் தான் ஒப்புக்கொள்வோம். ஹிஸ்புல்லா இதுவரை நம்பத்தகுந்த வகையிலான பரிந்துரையை இன்னும் பெறவில்லை” என்றார்.   நன்றி தினகரன் 





படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தம்

வரவேற்கிறது அமெரிக்கா, லடாக்கில் தீபாவளி இனிப்பு பரிமாறல்

November 1, 2024 7:32 am 

பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தியாவும் சீனாவும் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். இதேவேளை லடாக் எல்லையில் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் படையினர் இனிப்புப் பண்டங்கள் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

வோஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூ மில்லர், “உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு,  பகுதியில் மோதல் ஏற்படும் புள்ளிகளில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு, இரு நாடுகளும் ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எல்லைப் பதற்றங்களைக் குறைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இது தொடர்பாக நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தோம். ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த தகவல்களை பெற்றுள்ளோம். அதேநேரத்தில், இந்தியா – சீனா இடையேயான இந்த தீர்மானத்தில் அமெரிக்கா எந்த பங்கும் வகிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கின் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் இருந்து துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான செயல்முறை முடிவடையும் தறுவாயில் உள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பகுதிகளில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதையும், உட்கட்டமைப்பை அகற்றுவதையும் இந்திய – சீன இராணுவங்கள் பரஸ்பரம் சரிபார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. எல்லை விவகாரங்களில் பரஸ்பர உடன்பாட்டைத் தொடர்ந்து இரு தரப்பிலிருந்தும் எல்லைப் படையினர், படைகளை திரும்பப் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.   நன்றி தினகரன் 

 



கிழக்கு ஸ்பெயின் மழைவெள்ளத்தில் 63 பேர் உயிரிழப்பு

November 1, 2024 2:00 am 

ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலென்சியாவில் கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 63பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மழைவெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன.

தெருக்கள் ஆறுகளாக மாறின. ரயில் தண்டவாளங்கள், வீதிகள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்தன. ஸ்பெயின் நாட்டின் மிகக் கொடூரமாக தேசிய பேரிடரில் இதுவும் ஒன்று என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (உள்ளூர் நேரப்படி) பெய்த அடைமழை காரணமாக மலாகாவில் இருந்து வாலென்சியா வரை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. சேற்றுடன் மழை வெள்ளம் கார்களை அடித்துச் சென்றது. மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பொலிஸ் மற்றும் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் வீட்டில் தவித்த மக்களை காப்பாற்றினார்.   வாலென்சியாவில் உள்ள 12க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.   செவ்வாய்க்கிழமை அதிகமான மக்கள் காணாமல் போயிருந்தனர். புதன்கிழமை காலையில் அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்திருந்தனர்.

செவ்வாய்க்கிழமை என் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாள் என வாலென்சியாவில் உள்ள உத்தியெல் நகரபிதா தெரிவித்துள்ளார்.

நாங்கள் எலிகள் போல் சிக்கிக் கொண்டோம். வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 3 மீட்டர் அளவுக்கு வெள்ளம் உயர்ந்தது எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் ஏனைய பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 



No comments: