உலகச் செய்திகள்

இழுபறிக்கு மத்தியில் கெய்ரோவில் மீண்டும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஆரம்பம்

ஹசீனாவின் வீழ்ச்சி: சீனாவுக்கு பங்களாதேஷிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்

வேட்பாளர் நியமனத்தை ஏற்றார் கமலா ஹாரிஸ்

காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: மக்கள் தப்பியோட்டம்

இந்திய பிரதமர் நாளை உக்ரைனுக்கு இராஜதந்திர விஜயம்

தாய்லாந்திலும் குரங்கம்மை

காசா போர் நிறுத்த முயற்சியில் முன்னேற்றம் இன்றி அமெரிக்கா திரும்புகிறார் பிளிங்கன்


இழுபறிக்கு மத்தியில் கெய்ரோவில் மீண்டும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஆரம்பம்

மத்திய மற்றும் தெற்கு காசாவில் இஸ்ரேல் படை நடவடிக்கை உக்கிரம்

August 24, 2024 6:00 am 

மத்திய மற்றும் தெற்கு காசாவில் இஸ்ரேல் தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் புதிய சுற்றுப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேலிய பிரதிநிதிகள் நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு திரும்பியுள்ளனர்.

பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை முன்னேடுக்கும் வகையில் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட்டின் தலைவர் டேவிட் பார்னி மற்றும் உள்ளூர் பாதுகாப்பு சேவை தலைவர் ஷின் பெட் எகிப்து தலைநகர் பயணித்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பேச்சாளர் ஒமர் டொஸ்ட்ரி ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

10 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர எகிப்துடன் கட்டார் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தர்கள் முயன்று வருகின்றனர். கடந்த வாரம் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், காலம் கடந்து செல்வதாகவும் எதிர்வரும் நாட்களில் உடன்படிக்கை ஒன்று எட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

வடக்கு காசா பகுதியில் நேற்று மோதல்கள் நீடித்ததாகவும் மத்திய காசாவில் கடுமையான செல் குண்டுகள் வீசப்பட்டு வந்ததாகவும் தெற்கே ரபாவ நகரில் டாங்கிகள் குண்டுகளை வீசியதாகவும் அங்கிருப்போரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றொரு இராணுவ நடவடிக்கை ஒன்றுக்காக மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டதை அடுத்து மத்திய காசாவின் டெயிர் அல் பலா மற்றும் தெற்கு நகரான கான் யூனிஸில் இருந்து ஆயிரக்கணக்காக மக்கள் மீண்டும் வெளியேறி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்தப் போரினால் காசா மக்கள் தொகையில் 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இடம்பெயர்ந்திருப்பதோடு நோய்கள் பரவும் சூழலில் மக்கள் நீர் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் இன்றி அடைக்கலம் பெறுவதற்கு இடம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

காசாவில் அண்மைய வாரங்களில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தி வரும் சூழலில் மக்கள் அடைக்கலம் பெற முடியுமான பகுதி நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. இதனால் காசாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெறுமனே 15 சதுரமைல் பகுதிக்குள் தற்போது நெருக்கப்பட்டிருப்பதாக வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

‘மக்கள் முடிவு இன்றி அழிக்கப்பட்ட ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஓடியே களைப்படைந்தும் அச்சத்திலும் இருக்கின்றனர்’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. மனிதாபிமான இணைப்பாளர் முஹன்னத் ஹதி வியாழக்கிழமை குறிப்பிட்டார். ‘இப்படித் தொடர முடியாது’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

காசாவெங்கும் இஸ்ரேல் நேற்றுக் காலை நடத்திய தாக்குதல்களில் 12க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம், அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டது. இதில் கான் யூனிஸ், நுஸைரத் மற்றும் டெயிர் அல் பாலவிலேயே அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. காசா நகரின் செய்தூன் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றிலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

கான் யூனிஸில் பயங்கர தாக்குதல்களை நடத்தி படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த இஸ்ரேலியப் படை பெரும் அழிவுகளுக்குப் பின்னர் கடந்த ஏப்ரலில் அங்கிருந்து வாபஸ் பெற்றிருந்தது. எனினும் இன்னும் அங்கும் கட்டுப்பாட்டை உறுதி செய்ய முடியாத நிலையில் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதால் அங்குள்ள மக்கள் பெரும் அவலத்தை சந்தித்துள்ளனர்.

‘ஒவ்வொரு முறையும் நாம் எங்காவது சென்றடைந்து இரண்டு நாட்களிலேயே புதிய வெளியேற்ற உத்தரவு வந்து விடுகிறது. இங்கே வாழ வழியில்லை’ என்று ஹிதம் அப்தலாம் என்பர் குறிப்பிட்டார். காசாவில் ஒரு வருடத்தை நெருங்கும் போரில் கொல்லப்பட்டிருக்கும் பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,200ஐ தாண்டியுள்ளது.

இந்தப் போர் பிராந்தியத்தில் பரந்த போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் அதனை தவிர்ப்பதற்கு போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஈரான் தலைநகரில் வைத்து ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே படுகொலை செய்யப்பட்டது மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்ல முன்னணி தளபது ஒருவர் கொல்லப்பட்ட சம்பங்களை அடுத்து இஸ்ரேல் மீது பதிலடி கொடுப்பது தொடர்பில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ‘பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்கான நேரமாக இது உள்ளது’ என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மே மாதம் முன்வைத்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தற்போது போர் நிறுத்தப் பேச்சு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மூன்று கட்டங்கள் கொண்ட இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தில் கைதிகள் பறிமாற்றம் ஒன்றுக்கு வலியுறுத்தப்பட்டிருப்பதோடு இறுதிக் கட்டத்தில் முழுமையாக மற்றும் விரிவான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் காசாவில் மக்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ் பெற வேண்டும். எனினும் இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் புதிதாக நிபந்தனைகளை விதித்ததோடு காசாவில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்து முரணான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

குறிப்பாக காசாவின் எகிப்து எல்லையில் உள்ள பிலடெல்பியா தாழ்வாரம் மற்றும் மேலும் இரு இடங்களில் படைகளை நிலைநிறுத்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்பாட்டை எட்டுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

முன்னதாக கடந்த வாரம் கட்டார் தலைநகரில் இரண்டு நாள் பேச்சுவார்த்தை இடம்பெற்றபோது அதில் ஹமாஸ் அமைப்பு பங்கேற்கவில்லை என்பதோடு பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையிலேயே கெய்ரோவில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலின் லெபனான் எல்லை பகுதியில் இஸ்ரேலிய படை மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் கிட்டத்தட்ட தினசரி பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில் அது முழு அளவில் போர் ஒன்றாக வெடிக்கும் அச்சுறுத்தல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் லெபனானின் தெற்கிலுள்ள அல்தா அல் ஜபல் என்ற கிராமத்தில் வீடு ஒன்று மற்றும் கார் ஒன்றின் மீது இஸ்ரேலியப் படை நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எழு வயது சிறுவன் உட்பட இருவர் கொல்லப்பட்டதாக லெபனானின் நஹ்ர் செய்தி நிறுவனம் மருத்துவ வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.   நன்றி தினகரன் 





ஹசீனாவின் வீழ்ச்சி: சீனாவுக்கு பங்களாதேஷிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்

August 23, 2024 11:17 pm 

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளியேற்றம், அவர் தனது நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்படுத்திய பலவீனமான சமநிலையை சீர்குலைக்கலாம்.

பங்களாதேஷில் சீனாவின் தலையீட்டைத் தடுத்து நிறுத்த ஹசீனாவின் அரசாங்கத்துடன் தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தி வந்ததோடு அந்த நிலையிலும் மாற்றம் ஏற்படலாம் என அறியவருகிறது.மாறாக, வங்காள விரிகுடாவில் சீனா தனது இருப்பை வலுப்படுத்த வாய்ப்புள்ளது.

ஹசீனாவின் இராஜதந்திரம் மூன்று பாரிய சக்திகளுடன் சமநிலைப்படுத்தும் செயலால் வகைப்படுத்தப்பட்டது. பங்களாதேஷ் அதிகபட்ச சலுகைகளைப் பெற அனுமதிக்கும் அதேவேளை அதன் உள் விவகாரங்களில் சார்பு மற்றும் தலையீட்டைக் கட்டுப்படுத்துகிறது.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஹசீனா பதவி துறந்து வெளியேறுவதோடு பங்களாதேஷின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் சீனாவின் ஈடுபாட்டை அச்சுறுத்தலாகக் கருதும் இந்தியாவிற்கு பங்குகள் அதிகமாக இருக்கும் சூழ்நிலைகளை உருவாக்குகிறது. 2016 ஆம் ஆண்டில், சீனா உருவாக்க உத்தேசித்துள்ள சோனாடியா ஆழ்கடல் துறைமுகத் திட்டத்தை கைவிடுமாறு புது டெல்லி டாக்காவை கோரியது.

பங்களதேஷ் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு இடையிலான மீள்கப்பலேற்றல் ஏற்பாடுகளின் எதிர்காலம் குறித்தும் புது தில்லி அஞ்சுகிறது, டாக்காவில் உள்ள புதிய அரசாங்கம் அதைத் திருத்துவதற்கு ஆசைப்படலாம். இந்நிலையில், ஹசீனா வெளியேற்றப்பட்டது பின்னடைவாகும்.

2008 இல் ஹசீனா மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததைத் தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய நல்லுறவு ஏற்பட்டது. பாகிஸ்தானால் அடிக்கடி ஆதரிக்கப்படுவதாக கூறப்படும் பல பயங்கரவாத குழுக்களுடன் டாக்காவின் மெத்தனப் போக்கை முடிவுக்கு கொண்டு வந்தது. வர்த்தகம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் இந்தியாவுடன் ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்தையும் இது திறந்தது. ஹசீனாவின் கீழ், பங்களதேஷ் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் வருகையை சரிபார்க்க கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.

ஆனால் ஜனவரி 2024 தேர்தலைத் தொடர்ந்து ஹசீனா அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் எழுச்சியைக் அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டது.இது எதிர்க்கட்சி புறக்கணிப்பு மற்றும் வழக்கத்திற்கு மாறாக 40 சதவீத வாக்குப்பதிவு ஆகியவற்றால் குறிக்கப்பட்டது.

ஹசீனாவின் பதவிக்காலத்தில் சீனா பெரிதும் பயனடைந்தது. எவ்வாறாயினும், அது எப்போதும் அரசியல் நடுநிலைமையின் முகப்பை முன்வைப்பதால், பங்களாதேஷில் சீனாவைப் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் நேர்மறையானவையாக இருந்தன. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், 700 சீன நிறுவனங்கள் பங்களாதேஷில் செயற்பட்டன. ஜூலை 2024 இல் பீஜிங்கிற்கு ஹசீனாவின் விஜயத்தின் போது, ​​இரு நாடுகளும் தங்கள் உறவை ஒரு ‘விரிவான மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மைக்கு’ உயர்த்தின. பாதுகாப்பு ஒத்துழைப்பும் உறவின் முக்கிய அங்கமாக மாறியது. சீனா இரண்டு புதுப்பிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை பங்களாதேஷுக்கு வழங்கியது. பங்களாதேஷின் மிக முக்கியமான ஆயுத விநியோகஸ்தராக சீனா மாறியுள்ளது. 2010 மற்றும் 2020 க்கு இடையில் பங்காளதேஷின் ஆயுதக் கொள்முதல்களில் 73.6 சதவீதத்தை சீனா வழங்கியது. அவர்களின் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆயுத விற்பனை மற்றும் உள்கட்டமைப்புக் கட்டமைப்பிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அது பெருகிய முறையில் செயல்பட்டு வருகிறது. மே 2024 இல், சீனாவும் பங்காளதேசமும் தங்களின் முதல் இருதரப்பு இராணுவப் பயிற்சியை நடத்தியது.

சீனா-பங்களாதேஷ் ஒத்துழைப்பின் இராணுவ முக்கியத்துவம் மிகைப்படுத்தப் படக்கூடாது. 2024 மே மாதப் பயிற்சியானது ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. சீனாவுடனான பங்களாதேஷின் இராணுவ ஒத்துழைப்பு இன்னும் இந்தியாவுடனான அதன் ஒத்துழைப்பின் அடர்த்தியைக் கொண்டிருக்கவில்லை. இதில் 2009 மற்றும் 2023 க்கு இடையில் 11 இராணுவப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இருப்பினும், பங்களாதேஷ்-சீனா உறவு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கத்தைக் குறிக்கிறது.

பங்களாதேஷின் மிகப்பெரிய ஏற்றுமதித் தளமாக அமெரிக்கா உள்ளது.அதன் மொத்த ஏற்றுமதியில் 14.5 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் பங்களாதேஷுக்கான அமெரிக்க ஆயுத விற்பனை மந்தமாக உள்ளது.ஆனால் வாஷிங்டன் டாக்காவுடன் ஆற்றல்மிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணுகிறது. இருப்பினும், பங்களாதேஷின் சமீபத்திய இந்திய-பசிபிக் மூலோபாயத்தின் நடுநிலைமையை அமெரிக்கா புறக்கணிக்க முடியாது. பங்களாதேஷில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக பின்னுக்குத் தள்ளுவதற்கான ஒரு வாய்ப்பாக தற்போதைய சூழ்நிலைகளை அமெரிக்கா கருதுகிறது.

பங்களாதேஷின் எதிர்கால வெளியுறவுக் கொள்கை நோக்குநிலை இறுதியில் புதிய அரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்தது.   நன்றி தினகரன் 





வேட்பாளர் நியமனத்தை ஏற்றார் கமலா ஹாரிஸ்

August 24, 2024 6:00 am 

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

‘அனைத்து அமெரிக்கர்களின் சார்பிலும், கடினமாக உழைத்து, கனவுகளைத் துரத்தி, பிறரின் நலனைக் கருத்தில் கொண்டு நடக்கும் அனைவரது சார்பிலும் நான் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார் கமலா ஹாரிஸ்.

ஹாரிஸ் உரையாற்றுவதற்கு முன்னர் ஜனாதிபதி ஜோ பைடன் அவரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்ததாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கூறினார்.

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெற்ற நான்கு நாள் ஜனநாயகக் கட்சி மாநாடு நேற்று (23) நிறைவடைந்தது.   நன்றி தினகரன் 





காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: மக்கள் தப்பியோட்டம்

போர் நிறுத்தத்திற்கு நெதன்யாகுவிடம் பைடன் வலியுறுத்து

August 23, 2024 1:31 am 

மாஸ் போராளிகளுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலியப் படை மத்திய மற்றும் தெற்கு காசாவில் ஆழ ஊடுருவி வரும் அதே நேரம் அங்கு நடத்தும் சரமாரி தாக்குதல்களில் நேற்றும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்வதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை அறிவித்திருக்கும் நிலையிலேயே புதிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

பல மாதங்கள் நீடிக்கும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தமது நிபந்தனைகளில் உறுதியாக இருக்கும் நிலையில் எந்த முன்னேற்றமும் காண முடியாதுள்ளது.

வடக்கு காசாவின் பெயித் லஹியா நகரில் வீடு ஒன்றை இலக்கு வைத்து நேற்று (22) நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதோடு மத்திய காசாவின் அல் மகாசி அகதி முகாமில் இடம்பெற்ற தாக்குதலில் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மேலும் அறுவர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. தெற்கு காசாவில் இடம்பெற்ற  வெவ்வேறு தாக்குதல்களில் மேலும் ஐவர் பலியாகியுள்ளனர்.

மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ் மற்றும் தெற்கின் கான் யூனிஸ் நகரில் படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதன்போது இராணுவ கட்டுமானங்கள், ரொக்கெட் குண்டுகள் அமைந்திருக்கும் இடங்கள் தகர்க்கப்பட்டு போராளிகள் பலரும் கொல்லப்பட்டதாகவும் அந்த இராணுவம் கூறியது.

பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் போர் நிறுத்த முயற்சியில் எந்த முன்னேற்றமும் இன்றி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா திரும்பினார். இதனையடுத்தே ஜோ பைடன் மற்றும் நெதன்யாகு இடையெ நேற்று முன்தினம் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவந்து காசாவில் உள்ள இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகளை விடுவித்து இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பல பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றை விரும்புவதாக ஹமாஸ் அமைப்பு குறிப்பிடுகிறது. எனினும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் நிறுத்தம் ஒன்றை எட்டத் தவறி இருப்பதாக அது குற்றம்சாட்டியுள்ளது.

ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டாலேயே போர் முடிவுக்கு வரும் என்று கூறும் நெதன்யாகு பணயக்கைதிகளை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒரு தற்காலிக போர் நிறுத்தமாகவே அமையும் என்று கூறி வருகிறார்.

இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என சுமார் 1 மில்லியன் மக்கள் தங்கி இருப்பதாக குறிப்பிடப்படும் மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வின் கிழக்கில் இருந்து டாங்கிகள் முன்னேறி வருவதாகவும் அருகாமையில் உள்ள தெற்கு நகரான கான் யூனிஸுடனான நகரின் சில வீதிகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய டாங்கிகள் கான் யூனிஸின் அல் கராரா மற்றும் ஹமாத் பகுதிகளில் மேற்கை நோக்கி முன்னேறி வரும் நிலையில் மேலும் பல குடும்பங்கள் தமது தற்காலிக முகாம்கள் மற்றும் கூடாரங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர். சில நேரங்களில் டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்துவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்குவதற்கு இடம் அல்லது முகாம்களை கண்டுபிடிக்க தவறிய சிலர் வீதிகளிலும் கடற்கரைகளிலும் உறங்கி வருகின்றனர்.

‘கடந்த இரவு ஆளில்லா விமானங்கள் கூடாரங்களை சுட ஆரம்பித்தன, நாம் கீழே படுத்துக்கொண்டோம். சில மணி நேரம் சென்றிருக்கும், டாங்கிகள் நெருங்கி வருவதுபோல் சத்தம் உரக்கக் கேட்டது. எனவே அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்தோம்’ என்று கான் யூனிஸில் இருந்து 48 வயதான அல் கலயீனி தொலைபேசி மூலம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

‘நாம் 48 பேர் கொண்ட ஐந்து குடும்பங்கள் இருக்கிறோம். கடற்கரையை நோக்கி நாம் ஓட்டம் பிடித்தோம். சிலர் வீதிகளிலும் மற்றும் சிலர் கடற்கரை மணலிரும் கூடாரங்கள், போர்வைகள் மற்றும் மெத்தைகள் எதுவும் இன்றி உறங்கிறோம். சிறுவர்கள் மற்றும் பெண்கள் எவ்வளவு பயந்திருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் பலஸ்தீனர்கள் இடையே போர் நிறுத்தம் பற்றி ஏமாற்றம் அதிகரித்து வருவதாக கலயீனி குறிப்பிட்டார்.

‘இந்தப் பேச்சுவார்த்தை காலவிரயமானது. நெதன்யாகு தான் செய்வதை தொடர்வதற்கு அவகாசம் வழங்குவதே அவர்களின் நோக்கம். டாங்கிகள் நுழையாத அல்லது குண்டுகள் வெடிக்காத எந்த இடமும் இங்கு இல்லை. எங்கும் இனியும் பாதுகாப்பு இல்லை’ என்றார்.

2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் 10 மாதங்களுக்கு முன் போர் ஆரம்பித்தது தொடக்கம் பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் கூட இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

நேற்றுடன் 321 நாட்களை தொட்ட காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் 40,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குக் கரையில் மூவர் பலி

இதேவேளை, காசா போரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் நீடிக்கும் நிலையில் துல்கராமில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று (22) நடத்திய வான் தாக்குதலில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

துல்கராமில் உள்ள தமது படைப் பிரிவு இஸ்ரேலிய படையுடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான இசதீன் அல் கஸ்ஸாம் படை அறிவித்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இங்கு கூரைகளில் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளை நிறுத்தி இருக்கும் இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள கட்டடங்களை தகர்க்க புல்டோசர்களையும் அனுப்பியுள்ளது. மேற்குக் கரையின் பல நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் இஸ்ரேல் சுற்றிவளைப்புகளை நடத்தியதாகவும் பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

காசா போரினால் இஸ்ரேலின் லெபனான் எல்லையிலும் பதற்றம் நீடிக்கிறது. இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானுக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தியதை அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதியில் ரொக்கெட் குண்டுகளை வீசியது.

கடந்த புதன் இரவு தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் பக்கா பள்ளத்தாக்கில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஆயுதக் களஞ்சிய வசதிகள் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இந்தத் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் 30 பேர் காயமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதற்கு பதிலடியாக கோலன் குன்றில் இஸ்ரேலிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து ரொக்கெட் தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது. இதில் இரு வீடுகள் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் நிர்வாகம் தெரிவித்தது.   நன்றி தினகரன் 





இந்திய பிரதமர் நாளை உக்ரைனுக்கு இராஜதந்திர விஜயம்

August 22, 2024 4:28 pm 

உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கியின் விஷேட அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (23) உக்ரைனுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொள்கிறார்.

உக்ரைனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 30 வருடங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகள் ஆரம்பமான போதிலும் இந்திய பிரதமர் ஒருவர் அங்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் (மேற்கு) தம்மய லால் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் உக்ரைனுக்கான விஜயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க விஜயம். இவ்விஜயம் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்ட உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

தற்போது உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இரு வருடங்களுக்கும் ​மேல் யுத்தம் நீடிக்கின்றது. இம்மோதலுக்கு அமைதி வழியில் தீர்வு காண சாத்தியமான அனைத்து ஆதரவையும் பங்களிப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இராஜதந்திரம் மற்றும் உரையாடலால் மாத்திரமே இம்மோதலுக்கு நீடித்த தீர்வைக் காண முடியும் என்ற மிகத் தெளிவான நிலைப்பாட்டை இந்தியா பேணி வருகிறது. அதுவே நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் விருப்பங்களால் மட்டுமே நீடித்த அமைதியை அடைய முடியும்.

இரு நாடுகளுடனும் இந்தியா சிறந்த நட்புறவைக் கொண்டுள்ளது. இந்த நட்புறவு மிகவும் தனித்துவமானவை. பிரதமர் பதவியை மூன்றாவது தடவையாக ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதலில் விஜயம் செய்த நாடும் ரஷ்யா தான் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   நன்றி தினகரன் 






தாய்லாந்திலும் குரங்கம்மை

August 22, 2024 3:32 pm 

தாய்லாந்தில் ஆபிரிக்காவில் இருந்து கடந்த வாரம் வந்த ஐரோப்பியர் ஒருவரிடம் குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் ஆபத்தான நோய் பிறழ்வினால் பதிக்கபட்டுள்ளாரா, என்பது குறித்து உறுதி செய்வதற்கு சோதனை முடிவுக்காக காத்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி தாய்லாந்தை வந்தடைந்த 66 வயது நோயாளியிடமே குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் தொஹ்சாய் குறிப்பிட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 800 குறங்கம்மை தொற்றுச் சம்பங்கள் பதிவாகியுள்ளபோதும் வேகமாகப் பரவும் ஆபத்தான நோய் பிறழ்வு கண்டுபிடிக்கப்படவில்லை.

குரங்கம்மையை உலக பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தபோதும், அந்த நோய்த்தொற்று மற்றொரு கொவிட்-19 பரவலாக மாறிவிடாது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருப்பதால் அதனை கட்டுப்படுத்த முடியுமாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 




காசா போர் நிறுத்த முயற்சியில் முன்னேற்றம் இன்றி அமெரிக்கா திரும்புகிறார் பிளிங்கன்

-இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் பலி

August 22, 2024 11:32 am 

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு தவறிய நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (21) பிராந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். பரந்த அளவிலான போர் ஒன்றை தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக இது உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எனினும் காசாவில் இஸ்ரேல் நேற்றும் உக்கிர தாக்குதல்களை நடத்தியதோடு கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் அந்தப் பகுதியில் மேலும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்கும்படி ஹமாஸை வலியுறுத்திய பிளிங்கன், காசாவின் எதிர்காலம் தொடர்பில் இஸ்ரேலுடன் வெளிப்படையாக முரண்பாட்டார்.

காசாவில் போர் வெடித்த பின்னர் கடந்த 10 மாதங்களில் ஒன்பதாவது முறையாக பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிளிங்கன் கட்டார், எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு பயணமானார். அந்தப் பயணங்களை முடித்துக் கொண்ட அவர் ‘நேரம் முக்கியமானது’ என்று வலியுறுத்தினார்.

‘கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், நல்லவர்களுக்கு மிக மோசமான விடயங்கள் நடக்கக் கூடும்’ என்று நேற்று (21) டோஹாவில் இருந்து விமானத்தில் புறப்படும் முன்னர் குறிப்பிட்டார்.

‘இது (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட வேண்டும், எதிர்வரும் நாட்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதனை அடைவதற்கு நாம் முடியுமான அனைத்தையும் செய்வோம்’ என்று அவர் போர் நிறுத்தம் தொடர்பில் குறிப்பிட்டார்.

போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு இடையூறாக இருக்கும் இடைவெளிகளை நிரப்பும் யோசனைகளை அமெரிக்கா முன்வைத்து வருவதோடு, கெய்ரோவில் இந்த வாரம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹமாஸ் அமைப்பை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவின் எகிப்துடனான எல்லையான பிலடல்பியா தாழ்வார பகுதியின் கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்கவைப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இந்த எல்லை பகுதியை இஸ்ரேல் ஹமாஸிடம் இருந்து கைப்பற்றியதோடு இங்குள்ள இரகசிய சுரங்கப்பாதை வழியாக ஆயுதங்கள் காசாவுக்கு கொண்டுவரப்படுவதாக இஸ்ரேல் கூறி வருகிறது.

காசாவில் இருந்து துருப்புகள் வாபஸ் பெறும் அட்டவணை மற்றும் இடம் தொடர்பில் இஸ்ரேலுடன் ஏற்கனவே இணக்கத்தை எட்டி இருப்பதாக பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அங்கு இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடர்வதை அமெரிக்கா நிராகரித்திருப்பதாக நெதன்யாகுவின் கருத்துகள் தொடர்பில் பிளிங்கனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் குறிப்பிட்டார். நெதன்யாகுவின் வலுவான அறிக்கை போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு உதவாது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

காசா எல்லை பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி இருப்பது தொடர்பில் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கையை செய்து கொண்ட முதல் அரபு நாடான எகிப்து அதிருப்தி அடைந்துள்ளது.

இரு முஸ்லிம் புனிதத் தலங்களின் காவலாராக உள்ள சவூதி அரேபியா உட்பட அரபு உலகம் மற்றும் இஸ்ரேல் இடையே இயல்புநிலையை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் நெதன்யாகுவை சமரசம் செய்ய பிளிங்கன் முயற்சித்தார்.

இந்நிலையில் பிளிங்கனை சந்தித்த எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி, ‘போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றார்.

போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் ஹமாஸ் ஆர்வம் காட்டுகின்றபோதும் அமெரிக்காவின் புதிய போர் நிறுத்த முன்மொழிவில் இஸ்ரேல் முன்வைத்திருக்கும் புதிய நிபந்தனைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

எகிப்துடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு காசாவில் ரபா நகர் மீது இஸ்ரேலியப் படை நேற்றுக் காலை சரமாரியாக குண்டுகளை வீசியது. இதன்போது நான்கு சடலங்களை மீட்டதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரபா நகரின் மேற்கே அல் மவாசியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கி இருக்கும் கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள அல் காதிப் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டுன் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வின் பல சுற்றுப்புறங்களில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் இராணுவம் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நகரின் தெற்கு பகுதியில் பல இடங்களும் ‘அபாயகரமான போர் வலயம்’ என்பதை காட்டும் வரைபடம் ஒன்றை இஸ்ரேல் இராணுவம் எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்டுள்ளது.

அங்குள்ள போராளிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் மக்கள் மேற்கு பக்கமாக உடன் வெளியேற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நாம் எங்கே போவது? எங்கே தான் போவது?’ என்று வடக்கு காசாவில் உள்ள காசா நகரில் இருந்து வந்த 55 வயது அபூரக்கன் என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அவர் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஐந்து முறை இடம்பெயர்ந்துள்ளார்.

‘அவர்கள் எம்மை நெருங்கி வருகிறார்கள் என்று உணர்கிறேன். அச்சுறுத்தல் பகுதிக்கு சில நூறு மீற்றர் தூரத்தில் நான் இருக்கிறேன். காலை தொடக்கம் டெயிர் அல் பலாஹ், கான் யூனிஸ் அல்லது நுஸைரத்தில் எஞ்சியுள்ள இடத்தை நான் தேடி வருகிறேன்’ என்று சாட் செயலி வழியாக கருத்துக் கூறியபோதும் அவர் தெரிவித்தார்.

‘துரதிருஷ்டவசமாக இந்தப் போரின் முடிவைக் காண்பதற்கு முன் நாம் இறக்கக்கூடம். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாமே பெய்யானது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தல் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,223 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 92,981 பேர் காயமடைந்துள்ளர்.

காசா போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்திருக்கும் சூழலில் தெற்கு லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் மேற்குக் கரையில் ஆட்சி புரியும் பத்தா அமைப்பின் அதிகாரியான கலீல் மகாதா கொல்லப்பட்டுள்ளார்.

மகாதா மற்றும் அவரது சகோதரரான மூத்த பத்தா உறுப்பினர் முனீர் ஆகியோர் லெபனானில் இருந்து ஈரான் புரட்சிக் காவல் படையுடன் இணைந்து செயற்படுவதாகவும் மேற்குக் கரைக்கு பணம் மற்றும் ஆயுதங்களை கடத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.   நன்றி தினகரன் 

No comments: