இலங்கைச் செய்திகள்

 இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவு

இஸ்ரேல் பயணமாகும் இலங்கையின் முதல் கட்டுமான குழு

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – ‘அவுஸ்திரேலியா மைக்ரோ அபிவிருத்தி இன்க்’ இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் காலமானார்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்


இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவு

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் உறுதி

April 11, 2024 8:34 am 

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று  (10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார்.

அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட பொது நிதி, பணம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும்  வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் அர்பணிப்பாக பணியாற்றுவதாகவும் சலிவன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான  உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு,  இந்து –  பசுபிக் வலயத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான இருநாடுகளினதும் அர்ப்பணிப்பையும் வலியுறுத்துகிறது.   நன்றி தினகரன் 





இஸ்ரேல் பயணமாகும் இலங்கையின் முதல் கட்டுமான குழு

April 11, 2024 4:01 pm 

இஸ்ரேலில் நிர்மாணத் துறையில் பணிபுரியச் செல்லும் 125 பேர்கள் கொண்ட முதல் குழுவினர்களுக்கு விமான பயனச் சீட்டுக்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கேட்போர் கூடத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நேற்று(10) வழங்கப்பட்டது .

கட்டுமானப் பணிகளுக்காக செல்லும் முதல் குழு இதுவாக உள்ளது இப்பயணம் பயனுள்ளதாகயும் , அவத்தமிக்கதாக அமைய வாய்ப்புக்கள் இருக்கின்றன எனவே வேலை செய்யும் முதல் குழுவாக பொறுப்புடன் பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர், வலியுறுத்தினார்.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர்,

முதல் குழு சாதகமாக கருதப்படுகிறது, ஆனால் ஆபத்தானது. உங்கள் பயணம் நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானது. முதல் குழுவாக இருப்பதால், இஸ்ரேலுக்கு முதல் வேலைக்குச் சென்ற தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது அதிக சம்பளம் பெறும் அதிர்ஷ்டம் உங்களுக்கு உள்ளது. . அங்கு கிடைக்கும் வருமானம் இலங்கையில் ஒரு நாள் சம்பளத்தை விட அதிகமாகும். அங்கு நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பற்றியோ அல்லது மற்ற வேலைகளைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வருவாயை அதிகரிப்பதன் மூலம், சம்பளத்தை இரட்டிப்பாக்கி, அதிக வருவாய் ஈட்டும் குழுவாக நீங்கள் மாறலாம்.

அபாயகரமான பகுதிகளில் வேலைகளை முறையாக கையாள விட்டால் கையாளப்படாவிட்டால், அது எதிர்காலத்தில் அங்கு வேலைக்கு செல்ல இருக்கும் 20,000 இலங்கையர்களைப் பாதிக்கும்.
நீங்கள் கட்டுமான தளத்தில் அல்லது மனிதவள நிறுவனத்தில் தங்கலாம். இலங்கையை போன்று ஆடம்பர வாழ்க்கையை எதிர்பார்க்கக் கூடாது அங்கு இருக்கும் சிலர் சலவை இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகள் போன்ற வசதிகளை நாடுகின்றனர்.நாம் ஜயகாமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் மூலம் இஸ்ரேலில் நிர்மாண துறையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஆட்களை பதிவு செய்யும் போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இளைஞர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதாக குற்றம் சாட்டியது

மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் வலுவான, தன்னிறைவு பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு சவால் விடும் என்று கூறியது. இருப்பினும், இஸ்ரேலில் வேலை செய்பவர்களின் சம்பளம் ரூ. 600,000, அவர்களின் குடும்பப் பொருளாதாரத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. அவர்கள் நாடு திரும்பியதும், அவர்கள் தொழில்முனைவோராக மாறி, நாட்டில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.”
எனவே முதலாம் குழுவினர் எதிர்வரும் 13 ஆம் தேதி இஸ்ரேல் புறப்பட்டு செல்ல இருக்கின்றது என அமைச்சர் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 





தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – ‘அவுஸ்திரேலியா மைக்ரோ அபிவிருத்தி இன்க்’ இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

April 10, 2024 12:20 pm

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் மைக்ரோ அபிவிருத்தி இன்க் ஆகியவற்றுக்கிடையிலான ஆங்கில கல்வியை அபிவிருத்தி செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இணையவழி ஊடாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் அவுஸ்திரேலியாவின் மைக்ரோ அபிவிருத்தி இன்க் பிரதிநிதிகள் தொழில்நுட்பத்தின் ஊடாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கு ஒலியியல் விழிப்புணர்வு மற்றும் ஒலிப்பு கற்பிப்பதற்கான குறுகிய பாடநெறியை தொடர்வதற்கான முன்னேற்பாடாகவே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

ஒப்பந்தமானது நாட்டிலுள்ள ஆங்கில ஆசிரியர்கள் இப்பாடத்திட்டத்தை கற்பதன் மூலம் எதிர்காலத்தில் ஆங்கில அறிவை மேலும் விருத்தியடையச் செய்ய முடியுமென அவர் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சர்வதேசரீதியாக பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புக்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திடப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (ஒலுவில் விசேட நிருபர்)   நன்றி தினகரன் 






பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் காலமானார்

April 9, 2024 11:53 am 0 comment

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65ஆவது வயதில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் – நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலை நிகழ்வொன்றில் வயலின் இசை வழங்கிக் கொண்டிருந்த நேரம் சுகவீனம் ஏற்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் அதிகாலை காலமானார். நாச்சிமார் கோவிலை அண்மித்த பகுதியிலுள்ள அன்னாரின் வீட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.

(யாழ்.விசேட நிருபர்) - நன்றி தினகரன் 





நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்

April 14, 2024 11:47 am 

மலர்ந்திருக்கும் குரோதி தமிழ் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று (14) காலை இடம்பெற்றன.

குரோதி புதிய வருடப்பிறப்பினை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தில் புதுவருட சிறப்பு வழிபாட்டு பூஜைகள் இடம்பெற்றன.

இவ்வுற்சவத்தினை ஆலய பிரதம குரு வ. வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரிகள் நடாத்தி வைத்தனர்.

வசந்த மண்டபத்தில் அலங்கார கந்தன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட கிரியைகள் இடம்பெற்று, முருகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருந்து எழுந்தருளியாக வீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பு. கஜிந்தன்

நன்றி தினகரன் 



No comments: