இலங்கைச் செய்திகள்

திருடர்களை பிடிப்பதில் அரசாங்கம் அவசரப்படாது

சுற்றுலாத்துறை வருமானமாக 8.5 பில்.டொலரை பெற எதிர்பார்ப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார பைக்குகள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி

இலங்கையில் University of East London பல்கலைக்கழகத்தின் புதிய சந்தைக் கூட்டாளராக Infinite Group


திருடர்களை பிடிப்பதில் அரசாங்கம் அவசரப்படாது

November 1, 2024 9:38 am 

திருடர்களைப் பிடிக்கும் விடயத்தில் அரசாங்கத்திற்கு அவசரம் கிடையாதென, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

திருடர்களைப் பிடிப்பதற்கு ஏன் இந்தளவு தாமதம் என திருடர்களே தம்மை கேட்பதாக தெரிவிக்கும் பிரதமர்,   இவை,முறையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எனவும் அரசாங்கம் அந்த விடயத்தில் அவசரப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற, கெஸ்பேவ தொகுதி தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அங்கு மேலும் தெரிவித்துள்ள பிரதமர்,

திருடர்களைப் பிடிப்பதில் தாமதம் ஏன்? என திருடர்களே எம்மிடம் கேட்கின்றனர். நாம் அவர்களுக்குக் கூறுவது குழப்பமடைய வேண்டாம். நாம் திருடன், பொலிஸ் விளையாட்டை நடத்துபவர்கள் அல்ல. அத்துடன் அவர்களைப் போன்று நாடகம் நடத்துபவர்களும் அல்ல.

தற்போது நாட்டைக் கட்டி யெழுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். திருடர்களைப் பிடிப்பது ஊடகங்கள் முன்னாள் நடத்தப்படும் நாடகம் கிடையாது. நாம் அவர்களைப்போன்று திருடர்களைப் பிடித்து சிறையிலோ அல்லது வைத்தியசாலையிலோ வைத்து பின்னர் கையொப்பம் தவறாக உள்ளது எனக் கூறி, அவர்களை விடுவிப்பவர்களும்  அல்ல.

இதனை உரிய வகையில் சட்டத்திற்கு இணங்க மேற்கொள்வோம். திருடர்களுக்கு சரியான தண்டனையை வழங்குவது அவசியம். அதனை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில்,எமக்கு  குழப்பமோ அவசரமோ கிடையாது அதனை முறையாக மேற்கொள்வோம்.

திருடர்களுக்கு சிறைக்கு செல்வதில் அவசரம் காணப்பட்டாலும். எமக்கு எந்தவித அவசரமும் கிடையாது. எமது உடன்படிக்கை, தோல்வியுற்ற கட்சிகளுக்கோ அல்லது நபர்களுக்கோ பதில் அளிப்பது அல்ல.  இந்த உடன்படிக்கை மக்களுடனானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 




சுற்றுலாத்துறை வருமானமாக 8.5 பில்.டொலரை பெற எதிர்பார்ப்பு

முன்னாள் எம்பி டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

November 1, 2024 11:00 am 

நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை 2025 இல், நாட்டிற்கு வரவழைப்பதை இலக்காகக் கொண்டு விசேட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையூடாக  அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளும் வேலைத் திட்டமாக  இது அமையும்.இதன் மூலம் வருடமொன்றில் 8.5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருடாந்த வருமானமாக பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள் நாட்டில் அதிகளவு டொலர்களை செலவழிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.  இவ்வாறான சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அதிகளவில் வரவழைப்பது அவசியமென்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலை, எதிர்வரும் பொதுத்தேர்தல் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் அவரிடம் நேற்று தினகரன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலிலேயே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்;  சுற்றுலாத்துறையூடாக அதிக வருமானத்தை   ஈட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது.  இத்துறையை முன்னேற்றுவதற்கும் அரசாங்கம் விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.அதற்கு தேவையான உட்கடமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் விட்டுக் கொடுப்பதில்  முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும்.

தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதோடு  கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் நலன் புரி, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதை முதன்மைப்படுத்தியதாக அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் அமையும். அதன் மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதுவரை காலம் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் மெகா திட்டங்களுக்கே முக்கியத்துவம் வழங்கி சிறு, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளை மறந்து செயற்பட்டிருந்தன.  இதை பாடமாகக் கொண்டு எமது அரசாங்கம் மேற்படி வேலைத் திட்டங்களை காத்திரமானதாக முன்னெடுக்கும்.

மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் அரச சேவை முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்படும். புதிய உற்பத்தி பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கி, ஊழல் மோசடிக்கு எதிரான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கு தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிலவும் வசதிகள் போதாதுள்ளன.இதனால்,  இரண்டாம் கட்ட நிர்மாண நடவடிக்கைகளை  ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன்  ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஊழல் மோசடிக்கு எதிரான ஜனாதிபதி என்ற நற்பெயரை ஜனாதிபதி பெற்றுக் கொண்டுள்ளார்.   இதன் மூலம் நேரடி வெளி நாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.  (லோரன்ஸ் செல்வநாயகம்)  நன்றி தினகரன் 






மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை

- ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தல்

November 1, 2024 7:48 pm 
  • வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு/ வசதிகள்
  • 2 Mercedes Benz, 1 Toyota Land Cruiser
  • மாதாந்தம் 1,950 லீற்றர் எரிபொருள்
  • 3 சாரதிகள்
  • 29 பொலிஸ் சாரதிகள் உள்ளிட்ட 180 பொலிஸ் அதிகாரிகள்
  • இராணுவ மற்றும் கடற்படை வீரர்களின் சேவை
  • ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கான ஓய்வூதிய கொடுப்பனவு
  • கொழும்பு 7 விஜேராம உத்தியோகபூர்வ இல்லம்
  • செயலாளர் (ஒருவருக்கான) கொடுப்பனவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விளக்கமளித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இச்செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் பின்வரும் பலன்களை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்தை பெறுவதோடு, கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தையும் செயலாளருக்கான கொடுப்பனவையும் அவர் பெபறுகின்றார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், Mercedes Benz -600 May Batch (B/P) Car 2008, Toyota Land Cruiser – 2017, Mercedes Benz – G63 AMG 4×4, 2850 Jeep 2013 ஆகிய 3 வாகனங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதற்காக மாதாந்த எரிபொருள் கொடுப்பனவாக 1950 லீற்றர் வழங்கப்படுவதுடன், அந்த வாகனங்களுக்காக மூன்று சாரதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

அதற்காக தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களுக்கு மேலதிகமாக 29 பொலிஸ் சாரதிகள் உள்ளிட்ட 180 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு தற்போது அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அது தொடர்பான தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


நன்றி தினகரன் 





இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார பைக்குகள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி

October 30, 2024 8:00 am 

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகுதி மின்சார பைக்குகள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

இந்த மின்சார சைக்கிள்கள் கே. டி ரைஸ் Motors நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

ஐரோப்பிய சந்தையில் நுழைவதற்கு தேவையான சர்வதேச CE சான்றிதழ் ISO தரச் சான்றிதழ் மதிப்பீடு பெற்ற ஒரேயொரு நிறுவனம் கே.டி ரைஸ் நிறுவனமாகும்.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் எதுவும் இந்த சர்வதேச சான்றிதழ்களைப் பெறாததால், அந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் எலக்ட்ரிக் பைக்குகளை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. அதனால், இலங்கையின் கே.டி ரைஸ் நிறுவனம், ஐரோப்பாவிற்கு மின்சார பைக்குகளை ஏற்றுமதி செய்யும் ஆசியாவின் முதல் நாடாக மாறியுள்ளது.

இத்தாலியிலிருந்து வந்த தம்மிக்க பெரேராவால் 2022 இல் கே.டி ரைஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அவர் இந்த தொழிற்சாலையில் ஐந்து மில்லியன் டொலர்களை முதலீடு செய்தார். இலங்கையின் முதலாவது மற்றும் ஒரே ஒரு மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் கே.டி ரைஸ் நிறுவனமாகும்.

தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான இத்தாலிய மின்சார சைக்கிள் தொழிற்சாலையினால் தயாரிக்கப்பட்ட மின்சார சைக்கிளையே இன்றும் அந்நாட்டின் பிரதமர் ரியென்சி பயன்படுத்துகின்றமை விசேட அம்சமாகும்.

இதேவேளை, கே.டி ரைஸ் Motors நிறுவனத்தினால் இலங்கை சந்தைக்காக உற்பத்தி செய்யப்பட்ட தற்போது உள்ளூர் சந்தையில் வேகமாக விற்பனையாகும் LEADER மின்சார ஸ்கூட்டர், அடுத்த கட்டமாக ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகன பாகங்களை இணைக்கும் திட்டம் உபாலி விஜேவர்தனவினால் இத்தாலியின் ஃபியட் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அரசு ஆதரவு இல்லாததால் உபாலி/ பியட் வர்த்தகம் சரிந்தது. அதனால் உபாலிஃபியட் காரை உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் உபாலியின் கனவு நனவாகவில்லை. ஆனால் கே.டி .ரைஸ் இன் தலைவரான தம்மிக்க பெரேரா எந்தவொரு அரசாங்க உதவியுமின்றி இத்தாலி மற்றும் ஐரோப்பாவிற்கு மின்சார பைக்குகளை ஏற்றுமதி செய்து இந்த நாட்டிற்கு அந்நிய செலாவணியாக பெரும் தொகையை கொண்டு வந்துள்ளார். ஐரோப்பிய வாகன சந்தையில் இலங்கையின் உற்பத்தி வாகனங்கள் மேலோங்க வேண்டும் என்ற உபாலி விஜேவர்தனவின் கனவு நனவாகும் என்பது உறுதி.   நன்றி தினகரன் 






இலங்கையில் University of East London பல்கலைக்கழகத்தின் புதிய சந்தைக் கூட்டாளராக Infinite Group

October 30, 2024 7:00 am 

University of East London (UEL) பல்கலைக்கழகத்துடனான கூட்டாண்மை மூலமாக அதன் முகவர் கூட்டாண்மைகள் மற்றும் நுழைவு பதிவு நடைமுறைகளை நிர்வகிப்பதில் இலங்கையில் அதன் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக மாறியுள்ளமை குறித்து Infinite Group அறிவித்துள்ளது. இலங்கை முகவர்கள் UEL இன் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து நெருக்கமாக இணைந்து செயற்பட்டு, விண்ணப்ப சேவைகளை சீரமைத்து, வெளிநாட்டில் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு இந்த ஒத்துழைப்பு வழிவகுக்கும்.

இக்கூட்டாண்மை குறித்து UEL இன் சர்வதேச ஆட்சேர்ப்பிற்கான பிரதித் தலைவர், தெற்காசியா பவேல் பாவா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் வெளிநாட்டுக் கல்விக்கான மோகம் அதிகரித்து வருகின்ற ஒரு காலகட்டத்தில் Infinite Group உடன் எமது கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயர் கல்வித் தராதரங்கள், கலாசார பன்மைத்துவம், மகத்தான தொழில்வாய்ப்புக்கள் காரணமாக இலங்கை மாணவர்கள் விரும்பி நாடுகின்ற நாடுகளில் ஒன்றாக ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் காணப்படுகின்றது. தற்போது ஒட்டுமொத்த நடைமுறைக்கும் Infinite Group அனுசரணையளிப்பதால், UEL க்கு இலகுவாக விண்ணப்பித்து, தமது கல்விப் பயணங்களை ஆரம்பிப்பதற்கு மாணவர்களால் முடியும்,” என்று குறிப்பிட்டார்.

சர்வதேச தொழிற்சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தனது கற்கைநெறிகளை மாற்றிக்கொள்ளும் ஆற்றலுக்காக UEL பிரபலமானது. வேலைவாய்ப்பு தொடர்பான பலன்களுக்காக முதல் 10% களுக்குள் இடம்பிடித்துள்ள பல்கலைக்கழகங்கள் மத்தியில் இதுவும் காணப்படுவதுடன், தொழிற்சந்தையில் சிறப்பாக பரிணமிக்கும் பட்டதாரிகளை உருவாக்குவதற்குப் பிரபலமானது. மேலும், மாணவர்களின் தொடக்க வணிக முயற்சிகள் மற்றும் சமூக வர்த்தகத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் நான்காவது ஸ்தானத்தில் காணப்படுகின்றது.   நன்றி தினகரன் 







No comments: