சிவஞானச் சுடர் ’ கலாநிதி பாரதி இளமுருகனார் (வாழ்நாட் சாதனையாளர்)
உ
சிவமயம்
ஊரோடு ஒற்றுமையாய்க் கொண்டாடும் பக்தர்களைச்
சீரோடு வாழவைக்கும் சேந்தனவன் திருவிழாவில்
தாரோடு பொலிந்திலங்கும் சண்முகன்வேல் அமர்ந்ததிருத்
தேரோடு வலம்வருவோர் தெருவெல்லாம் நிரம்பிடுவர்!
ஆதிரையான் சொரூபநிலைச் சிவமான செவ்வேளே!
சோதிவைவேல் தேரேறி அருள்பொழியு மிந்நாளில்;
சாதிவேறு பாடின்றிச் சகலரிலுஞ் சிவங்கண்டு
வீதிசுற்றி வெண்மணலில் தேரிழுக்க ஊர்திரளும்!
குன்றுதோறும்; குடியிப்போன் கொடுஞ்சூரன் வதைத்தன்று
வென்றுவாகை சூடியசெவ் வேள்முருகன் தேர்விழாவும்
என்றுதானோ வருமென்று இனிதேகாத் திருந்தவர்கள்
நன்றுவந்தோம் எனநல்லூர் நாடிவந்து கூடிடுவர்!
முருகனுக்கு அரோகராவென் றதிரவெழும் ஒலியலைகள்!
கருதடியர் ஓதிவரும் பண்ணிசையில் திருமுறைகள்!
பெருகிவரும் பக்தியொடு விரவிவரும் காவடிகள்!
திருமுருகன் விழாக்காணப் போதாதே இருவிழி;கள்!
காதலொடு உனையேத்திக் கண்பனிப்பப் பாடுவோரைச்
சோதனைசெய் யாதினிநற் சுகமருளிக் காப்பாயோ?
பேதலிக்கும் அடியவரைப் பெரிதுவந்து கரைசேர்க்கப்
பாதமலர் ஒளிகாட்டிப் பரமுத்தி அளிப்பாயோ?.
கோலமயில் மீதேறிக் கோதையர்கள் அருகிருக்க
வேலதனைக் கரம்பற்ற வெற்றிக்கொடி தூக்கியொளி
காலவருந் திருக்கோலம் கண்டடியர் மெய்சிலிர்ப்ப
ஆலவாயான் திருக்குமரா அற்புதத்தேர் ஏறிவாராய்!
முப்புரத்தை எரித்திட்ட முக்கண்ணன் சொரூபமானாய்
எப்பொழுதும் கதிநீயே என்றுதினம் உன்பெயரைச்
செப்பிநிற்கும் அடியாரைச் சேவ்வேளே தேரேறித்
தப்பிடாது காத்திடுவாய்! தயாபரனே முருகையா!
தேர்வடத்பை; பற்றிநின்று திருவீதி வலம்வருமெம்
ஊர்நடப்பி லுருக்குலைந்த ஒற்றுமையின்; சீர்கேட்டை
யாரிடத்து முறையிடுவோம்? நல்லைநகர்த் திருக்குமரா
கார்நிறத்து மால்மருகா! கடிதுவந்து காவாயோ?
சைவத்தைத் தேன்றமிழைத் தமிழரிடம் ஒற்றுமையை
மெய்வருந்தி வளர்த்திட்ட நாவலனார் இன்றில்லை
தெய்வப்பா பொழிந்ததங்கத் தாத்தாவும் இன்றில்லை
கைவந்த கலையெனவே காத்திடத்தேர் ஏறிவாராய்!
செந்தமிழைச்சிதைத்துவரும்புன்மதிகொண் டோர்மனதைக்
கந்தகுகா மாற்றியவர் மறந்துமினிக் கொடுந்தமிழைச்
சந்ததமும் வளர்த்திடாதோர் விந்தைசெயத் தேரேறிச்
சுந்தரனே திருவீதி வலம்வந்தே அருள்வாயோ?
உலகிலே எந்தச் சமயத்தைச் சார்ந்திருந்து எந்தக் கடவுளரை வழிபட்டு வந்தாலும், அந்தக் கடவுளாய் வெளிப்பட்டு ஆன்மா செய்யும் வழிபாட்டை ஏற்று அருள்பவன் சிவபெருமானே என்பதும், அதன் பயனை எந்தத் தெய்வ வடிவத்தை வணங்கிவரும் ஆன்மாவுக்கும்;; சிவபெருமானே அளித்தருள்வான் என்பதும் சைவ சித்தாந்தத்தின் விரிவுபட்ட கொள்கையாக உள்ளது. சைவர்கள் தங்கள் தங்களின் பக்குவ நிலைகளுக்கும் குல வழிபாட்டிற்கும் ஏற்ற வடிவங்களாக விநாயகப் பெருமாைனையும், முருகப்பெருமானையும், வைரவக் கடவுளையும், பிற கடவுளர் உருவங்களையும் வணங்கிவருகிறார்கள். இந்த வடிவங்கள் யாவும் சிவபெருமான் ஆன்மாக்களை ஈடேற்ற எடுக்கும் அருட்சக்தி வடிவங்களே அன்றி வேறொன்றுமில்லை.
இறைவன் முப்புரங்களையும் தனது புன்னகையாலே எரித்ததைப் பாவனையிற் காட்டும்
முகமாகச் செய்யப்பெறும் திருவிழாவே தேர்த்திருவிழா. இதனாலே .இந்த விழாவில்'கிருட்டிணகந்தம்'எனப்படும் கருஞ்சாந்தை இறைவனுக்கு அணிவது வழக்கம்;. மும்மலங்களையும் எரிப்பவர் இறைவனே என்ற உண்மைப்பொருளைக் குறிப்பதே
தேர்த்திருவிழா. . முழுமுதற்கடவுளான
சிவபெருமானையோ அல்லது சிவனின் அருட்சத்தி வெளிப்பாடான விநாயகப் பெருமான் - முருகப்
பெருமான் ஆகிய திருவுருவங்களையோ வழிபடும்பொழுது எமது பாசத்தை எரித்து எம்மை
ஆட்கொள்ளவேண்டும் " என்று
முழுமனத்துடன் வணங்கி இறைஞ்சுவது
அடியவர் கடப்பாடாகும்.
திருக்கோயில்களிற் செய்யப்பெறும் ஆண்டுத் திருவிழாக்களைத் தரிசிக்கும்
எல்லாவுயிர்களுக்கும் சாம்பவி தீக்கையாம் என்று ஆகமங்கள் கூறும்.
இவ்வாறு இறைவன் உயிர்களுக்கு வீடுபேறருளுதற் பொருட்டுச் செய்யும் ஐந்தொழில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் விளக்கிக் காட்டும் பாவனையாக மிகப் பழைய காலந்தொட்டு ஆண்டுத் திருவிழாக்களைச் செய்துவந்துள்ளனர். திருக்கோயில்களில் நிகழும் திருவிழாக்கள் அதனைத் தரிசிக்கும் எல்லா உயிர்களுக்கும் தீக்கைக் காலமாகி அவரவர் பத்திக்கேற்ப மலநீக்கத்தைத் தருதலினாலே நம் முன்னோர்கள் ஆண்டுக்கொருமுறை ஆகமவிதி வழுவாது திருவிழாக்களைச் செய்தும் செய்வித்தும் வந்துள்ளனர். கோயிலிலே நடைபெறும் திருவிழாக்களுக்குப்; பத்தியுடன் சென்று சிவனருளைப் பெறுவோமாக.
No comments:
Post a Comment