கந்தசஷ்டி சிறப்பம்சம்


 













கந்தனும் வந்தான் ! 


                    ( 1 ம் நாள் )
   
 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



சிவனின் சிந்தையில் தோன்றிய சிந்தனை
கனற் பொறியாயாகி கந்தனாய் வந்தது 
சினத்தை முதலாய் கொண்ட அசுரர்
பலத்தை கந்தன் அடக்கவே வந்தான்

அசுரர் அளவிலா வரத்தைப் பெற்றனர்
கிடைத்த வரத்தை கீழாய் ஆக்கினர்
கொடிய உள்ளம் நெடிதாய் எழுந்தது
கொடுமை எங்கணும் விரிந்து பரந்தது

பக்தியை அசுரர் பழித்துமே நின்றனர்
பரமனை எதிர்த்திட துடித்துமே நின்றனர்
சக்தியின் உருவாய்  கந்தனும் வந்தனன்
மொத்தமாய் அசுரர் முடங்கியே போயினார்

ஆணவம் அழிந்தது அசுரர் அடங்கினர்
அரனின் சக்தியாய் கந்தனே எழுந்தான்
பூதலம் எங்கணும் பொழுதுமே விடிந்தது
சோதனை வேதனை துடைத்தனன் கந்தனும் 

பக்தியை மிதித்தார் பக்தியை அழித்தார்
பழியினைத் தாங்கியே படுகுழி வீழ்ந்தார் 
பக்தியே கனலாய் எழுத்துமே வந்தது
பரமனின் குமரனாய் கந்தனும் வந்தான்  


                மாசக்தி கந்தனே !

                    ( 2 ம் நாள் )
 


சூரரை வதைக்க வந்தவன் கந்தன்
சூரரை வதைக்கா துடைத்தனன் அகந்தையை
அகந்தையை அழித்து அன்பைக் காட்டியே
அடைக்கலமாக அவன் கழல் அமர்த்தினான்

மாறுபடா சூரர்தமை மனந்திருந்தச் செய்தான்
வரமிழந்து சூரர்க்கு வரமாக அமைந்தான்
கூறுடைய குணமதனை குமரவேள் களைந்தான்
குன்றிருக்கும் இடமெல்லாம் சென்றுமே அமர்ந்தான்

ஏறுமயிலேறி விளை யாடியே நின்றான்
ஈசனுக்கே ஆசானாய் உபதேசம் செய்தான்
மாறுடைய மனத்தாரை மனமாற வைத்தான்
மாசக்தி மிக்க கந்தனே ஆவான் 



 வேலவன் திருவருள் விரைந்துமே கிடைக்கும்  !

                      ( 3 ம் நாள் )
 


கந்தன் என்றால் கவலைகள் அகலும்
காரியம் சிறக்கும் களிப்பும் பெருகும்
வெந்திடு உள்ளம் விடிவினைக் காணும்
கந்தன் கருணை களையும் அனைத்தையும் 

கந்தனின் கைகளில் அமர்ந்திடும் வேலோ
கயமையை நோக்கியே குறியாய் இருக்கும்
வேதனை போக்கும் வெற்றியைக் கொடுக்கும்
வேலவன் வெற்றி வேலதே ஆகும் 

வேலை வழிபடு வேதனை போகும்
வேலை நினைந்தால் வெற்றியே கிடைக்கும்
வேலை மனமதில் இருத்தியே வைத்திடு
வேலவன் திருவருள் விரைந்துமே கிடைக்கும் 



            பெம்மான் முருகன்  !

              ( 4 ம் நாள் )
 

பேதம் பர்க்கான் பெம்மான் முருகன்
உருகும் அடியார் உளமே அமர்வான்
சுருதிப் பொருளாய் அவனே உள்ளான்
செருவை அடக்கின் முருகன் தெரிவான்

வேடப் பெண்ணை விரும்பி அணைத்தான்
விண்ணவன் பெண்ணையும் தன்னுடன் இணைத்தான்
மோதிய அசுரரை பக்கமே வைத்தான்
மேதினி ஒளிக்க வந்தவன் கந்தனே 

சண்டை என்பது சம்காரம் அன்று
சம்காரம் என்பது சஞ்சலம் அறுப்பதே
சஞ்சலம் அறுக்கவே சங்கரன் நினைத்தான்
கந்தனைக் கொடுத்து கருணையைக் காட்டினான்



 அப்பன் முருகன் அருட்டமிழ் ஆகும் !

                    ( 5 ம் நாள் )

 

மொழியும் ஒளியும் முருகன் என்பார்
முத்தமிழ் உயிராய் முருகனே உள்ளான்
முருகன் பெயரே இனிமைத் தமிழே
தமிழே முருகன் தலை பணிவோமே 

அன்னைத் தமிழில் அமுதாய் இருக்கும்
அருமைத் தமிழே திருப்புகள் ஆகும்
அருண கிரியின் அத்தனை தமிழும்
அப்பன் முருகன் அருட்டமிழ் ஆகும் 

திருப்புகள் தமிழைச் சிந்தை இருத்தினால்
செந்தமிழ் அனைத்தும் வந்துமே குவியும்
பாடிடும் வேளை பக்தியும் பெருகும்
பரமனின் மைந்தன் சித்தியும் கிடைக்கும் 





 கந்தன் திருவடி என்றும் துணையே ! 

                   ( 6 ம் நாள் )  

  

சந்ததும் கந்தன் புகழ் பாடு 
சஞ்சலங்கள் போக்கிடுவான் கந்தன்
வந்த வினை ஓடிடுமே நாளும் 
வாராது வினை எம்மை நாடி 

சொந்தம் எனக் கந்தனை நீ நம்பு
சுகமுன்னை நாடி வரும் என்றும் 
அந்தகனும் நமை நாடி வாரான்
கந்தனுமே கை கொடுப்பான் என்றும்

வேலை நினைத்தால் வெற்றி நிச்சயம்
வேலன் வருவான் காலைப் பிடிப்போம்
காலைப் பிடித்தால் கவலைகள் கலையும்
கந்தன் திருவடி என்றும் துணையே ! 
































































No comments: