இலங்கைச் செய்திகள்

இலவச வீசாவின் கீழ் 35 நாட்டு பிரஜைகளுக்கு இலங்கை வர வாய்ப்பு

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு; 12 நாடுகளின் பிரதிநிதிகள் வருகை

யாழ். நகருக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி விஜயம்

இன்று முதல் நடைமுறையாகும் புகையிரத பயணிகளுக்கான e-Tickets

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு யாழில் முன்னாயத்த செயலமர்வு 


இலவச வீசாவின் கீழ் 35 நாட்டு பிரஜைகளுக்கு இலங்கை வர வாய்ப்பு 

- ஒக்டோபர் 01 முதல் 06 மாதங்களுக்கு அமுல்

August 23, 2024 6:00 am 

பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, சுவிட்ஸர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகளுக்கு வீசா இல்லாமல் இலங்கை வருவதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைக்கு சமர்ப்பித்த இந்த யோசனைக்கு  அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், டென்மார்க், போலாந்து, கசகஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, பிரான்ஸ், இத்தாலி, இஸ்ரேல், பெலாரஸ், ​​ஈரான், சுவீடன், கட்டார், ஓமான், பஹ்ரைன் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு இதே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே  அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 06 மாத காலத்துக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இலவச வீசாக்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலா வீசாக்களை இலவசமாக வழங்குவது தொடர்பாக பிற நாடுகள் பின்பற்றும் முறைகளை ஆய்வு செய்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்க நிபுணர் குழுவை நியமிப்பதற்கு கடந்த 25-04-2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்த்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அன்று நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கையுடன் சுற்றுலாத்துறையில் போட்டியிடும் 08 நாடுகள் தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த அறிக்கையை அமைச்சரவையின் கவனத்துக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காகவும் மேற்படி பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் 06 மாத காலத்துக்கு அதிகபட்சம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் 35 நாடுகளுக்கு இலவசமாக வீசா வழங்குவதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி 35 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 06 மாதங்கள் வரை கட்டணம் ஏதுமின்றி இலவச வீசாவை பெறலாம். இந்த வீசா 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் மற்றும் அந்நிய செலாவணி ஈட்டுதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போட்டித் தன்மையுடனான சுற்றுலா ஊக்குவிப்பு பிரசாரத்தின் மூலம் அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பை இலங்கை பெறுகிறது. இது ஒரு முன்னோடித் திட்டமாக 35 நாடுகளுக்கு 06 மாதங்களுக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் இலவச வீசா வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.   நன்றி தினகரன் 





ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு; 12 நாடுகளின் பிரதிநிதிகள் வருகை 

August 24, 2024 9:15 am 

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக பன்னிரண்டு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட 12 நாடுகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. இதேவேளை ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு இலங்கைக்கு வந்துள்ளது. இதற்கு மேலதிகமாக பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகள் குழுவும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

அந்த அமைப்பு விடுத்த கோரிக்கைக்கு இணங்க தேர்தலை கண்காணிக்க அனுமதிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளை கண்காணித்த பின்னர் இந்த அமைப்புகள் விசேட அறிக்கைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






யாழ். நகருக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி விஜயம் 

August 24, 2024 1:00 am 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அவருக்கு

பொன்னாடை போர்த்தியும் கெளரவித்தனர். இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த முதலாவது தமிழர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை இன்று பிற்பகல் 3.00 மணிக்கு யாழ். நகரில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே திராவிடர் கழகத் தலைவர் வீரமணி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்கினராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வீரமணி நினைவுப்பேருரை நிகழ்த்துவார். சிறப்புரையை தென்னிந்திய திருச்சபையின் ஆயர் கலாநிதி வி.பத்மதயாளன் நிகழ்த்துவார்.   நன்றி தினகரன் 







இன்று முதல் நடைமுறையாகும் புகையிரத பயணிகளுக்கான e-Tickets 

- கைத்தொலைபேசி, இணையத்தளத்தின் ஊடாக சேவை ஆரம்பம்

August 23, 2024 10:07 am 

இலத்திரனியல் புகையிரத பயணச்சீட்டுகளை (e-ticket) கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று (23) முதல் செயற்படுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.prawesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அனைத்து ரயில் பயணங்களுக்குமான பயணச்சீட்டுகளை இந்த முறையின் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 





ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு யாழில் முன்னாயத்த செயலமர்வு 

August 23, 2024 1:03 am 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு, யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (21) இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது. இதன்போது, உரையாற்றிய  தெரிவத்தாட்சி அலுவலர், 
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தேர்தல் சுமுகமாகவும், நீதியாகவும் நடைபெற  ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன், இதில் கிராம அலுவலர்களின் பங்களிப்பும் காத்திரமானது எனத் தெரிவித்தார்.இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில், கிராம அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் விளக்கமளித்திருந்தார்.

இச் செயலமர்வில் மாவட்டத்தின் அனைத்து நிர்வாக கிராம அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    (கோப்பாய் குறூப் நிருபர்) - நன்றி தினகரன் 


No comments: