வைரம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 


1972ம் வருடம் ஹிந்தியில் வெளிவந்த படம் விக்டோரியா நம்பர் 203. நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களே வெளிவந்து வெற்றி கண்டு கொண்டிருந்த கால கட்டத்தில் பட வாய்ப்புகள் ஓரளவு குறைந்த நிலையில் இருந்த குணச்சித்திர நடிகர் அசோக் குமார், வில்லன் நடிகர் பிரான் இருவரும் பிரதான பாத்திரம் ஏற்று இப் படத்தில் நடித்திருந்தார்கள். திரையுலகில் வாய்ப்புகள் அருகியிருந்த நிலையில் இருந்த சைராபானு இப் படத்தில் கதாநாயகியாக நடித்து மீண்டும் திரையுலகில் ஒரு சுற்று வந்தார். இப்படி வெற்றிப் படமாக அமைந்த இந்த விக்டோரியா 203 படத்தை தமிழ் தயாரிக்க தீர்மானமாகி படத்துக்கு வைரம் என்று பெயரிடப்பட்டது.


சங்கரலிங்கம் சாரட் வண்டி ஓட்டி தன் இரு மகள்களுடன் வாழ்ந்து

வருகிறார். செந்தில் நாதன் என்ற கடத்தல் மன்னன் கண்ணாயிரம் என்பவனைப் பயன் படுத்தி மியூசியம் ஒன்றில் இருக்கும் வைரங்களை கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறான். அவர்கள் செய்யும் வைரத் திருட்டு , எதிர்பாராத விதத்தில் கோஷ்டி மோதலாக மாறுகிறது. இதன் காரணமாக கண்ணாயிரம் கொல்லப் படுகிறான். கொலைக்கான பழி வண்டியோட்டி சங்கரலிங்கம் மீது விழ அவர் சிறை செல்கிறார். இரு சகோதரிகளும் நிர்கதியாகின்றனர். மூத்தவள் ராணி குடும்பத்தை காக்க ஆண் வேடம் போட்டு சாரட் வண்டியை ஓடுகிறாள். அதே சமயம் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபடுகிறாள். வைர மாளிகையில் இருந்து கொள்ளையடிக்கப் பட்ட மூன்று கோடி ரூபாய் பெறுமதியான வைரங்கள் ஓர் இடத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியும் செந்தில்நாதன் அதனை அடையும் நோக்கில் தேடுகிறான். அதே சமயம் சிறையில் இருந்து வெளியே வரும் சாமி, துரை இருவரும் வைரம் பற்றி கேள்விப்பட்டு அவர்களும் அதனை தேடுகின்றனர்.கொள்ளையடிக்கப் பட்ட வைரங்கள் எங்கே மறைக்கப் பட்டுள்ளன என்பதே சஸ்பென்ஸ்.

இப்படி உருவான படத்தின் கதையை ஹிந்தி பட கதாசிரியர் கே.ஏ. நாராயண் எழுதியிருந்தார். அக் கதைக்கான வசனங்களை டி . என். பாலு எழுதினார். வசனங்களில் அவருடைய வசன ஜாலம் வெளிப்பட்டது. பாடல்களை கண்ணதாசன் எழுத டி . ஆர். பாப்பா இசையமைத்தார். ஜெயலலிதா, எஸ் .பி. பி பாடிய இரு மாங்கனி போல் இதழ் ஓரம் பாடலை தவிர மற்றைய பாடல்கள் எடுபடவில்லை. ஆனால் பாப்பாவின் பின்னணி இசை கவரும் படி இருந்தது.

படத்தின் ஹீரோ என்றால் அசோகனுக்கு, எம் ஆர் ஆர் வாசுவும்தான். இணை பிரியா நண்பர்களாக படம் முழுவதும் இருவரும் வருகிறார்கள். அசோகன் பெண் சபலமும், டியூப் லைட் அறிவுடனும் இயங்க, வாசு தெளிவுடனும், அவதானத்துடனும் செயல் படுகிறார். ஆனால் படம் முழுவதும் இவர்களின் கோமாளித்தனமும், சேட்டைகளும்தான். இவர்களின் கூத்துக்கு மத்தியில் ஜெய்சங்கரின் வேடம் ஓரம் கட்டப்பட்டு விட்டது எனலாம். ஆனாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை.


படத்தில் கதாநாயகி ஜெயலலிதா. ஆண் வேடம் போடுகிறார், சாரட் வண்டி ஓட்டுகிறார்,கார் ஓட்டுகிறார், கவர்ச்சி உடையில் வந்து வில்லனை மயக்க ஆடிப் பாடுகிறார். ஆனாலும் ஹிந்தியில் சைராபானுவை கண்ட கண்களுக்கு தமிழில் ஜெயலலிதாவை காண கஷ்டமாக இருக்கிறது. அதிலும் வில்லனை ஆடிப் பாடி மயக்கும் கட்சியில் சைராபானுவின் கவர்ச்சியையும், நளினமும் ஜெயலலிதாவிடம் மிஸ்ஸிங்! ஸ்ரீகாந்த் சில காட்சிகளில் வந்து போகிறார். ஆர். எஸ் . மனோகரின் வில்லத்தனம் ஓகே. எஸ் வி ராமதாஸ், ஒரு விரல் கிருஷ்ணராவ் , எஸ் வி. சகஸ்ரநாமம், சச்சு ஜெயக்குமாரி , ஜஸ்டின் ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்தில் சாரட் வண்டி சம்பந்தப் பட்டதால், சென்னையில் அதன் பாவனை இல்லாததால் கதையை மைசூரில் நடப்பதாகக் காட்டி அங்கேயே காட்சிகளையும் எடுத்திருந்தார்கள். ஆனால் அவை கலரில் இல்லையே!

அசோக்குமார், பிரான் நடித்த வேடங்களில் சிவாஜி, ஜெமினி

இருவரையும் நடிக்க வைத்து தமிழில் இப் படத்தை தயாரிக்கும் திட்டம் முதலில் பாலாஜிக்கு இருந்தது. ஆனால் பின்னர் இத் திட்டம் கை விடப்பட்டு ராமண்ணா இயக்கத்தில் படமானது. சிவாஜி, ஜெமினி நடிப்பில் உனக்காக நான் படத்தை பின்னர் பாலாஜி தயாரித்து வெளியிட்டார்.


ஹிந்தியில் ஈஸ்ட்மென் கலரில் வந்த படத்தை தமிழில் கறுப்பு வெள்ளைப் படமாக அமிர்தம் ஒளிப்பதிவு செய்தார். ஹிந்தியில் இருந்ததை மாற்றமில்லாமல் தமிழில் இயக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தார் ராமண்ணா.

No comments: