இந்து சமயத்தின் நெறிமுறைகள், பண்புகள் யாவும், நாடுபூராவுக்கும் ஒரே சீராக அமைவதில்லை. இதுவே இந்துசமயத்திற்கும் தனியாக உள்ள ஒரு சிறப்பு, இந்தியா என்பது வடக்கே கஷ்மீரம் முதல் தெற்கே கன்னியாகுமரியையும் தாண்டி இலங்கையின் வடகிழக்கு பகுதிகள் வரை விரவிக் கிடக்கிறது.
அது மட்டுமல்ல இந்துமதம் இயற்கையை ஒட்டி பரிணமித்து வளர்ந்த ஒரு கோட்பாடு. ஆகவேதான் இந்துமதத்தின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் இப் பரந்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் படிமுறை மாற்றங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அது அவ்வாறு அமைய வேண்டியதுமே. காரணம் மதம் என்பது அது எந்த மதமாயினும் சரி சில மகான்களின் சிந்தனா சக்தியின் பேறாகவே தோன்றின. மனிதர் மத்தியில் வாழ்ந்த மகான்களே மக்களுக்கு மதம் பற்றிய அறிவைப் போதித்தவர்கள். ஆகவே மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு புறம்பாக அமைந்துவிட முடியாதவை இக் கோட்பாடுகள். இதனாலேயே இந்துமத வழிமுறைகள், நடைமுறைகள் என்பன இந்திய கண்டத்தில் ஒரு அந்தத்தில் காணப்படுவதற்கு எதிர்மாறாக உள்ளது ;எதிரான பிரதேசத்தில். ஒரு சிறு உதாரணம் கஷ்மீர் பிராமணர்களை அங்கெல்லாம் பண்டிட் என அழைப்பார்கள். ஆகவேதான் இந்திய மண்ணின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் பண்டிட் ஜவஹர்லால் நேரு எனப்படுகிறார். அவர் கஷ்மீரத்து பிராமணர். கஷ்மீரத்துப் பண்டிட்டுக்கள் யாவரும் அம்பட்டமான மாமிச போசனம் பண்ணுவார்கள். பசு இறைச்சியையும், பண்டி இறைச்சியையும் தவிர்த்து ஏனைய விலங்குகள், பறவைகளின் மாமிசங்களை விரும்பி முடிப்பார். கஷ்மீரப் பிரதேசம் குளிர் காலத்தில் வெய்யிலைக் காணாத பனிப்பிரதேசமாக காணப்படும். குளிர் காலத்தில் தாவரங்கள் செழிப்பாக வளர்வதற்கு வாய்ப்பில்லை. ஆகவேதான் கஷ்மீரத்தில் வசிக்கும் யாவரும் மாமிச உணவு புசிக்க வேண்டியது யதார்த்தமாகிறது.
இந்துக்களின் விசேஷ நாட்களில் சிவராத்திரியும் ஒன்று. இந்துக்கள் வாழும் சகல பாகங்களிலும் சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலும், தமிழ்நாட்டு கோவில்களிலும் மக்கள் விரதம் அனுஷ்டித்து, இரவு முழுவதும் கண் விழித்து தொடர்ச்சியாக பூஜைகள், பக்திப்பாடல்கள் பஜனைகள் என பிரார்த்தனையில் ஈடுபட்டு இருப்பார்கள். இங்கு அவுஸ்திரேலியாவிலும் இந்துக்களின் கோவில்களில் மக்கள் இரவு பூராவும் கண் விழிப்பார்கள். கோவிலில் விஷேட பூசைகள் இடம்பெறும். இந்து மதத்தோர் வீடுகளில் இந்த நாட்களில் புலால் உணவு எதுவும் அன்றும் மறுநாளும் தயாரிக்கப்படுவது கிடையாது. இத்தகைய நாட்களில் முழுக்க முழுக்க தாவர உணவு உண்பார்கள்.
கஷ்மீரத்து பிராமணர்களாகிய பண்டிட்டுகளும், சிவராத்திரியை வெகு விமரிசையாக கொண்டாடி வழிபடுவார்கள். அங்கெல்லாம் லிங்க ரூபத்தில் காணப்படும் பரம் பொருளுக்கு அமுது படைத்து கஷ்மீர மொழியில் வழிபாடுகள் நடாத்தப்படும். லிங்க மூர்த்திக்கு படைக்கப்படும் நிவேதனம் முற்றிலும் புலால் உணவாகவே இருக்கும். ஆட்டிறைச்சிக்கறி, கோழிக்கறி, என பலவும் மாமிசமாகவே படைக்கப்படும். மறுநாள் காலை பக்தர்கள் இவற்றை இறை பிரசாதமாக உண் பார்கள்
எமது அயல் வீட்டில் வாழ்ந்த கஷ்மீர் நண்பர் சிவராத்திரி பூஜை நடைபெறும் மண்டபத்திற்கு போவதாகவும், நாமும் வந்து கலந்து கொள்ளவேண்டும் என அன்பான அழைப்பு விடுத்தார். அங்கு போய் கண்ட காட்சியே இது. நாம் அவர்கள் பிரசாதத்தை உண்ணாது நழுவி விட்டோம். பின்பு இவை பற்றி நாம் பேசிய போதுதான் அவர் விளக்கம் கொடுத்தார்.
இனி வங்காளத்திற்கு வருவோம். அங்கு எல்லாம் கதை வேறு. வங்காளத்தில் பிராமணர் உட்பட சகலருமே மீன் சாப்பிடுவார்கள். எமது கல்கத்தா நண்பர் ஒருவர், இவர் ஒரு பிராமணரே. நாம் கல்கத்தா சென்றிருந்த போது நண்பரும் மனையாழுமாக வந்து எம்மை மஹா இராமகிருஷ்ணர் வணங்கிய காளி கோவிலுக்கு அழைத்து போனார்கள். இது பிரசித்தி பெற்ற கோவில் கங்கை ஆற்றங்கரையில் உள்ளது நாம் எல்லோரும் கங்கையில் நீராடி காளிகோவில் தரிசனத்திற்கு சென்றோம் கோயிலின் அருகாமையில் அழகிய நந்தவனம் போன்ற ஓர் இடம் உண்டு அதில் யாரும் நிம்மதியாக இருந்து உணவு உண்ணலாம். நண்பரின் மனைவி எமக்கெல்லாம் உணவு தயாரித்து எடுத்து வந்திருந்தார். எடுத்து வந்த உணவுப் பாத்திரங்களை ஒவ்வொன்றாக திறந்தார். நாம் இருவரும் திடுக்கிட்டு அசந்து போனோம் மீன் வறுவல் மீன் குழம்பு முட்டை ரொட்டி சாதம் இவ்வாறாக கோயிலுக்கு சென்று வணங்கிவிட்டு கோயில் அருகாமையிலேயே புலால் உணவு சாப்பிடுவதற்கு தூக்கிவாரிப் போட்டது. எதையோ கூறி சமாளித்து கொண்டு வந்து இருந்த வாழைப் பழத்தை உண்டு சமாளித்தோம். நாமோ யாழ் வாசிகள் ஆறுமுகநாவலர் காட்டிய அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பவர்கள். அந்த வழக்கத்திற்கு பழக்கப்பட்டவர்கள் தானே.திரும்பி வரும்பொழுது வெளிப்படையாக எமது நடைமுறைகளை விளக்கினோம் அந்த அம்மா "after all fish is supplied to us by our mother Holy Ganga so we do not feel bad to eat fish it is holy fish too" என்றாரே.
எனது தம்பி குருபரன் கடற்படையில் உயர் பதவி வகித்தவன், குஜராத்திற்கு மேற்கொண்டு பயிற்சி பெற அரசால் அனுப்பப்பட்டவன். அங்கு இளம் மனைவியுடன் குடி புகுந்தான் மனைவிக்கோ வாரம் இரண்டு முறையாவது புலால் உண்டாக வேண்டும் . நிலைமையை சமாளிக்க மீன்அடைக்கப்பட்ட டப்பாக்களை எடுத்துப் போனான். வந்து போகும் வேலைக்கார அம்மா ஏதோ துர்நாற்றம் வருகிறது என்பாராம். மீன் சாப்பிடுகிறார்கள் என அறிந்தால் வேலையாட்கள் வீட்டிற்கு வர மாட்டார்கள் அதாவது புலால் அருந்துவது அத்தனை மோசமான செயல்.
● பரந்த பிரதேசத்தையும்
வேறுபட்ட கால நிலைகளையும் பல்வேறு மொழிகளையும்
தன்னுள்ளே கொண்ட இந்தியா ;ஒரு ஒரு பல்கலா சார நாடே. இந்துமத அனுட்டானங்ககளும் அதற்கமையவே
காணப்படுவதில் வயப்பில்லை
No comments:
Post a Comment