செந்தமிழ் வழக்;கும் கொடுந்தமிழ் வழக்கும் (சென்ற வாரக் கட்டுரையின் தொடர்ச்சி)


சிவஞானச் சுடர்   பாரதி இளமுருகனார்       வாழ்நாட் சாதனையாளர்.

~செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்து முந்து நூல் கண்டு என்றும் வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே~ என்றும்  தொல்காப்பியத்தின் பாயிரத்திலே காணப்படும் வாக்கின்படி தொல்காப்பியர் காலத்திருந்தே அவரின் தமிழ் நடையாக உயர்ந்தோர் வழக்காகச்  செந்தமிழ் நடை இருந்துள்ளது என்பது புலனாகிறது. செந்தமிழ் மொழியிலே  புலமைகொண்ட உயர்ந்தோராகிய  சான்றோரால்  உலக வழக்குக்கும் செய்யுள் வழக்குக்கும் அமைய இலக்கணம் செய்யப்பெற்றதைத் தொடர்ந்து (இதற்கமைய) இலக்கியங்கள் தொன்றுதொட்டு ஆக்கம் பெற்றன.

மொழியின் சிறப்பியல்புகள் எதுவிதத்திலும் மாறாதபடியும் திரிபடையா வண்ணமும் இலக்கண அமைதிப்பாட்டுடன் வளர்ந்து என்றும் அழிவில்லாதிருக்கும் எண்ணரிய செந்தமிழ் நூல்களைத்  தன்னகத்தே கொண்டு இன்றுவரை நிலைத்திருப்பது செந்தமிழ் வழக்கு.    உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் பயிலப்பட்டு வரும் சொற்கள் இயற்சொல் - திரிசொல் - வடசொல் - திசைச்சொல் என நான்கு வகைப்படும். தொல்காப்பியரும் ~இயற்சொற்றாமே செந்தமிழ் நிலைத்து வழக்கொடு சிவணித்தம் பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே~என்றார். இயற்சொல்லாவது தமிழர்கள் இயல்பாகப் பேசுதற்கும் உரைநடையாக எழுதுதற்கும் தொன்றுதொட்டுப் பாவனையில் இருந்து வருவது.

கற்றார்க்கும் கல்லாதார்க்கும் தன்; பொருள்  எளிதிலே  விளங்கக்கூடியது.  மக்கள் இலகுவாகக் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு ஏதுவாக உள்ளது. உரைநடை இலக்கியங்களுக்குக் கூடுதலாகப் பாவிக்கப்பெறுவதும் இயற்சொற்களே!. 

புதுச்சொல் ஆக்கங்களால்   தமிழ்ச் சான்றோர் காலத்துக்குக் காலமாக உலக வழக்குச் சொற்களை இலக்கண நெறியுக்கமையப்  பெருக்கிவந்தமையால் தமிழ்மொழிக்கு வளஞ் சேர்த்தனர். தகுந்த காரணத்துடன்றான் தமிழ்ச் சான்றோர் கல்லாதாரின் இழிவழக்கை ஏற்காது கற்றோரின் உயர்வழக்கையே உலக வழக்காகிய சான்றோர் வழக்கென்று கொண்டு அதற்கு நிலைத்திருக்கக் கூடிய தனி மரபை வரையறை செய்து வந்துள்ளனர். இக்காலத்தில் தொற்றுநோய் போன்று பெருகிவரும் சிறுகதை இலக்கியம் செய்துவருவோர் பயன்படுத்தும் இழிவழக்குச் சொற்கள் வருங்காலத் தமிழ்ச் சந்ததியின் தமிழ்ப் பயன்பாட்டிலே புகுந்து கொடுந்தமிழ் ஆட்சி செய்துவருமானால் செந்தமிழ்ச் சொற்களெல்லாம் பொருளிலே மாற்றமடைவதுடன் சிதைந்து அழிவுறும். இதையே தொல்காப்பியனாரும்  ~மரபுநிலை திரியிற் பிறிது பிறிதாகும்~ என்று என்றோ அறிவுறுத்தினார். கல்லாதார் மாட்டு எவ்வண்ணம் உலக வழக்குச் செந்தமிழ்ச் சொற்கள் மாறுபட்டு கொடுந்தமிழ் வழக்காகிறது என்பதற்கு ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

உலகநடைச் செந்தமிழ்ச் சொற்கள் இன்று எப்படித் திரிவடைந்து கொடுஞ்சொற்களாகப் பெருமளவிலே குறிப்பாகச் சிறுகதை எழுத்தாளர்களாலும் பிறராலும் பாவிக்கப்பெற்று வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

 

செந்தமிழ்ச் சொற்கள்

  திரிபடைந்து பாவனையில்உள்ள கொடுந்தமிழ்ச் சொற்கள்

ஆண்பிள்ளை

ஆம்பிளை

பெண்பிள்ளை

பொம்பிளை

பிள்ளை

புள்ளை

இளநீர்

இளநி

கடற்கரை

கடக்கரை

கைமாற்று

கைமாத்து

சிவப்பு

சிகப்பு

சுவர்

சிவர்

சுருட்டு

சுறுட்டு

கிரகணம்

கிராணம்

புடவை

பிடவை

பிட்டு

புட்டு

திறப்பு

துறப்பு

பன்றி

பண்டி

பாகற்காய்

பாவக்காய்

நாற்றம்

நாத்தம்

ஓன்று

ஓண்டு

அகப்பை

ஏப்பை

ஆற்றங்கரை

ஆத்தங்கரை

பனாட்டு

பினாட்டு

நுங்கு

நோங்கு

அப்பம்

ஆப்பம்

இடியப்பம்

இடியாப்பம்

கோபம்

கோவம்

தின்றான்

கண்டான்

கொன்றான்;

கொண்டான்

பார்த்தான்

பாத்தான்

வந்தது

வந்திட்டு  வந்தா  வந்துது

போனது

போச்சு  போயிட்டு

அவன்  அவள்

உவன் உவள் அது

அவளினுடையது

அவளின்ரை

அவனுடைது

அவன்ரை

ஆவர்கள்; இவர்கள்

அவங்க   இவங்க

செய்கிறார்கள்

செயினம்

மகன்

மோனை  மோன்

மகள்

மோள்

சொன்னார்

சொல்லிச்சு

தேநீர்

தேத்தண்ணி

காற்றில் காற்று

 காத்தில்  காத்து

முகம்

மூஞ்சி

ஐந்து

அஞ்சு

கொடுத்தான்

குடுத்தான்

உபாத்தியாயர்

வுாத்தியார்

இங்கே

இஞ்சை

தீபாவளி

தீவாளி

பூக்கும்

பூர்க்கும்

திறப்பு

துறப்பு

வெற்றிலை

வெத்திலை

கிரகணம்

கிறாணம்

புகையிலை

பொயிலை

மண்வெட்டி

மம்பட்டி

சமையற்;காரி

சமயக்காரி

சமையல்

சமயல்

இவர்கள்

இதுகள்

முதலை

முதளை

பருந்து

பிராந்து

இவர்களின்

இவங்களின்

தேவை

தேள்வை

சில

சிலது

பல

பலது

அன்றைக்கு

அண்டைக்கு

எத்தனை

எத்தினை

வயிறு

வகிறு

அகப்பை

ஏப்பை

தண்ணீர்

தண்ணி

வாங்கித்தருவேன்

வேண்டித்தாறன்

கொடு

குடு

காப்பாற்று

காப்பாத்து

வந்திட்டீர்களா

வந்துட்டியளா

கிணற்றில்

கிணத்திலை

இத்தோடு

இத்துடன்

நாகரிகம்

நாகரீகம்

இராமன்

ராமன்

இரசித்தேன்

ரசித்தேன்

உருசி

ருசி

எல்லாவற்றையும்

எல்லாத்தையும்

இரத்தம்;

ரத்தம்

ஐயாவிடம்

ஐயாட்டை

வருகிறது

வருகுது

பின்பு

பிறகணை

வருகிறேன்

வாறனணை

பழக்கம்

புழக்கம்

இராசாத்தி

ராசாத்தி

இலட்சம்

லட்சம்

பார்த்தான்

பாத்தான்

 

 

மேலே தரப்பெற்ற உதாரணங்கள் ஒரு சிலவாகும். இப்படி ஏராளமான சொற்கள் திரிபடைந்தும் கொடுந்தமிழ்ச் சொற்களாகப் பாவிக்கப்படுகின்றன. சில சொற்கள் ஆங்கிலம் இந்தி தெலுங்கு ஆரியம் மற்றும் சிங்களம் போன்ற பிறமொழிச் சொற்கள் ஆகும். இந்தச் சொற்கள் எல்லாம் புதுமை எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்தே எடுக்கப்பெற்றவை.மேலே குறிப்பிட்ட கொடுந்தமிழ்ச் சொற்களும் ஆங்கில உச்சரிப்புடன் அப்படியே எழுதும் சொற்களும் நாளடைவிலே செந்தமிழ் வழக்கை முற்றாகச் சிதைந்துவிடுமே என்பதைத் தமிழ் ஆர்வலர்கள் நன்றாக உணரவேண்டும். இலக்கண வரம்பும் அந்தந்த மொழிகளிலே புலமையுடைய சான்றோரின் வரையறைவும் இல்லாத சில மொழிகள் நாளடைவிலே முற்றாக அழிந்த வரலாற்றை மொழிநூல் வல்லுனர்களின் கூற்றுக்களினால் அறியக்கூடியதாக உள்ளது. இதே நிலை எமது செந்தமிழுக்கும் வராது பாதுகாப்பது எமது கடமையன்றோ?

------------  ~செந்தமிழ் வழக்;கும் கொடுந்தமிழ் வழக்கும் ~ தொடரும் …..

 

 

 

 

No comments: