படகோட்டி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் நடிப்பில் கலரில் தயாராகும் படம் , மீனவர்களின்


வாழ்வைப் பற்றிய படம் , ஐந்து எழுத்தில் படத்துக்கு பெயர் வேண்டும் என்று சரவணா பிலிம்ஸ் ஜி என் வேலுமணி சொன்னவுடன் படகோட்டி என்ற பெயரை சொல்லி நூறு ரூபாய் பரிசை பெற்றுக் கொண்டார் கவிஞர் வாலி. 1964ம் ஆண்டு உருவான இந்தப் படம் தான் எம் ஜி ஆர் நடித்த முதல் ஈஸ்ட்மென் கலர் படமுமாகும். அதற்கு மேலும் மெருகூட்டும் வண்ணம் கேரளாவில் எடுக்கப் பட்ட வெளிப்புற காட்சிகளும் , கடற்கரை காட்சிகளும் அசத்துகின்றன !


1964ம் வருடம் எம் ஜி ஆர் நடிப்பில் ஏழு படங்கள் திரைக்கு வந்தன.

அவற்றில் கலரில் உருவான ஒரே படம் இதுதான். இதே ஆண்டில் சிவாஜி நடிப்பில் ஈஸ்ட்மென் கலரில் கர்ணன், புதிய பறவை என்று இரண்டு படங்கள் வெளிவந்த சமயம் தானும் கலரில் ஒரு படம் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் எம் ஜி ஆர் இருந்தார். சின்னப்பா தேவர், ராமண்ணா, என்று எம் ஜி ஆரை போட்டு தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இருக்கையில் எம் ஜி ஆரின் முதல் ஈஸ்ட்மென் கலர் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு ஜி என் வேலுமணிக்கு கிட்டியது. சிவாஜியின் தயாரிப்பாளர் என்று முத்திரை குத்தப்பட்ட வேலுமணி , அவரிடம் இருந்து விலகி எம் ஜி ஆர் நடிப்பில் பணத்தோட்டம் படத்தை தயாரித்து பணம் பார்த்து விட்டு அடுத்து தயாரித்த படம் படகோட்டி. மீனவர்களுடைய கதையை பின்புலமாக கொண்டு உருவான இதில் மீனவ குப்பம் ஒன்றின் தலைவராக எம் ஜி ஆர் நடித்தார்.

இரண்டு மீனவக் குப்பங்கள் . ஒன்றின் தலைவன் மாணிக்கம் படித்த இளைஞன். தன் இனத்துக்காக பாடுபடுபவன். மற்றைய குப்பத்தில் தலைவன் அலையப்பன் வில்லனின் அடிமை. அவனின் சூழ்ச்சிக்கு தன் இனத்தை பலியாக்குபவன். இரண்டு இனமும் சேர வேண்டும் என்று மாணிக்கம் பாடு படுகிறான். அதற்கு அலையப்பனின் மகள் முத்தழகியும் உதவுகிறாள். மாணிக்கத்துக்கும் அவளுக்கும் இடையில் உள்ள காதலை அறிந்து கொள்ளும் முதலாளி அவர்களை பிரிக்க சதி செய்கிறான். மக்கள் ஆதரவுடன் மாணிக்கம் எவ்வாறு அதனை முறியடித்து இரு குப்பத்துக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறான் என்பதே கதை.

மாணிக்கமாக வரும் எம் ஜி ஆர் படம் முழுவதும் வண்ண வண்ண ஷேர்ட் , சாரம் அணிந்து வருகிறார். பாடல், காதல், சண்டை காட்சி என்று எல்லாவற்றிலும் தூள் கிளப்புகிறார். ஒன்டிரண்டு காட்சிகளில் உணர்ச்சிகாரமாகவும் நடிக்கிறார். அவருக்கு இணை சரோஜாதேவி. கலரில் அவரை பார்க்க வித்யாசமாக இருக்கிறது. காதல் காட்சிகளில் நெருக்கத்தையும், சோக காட்சிகளில் உரு க்கத்தையும் காட்டி நடித்திருந்தார் . நாகேஷ் , ஏ வீரப்பன், மனோரமா மூவரும் நகைச்சுவைக்கு இருந்தும் பெரியளவில் எடுப்படவில்லை. அசோகன் அடியாளாக வந்து அடிபடாமல் போகிறார்.


படத்தில் எல்லோரையும் கவர்பவர் எம் என் நம்பியார்தான். என்ன மிடுக்கு, என்ன பார்வை , கட்டுமஸ்தான தன் உடம்பை காட்டுவதோடு , காட்சிக்கு காட்சி விதவிதமான உடைகள் அணிந்து வந்து ஸ்டைலாக அசத்துகிறார். வழக்கமான அப்பா நடிகர்களை ஒதுக்கி விட்டு இளம் நடிகர் எஸ் வி ராமதாஸ் இதில் அப்பா வேடம் ஏற்று தன் திறமையை காட்டியிருந்தார். இவர்களுடன் ஜெயந்தி, திருப்பதிசாமி, கே விஜயன் , புத்தூர் நடராஜன், ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்தின் கதையை நன்னு எழுத , சக்தி கிருஷ்ணசாமி வசனங்களை

எழுதியிருந்தார். படத்தின் கதாபாத்திரங்களுக்கு கடல் சார் பெயர்களை வைத்திருப்பதை பாராட்டலாம். படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுத , விசுவநாதன் ராமமூர்த்தி இருவரும் இசை வழங்கினார்கள். சும்மா சொல்லக் கூடாது எல்லாப் பாடல்களும் சூப்பர். கொடுத்ததெல்லாம் கொடுத்தான், தொட்டால் பூ மலரும், பாட்டுக்கு பாட்டெடுத்து , தரை மேல் பிறக்க வைத்தான் , என்னை எடுத்து தன்னைக் கொடுத்து , கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு, நான் ஒரு குழந்தை என்று எல்லா பாடல்களும் படத்துக்கு வரமாக அமைந்தன.

குளு குளு வண்ணத்தில் பி எல் ராய் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜம்புவின் படத்தொகுப்பு ஓகே. சியாம்சுந்தர் அமைத்த சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன.


பிரபல இயக்குனர் டி பிரகாஷ்ராவ் படத்தை இயக்கியிருந்தார். அவர் இயக்கிய ஒரே எம் ஜி ஆர் படமும் இதுதான். தீபாவளி வெளியீடாக வந்து நூறு நாட்கள் ஓடி படம் வெற்றி கண்டது. இலங்கையில் , கொழும்பில் , பொரளை நகரில் லிடோ திரையரங்கு கட்டப்பட்டு அங்கு திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப் படமும் படகோட்டி தான்!

No comments: