உலகச் செய்திகள்

ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மூன்று பிள்ளைகள் பலி

 ஏழாவது மாதத்தை எட்டியது காசா போர்: உக்கிர தாக்குதல்களுக்கு இடையே கெய்ரோவில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஆரம்பம்

கான் யூனிஸில் இருந்து வாபஸ் பெற்ற இஸ்ரேல் படை ரபாவை தாக்க திட்டம்

இலங்கை மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

பழிக்கு பழி.. வடக்கு இஸ்ரேலில் பாய்ந்த 40 ஏவுகணைகள்! தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரானின் ஹிஸ்புல்லா


ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

April 12, 2024 11:35 am 

ஈரானிய மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ‘இரும்புக் கவசமாக’ ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

பத்து நாட்களுக்கு முன் சிரியாவில் உள்ள ஈரானிய துணைத் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதில் தாக்குதல் ஒன்றை நடத்தும் அச்சுறுத்தல் பற்றி பைடன் எச்சரித்துள்ளார்.

‘இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய எம்மால் ஆன அனைத்தையும் நாம் மேற்கொள்வோம்’ என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த புதனன்று பேசிய ஈரானி உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி கமனெய், டஸ்கஸில் இஸ்ரேல் நடத்தி தாக்குதல் ஈரான் மீதான தாக்குதலுக்கு சமமாக இருந்தது என்றார்.

‘அவர்கள் எமது துணைத்தூதரக பகுதி மீது தாக்கியபோது, அது எமது நிலத்தை தாக்கியது போன்று இருந்தது’ என்றார். ‘தீய அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு அது தண்டிக்கப்படும்’ என்றும் கூறினார்.

ஈரான் எவ்வாறான பதில் தாக்குதல் ஒன்றை நடத்தும் என்பது குறித்து பல ஊகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலிய மண்ணில் இராணுவ மற்றும் அரச இலக்குகள் மீது ஈரான் அல்லது அதன் ஆதரவுக் குழு விரைவில் தாக்குதல் ஒன்றை நடத்தும் என்று நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுகளை மேற்கோள்காட்டி ப்ளூம்பர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், அதிக துல்லியமான ஏவுகணைகளைக் கொண்டு எதிர்வரும் நாட்களில் சாத்தியமான இந்தத் தாக்குதல் நிகழக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் இராணுவ ஒத்திகைக்காக ஈரான் தலைநகர் டெஹ்ரன் வான் பரப்பில் அனைத்து விமானப் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் மஹ்ர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டஸ்கஸ் தாக்குதலை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலான இஸ்ரேல் உஷார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அது பாரிய போர் ஒன்றுக்கு தூண்டுதலாக அமைப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனினும் பாரிய போர் ஒன்றுக்கான ஈரானின் இராணுவ திறன் தொடர்பில் அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு மாற்றாக ஹிஸ்புல்லா போன்ற ஈரான் ஆதரவு அமைப்புகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்த வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. ஏற்கனவே ஹிஸ்புல்லா அண்டை நாடான லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இஸ்ரேலிய தூதரகங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களாக இருக்காது என்று ஈரானிய அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரித்திருந்தார். இதனால் துணைத்தூதரகங்கள் சாத்தியமான இலக்குகளாகவும் மாறியுள்ளன.

ஈரான் துணைத் தூதரகத்தின் மீது கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் மூத்த இராணுவத் தளபதிகள் உட்பட பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் இன்னும் பொறுப்பேற்காதபோதும், இதன் பின்னணியில் அது இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. அது தொடக்கம் அமெரிக்காவும் பிராந்தியத்தில் உஷார் நிலையை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடனான சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய பைடன், இந்த பதற்ற நிலை குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.

‘பிரதமர் நெதன்யாகுவிடம் நான் கூறியது போன்று, ஈரான் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்களிடம் இருந்து வரும் இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பாக எமது பொறுப்பு இரும்புக் கவசமாக இருக்கும் என்பதை நான் மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்’ என்று பைடன் குறிப்பிட்டார்.

காசா போர் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான முறுகல் அதிகரித்திருக்கும் நிலையிலேயே பைடன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பைடன் மற்றும் நெதன்யாகுவுக்கு இடையிலான முறுகல் அதிகரித்தபோதும் இஸ்ரேல் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கும் அமெரிக்கா கடுமையான பதிலை அளிக்கும் என்ற செய்தியை ஈரானுக்கு வழங்க அமெரிக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் ஈராக் வெளியுறவு அமைச்சர்கள் ஈரானிய வெளியுறவு அமைச்சரை இந்த வாரம் சந்தித்துப் பேசவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதன்போது பதற்றத்தை தணிப்பது பற்றி பைடனின் மத்திய கிழக்குக்கான ஆலோசகர் பிரெட் மக்குர்க்கின் செய்தியை ஈரானிடம் தெரிவிக்க இந்த அமைச்சர்கள் முயலவுள்ளனர்.   நன்றி தினகரன் 


இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மூன்று பிள்ளைகள் பலி

- ஆயினும் போர் நிறுத்த நிலைப்பாட்டில் அவர் தொடர்ந்தும் உறுதி

April 12, 2024 6:35 am 

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், இஸ்ரேலின் வான் தாக்குதலில் தனது மூன்று மகன்கள் கொல்லப்பட்டது போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் தாக்கம் செலுத்தாது என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்துள்ளார்.

கொய்ரோவில் இடம்பெற்று வரும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இந்தக் கொலைகளை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் கட்டாரைத் தளமாகக் கொண்ட அல் ஜசீரா தொலைக்காட்சியில் பேசிய ஹனியே, தனது மூன்று மகன்கள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் கொல்லப்பட்ட தாக்குதல் ஹமாஸின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

‘இதனால் ஹமாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்று நினைத்தால், அவர்கள் மயக்கத்தில் இருக்கிறார்கள்’ என்று அவர் குறிப்பிட்டார்.

போர் நிறுத்தத்திற்கான புதிய முன்மொழிவை ஆராய்ந்து வருவதாக ஹமாஸ் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அந்த அமைப்பு ‘முன்னோக்கி நகர வேண்டும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா, போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதோடு, முற்றுகையில் உள்ள காசாவுக்கு உதவிகள் செல்வதை அதிகரிப்பதற்கும், தெற்கு நகரான ரபா மீது திட்டமிடப்பட்டிருக்கும் படையெடுப்பை கைவிடவும் வலியுறுத்தி வருகிறது.

நெதன்யாகு போரை கையாளும் விதம் தவறாக இருப்பதாக கடந்த செவ்வாயன்று வழங்கிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பைடன் குறிப்பிட்டிருந்தார். பின்னர் இஸ்ரேல் காசாவுக்கு போதுமான உதவிகளை அனுமதிப்பதில்லை என்று அவர் கடந்த புதனன்று குற்றம்சாட்டி இருந்தார்.

போர் நிறுத்த அழைப்புக்கு மத்தியிலும் காசா மீது இஸ்ரேல் நேற்றைய (11) தினத்திலும் உக்கிர தாக்குதல் நடத்தியதோடு குறிப்பாக தெற்கில் அது தீவிரமாக இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதில் வடக்கு காசாவின் அல் ஷட்டி அகதி முகாமில் வைத்து குடும்பத்தினர் பயணித்த கார் ஒன்றை இலக்கு வைத்து கடந்த புதனன்று (10) இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலிலேயே கட்டாரைத் தளமாகக் கொண்ட ஹமாஸ் தலைவர் ஹனியேவின் மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

இதில் தாக்குதலுக்கு இலக்கான கார் உருக்குலைந்திருப்பதையும் அதனை பலஸ்தீனர்கள் பார்வையிடுவதையும் காட்டும் புகைப்படங்களை ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘ஹாசிம், ஆமிர் மற்றும் முஹமது ஆகிய எனது மூன்று மகன்கள் மற்றும் சில பேரக் குழந்தைகளும் அவர்கள் சென்ற கார் தாக்கப்பட்டதில் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்’ என்று ஹனியே குறிப்பிட்டார்.

இந்த செய்தி கேள்விப்பட்ட விரைவில் அவர் கருத்துத் தெரிவித்தபோது, ‘ஹமாஸ் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை இலக்கு வைப்பதன் மூலம் எமது மக்களின் உறுதியை குலைக்க முடியும் என்று ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) நம்புகின்றனர்’ என்றார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த காசா போரில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 33,500 ஐ தாண்டியுள்ளது. இதில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்திலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நீடித்து வருகிறது.

டோஹாவில் உள்ள ஹமாஸ் பேச்சாளர் ஹொசம் பத்ரான் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது, ‘முன்வைக்கப்பட்டிருக்கும் முன்மொழிவை ஹமாஸ் ஆராய்ந்து வருகிறது… இன்னும் அதற்கு பதிலளிக்கவில்லை’ என்றார்.

இதில் நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக சுமார் 40 பணயக்கைதிகள் பரிமாற்றம் மற்றும் ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றுக்கு இந்த முன்மொழிவு பரிந்துரைத்துள்ளது.

கடந்த புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய பைடன், ‘தற்போது ஹமாஸின் கைகளிலேயே உள்ளது.மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவை கொண்டு ஹமாஸ் முன்னோக்கி நகர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் போரை கையாளும் விதம் மற்றும் அது காசாவுக்கான உதவிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் சர்வதேச அளவில் விமர்சனம் வலுத்து வருகிறது.

காசாவில் இஸ்ரேலின் சமமற்ற பதில் நடவடிக்கை மத்திய கிழக்கின் சீர்குலைவு மற்றும் ஒட்டுமொத்த உலகிலும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் எச்சரித்துள்ளார்.

பரந்த அளவிலான அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்பப் புள்ளி ஒன்றாக குறுகிய எதிர்காலத்தில் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரிப்பது குறித்து உறுதி அளித்திருக்கும் பல மேற்கத்திய நாடுகளில் ஆஸ்திரியா, அயர்லாந்துடன் ஸ்பெயினும் உள்ளது.   நன்றி தினகரன் 

ஏழாவது மாதத்தை எட்டியது காசா போர்: உக்கிர தாக்குதல்களுக்கு இடையே கெய்ரோவில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஆரம்பம்

April 8, 2024 6:00 am 

காசா போர் நேற்றுடன் (07) ஏழாவது மாத்தை அடைந்ததோடு புதிய அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றுக்கான முயற்சி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று மீண்டும் ஆரம்பமானது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையிலான மறைமுகமான பேச்சுவார்த்தையில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. தலைவர் பில் பர்ன்ஸ் மற்றும் கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசிம் அல்தானி ஆகியோர் எகிப்து மத்தியஸ்தர்களுடன் இணைந்ததாக எகிப்தின் அல் கஹரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் முழுமையான போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படைகள் அங்கிருந்து வாபஸ் பெறுவதை பிரதான நிபந்தனைகளாக விதித்து வரம் ஹமாஸ் தனது பிரதிநிதிகளை கெய்ரோவுக்கு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளது. இதில் ஹமாஸ் பிரதித் தலைவர் கலீல் அல் ஹய்யா தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்றை ஹமாஸ் கெய்ரோவுக்கு அனுப்பியுள்ளது. காசாவில் ஏழு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை மிக அரிதாக ஏற்றுக்கொண்டு இரு அதிகாரிகளை நீக்கியதாக இஸ்ரேல் குறிப்பிட்டிருப்பதோடு, காசா விரைவில் பஞ்சம் ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்திருக்கும் நிலையிலேயே இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிட்சன்’ அமைப்பின் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கண்டனத்தை வலுக்கச் செய்திருப்பதோடு சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. “நகரும் அனைத்தும் ஆறு மாதங்களாக இலக்கு வைக்கப்பட்டு வருவது தெரிகிறது” என்று மேற்படி தொண்டு அமைப்பின் நிறுவனரான ஜோஸ் அன்ட்ரஸ் ஏ.பி.சி. செய்தி நிறுவத்திற்கு குறிப்பிட்டார். “இந்தப் போர் மனித குலத்திற்கு எதிரானது” என்று சுட்டிக்காட்டினார். தொண்டுப் பணியாளர்களின் மரணம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான முறுகலை அதிகரித்திருப்பதோடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இடையே கடந்த வாரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலிலும் அது பிரதிபலித்தது. உடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு வலியுறுத்திய பைடன், முதல் முறையாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவை நிபந்தனைக்கு உட்படத்தினார். பொதுமக்கள் கொல்லப்படுவதை குறைப்பது மற்றும் மனிதாபிமான நிலையை மேம்படுத்துவதற்கு பைடன் தனது உரையாடலில் நெதன்யாகுவுக்கு நிபந்தனை விதித்திருந்தார். காசாவில் உள்ள 2.4 மில்லியன் மக்களும் குண்டு மழை மற்றும் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு கடும் உதவியை நாடி இருப்பதாக வடக்கு காசாவைச் சேர்ந்த 52 வயதான ஆறு குழந்தைகளின் தந்தையான முஹமது யூனிஸ் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘இதற்கு அரையாண்டுகள் ஆகிவிட்டது, பட்டினி தொடர்கிறது’ என்று தற்போது உடைந்த கட்டடம் ஒன்றில் வசிக்கும் அந்த ஆடவர் கூறினார். ‘எமது குழந்தைகளின் மெலிந்த உடல்களை பார்க்க ஆன்மாவை பறிக்கிறது. உதவியற்றவனாகவும் அவமானப்படுத்தப்பட்டவனாகவும் உணர்கிறேன். குண்டுவீச்சுகள், உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் பொதுமில்லையா? இன்னும் உடல்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. துர்நாற்றம் வீசுகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடன்பாட்டை எட்ட அழுத்தம்

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து ஆரம்பமான இந்தப் போர் தற்போது ஏழாவது மாதத்தை தொட்டிருக்கும் நிலையில் போர் தொடர்ந்து உக்கிரமாக இடம்பெறுவதோடு இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. கான் யூனிஸ் நகரில் ஏவுகணைகள் கொண்டு மூன்று இஸ்ரேலிய டாங்கிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை கூறியது. இதில் 14 இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த பதிலும் கூறப்படாதபோதும் காசாவில் தமது நான்கு துருப்புகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. இதில் அல் அமல் சுற்றுப்புற பகுதி மற்றும் அல் அமல் மருத்துவமனைக்குள் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருவதாக கான் யூனிஸ் நகரின் மேற்கில் செயற்படும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் சிக்கி இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு குழுவினர் மற்றும் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் காசாவில் இஸ்ரேல் தரைவழி போர் நடவடிக்கையை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட துருப்புகளின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்திருப்பதாக அந்த இராணுவம் கூறியது. எனினும் இந்தப் போர் காரணமாக ஒட்டுமொத்தமாக 604 துருப்புகள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இதில் 41 படையினர் தமக்குள் தவறுதலாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் 184 ஆவது நாளாகவும் நேற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில் மேலும் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. காசாவின் தெற்கில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களில் உள்ள பொதுமக்கள் இல்லங்கள் மீது இஸ்ரேலின் உக்கிர வான் தாக்குதல்கள் நீடித்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. இதில் கான் யூனிஸின் கிழக்காக உள்ள அல் சம்மா கிராமம் மற்றும் பனி சுஹைலா சிறு நகரை நோக்கி இஸ்ரேலிய துருப்புகள் சூடு நடத்தியதாகவும் இதனால் பலர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அங்குள்ள வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ஏழு மாதங்களை தொட்டிருக்கும் போரில் காசாவில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர். இந்நிலையில் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட 47 வயது இஸ்ரேலிய விவசாயியான எலட் கட்ஸிரின் உடலை தெற்கு கான் யூனிஸில் இருந்து மீட்டதாக இஸ்ரேலி இராணுவம் தெரிவித்துள்ளது. இவரை பிடித்த பலஸ்தீன ஜிஹாதிக்களால் இவர் கடந்த ஜனவரி நடுப்பகுதியில் கொல்லப்பட்டிருப்பதாக உளவுத் தகவல்களை மேற்கோள்காட்டி இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் கூட்டணியான இஸ்லாமிய ஜிஹாத் இது தொடர்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. பலஸ்தீன போராளிகளால் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 253 பணயக்கைதிகளில் கட்ஸிரும் ஒருவராவார். தொடர்ந்து சுமார் 130 பணயக்கைதிகள் காசாவில் இருப்பதாக நம்பப்படுவதோடு இவர்களில் 30 பேர் வரை மரணித்திருப்பதாக நம்பப்படுகிறது. இஸ்ரேலின் இரண்டு வார சுற்றிவளைப்பினால் வெறும் இடிபாடுகளாக மாறியிருக்கும் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையை அணுகுவதற்கு உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. காசா நகர மருத்துவமனை மனிதப் புதைகுழிகளுடன் தற்போது வெறிச்சோடி காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார். அந்த மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு தமது குழு குறைந்து ஐந்து உடல்களை கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஆரம்பமானதையொட்டி, ஹமாஸ் அமைப்புடன் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு இணக்கத்தை பெறும்படி எகிப்து மற்றும் கட்டார் தலைவர்களை பைடன் கேட்டுள்ளார். கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்திற்கு பின்னரான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழனன்று நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசியபோது, உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு தமது பேச்சு வார்த்தையாளர்களுக்கு அதிகாரத்தை வழங்கும்படி பைடன் வலியுறுத்தியதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்தார்.   நன்றி தினகரன் 


கான் யூனிஸில் இருந்து வாபஸ் பெற்ற இஸ்ரேல் படை ரபாவை தாக்க திட்டம்

April 9, 2024 6:28 am 0 comment

மரண வாடையை எதிர்கொண்ட ஊர் திரும்பிய மக்கள்

தெற்கு காசா மற்றும் அதன் பிரதான நகரான கான் யூனிஸில் இருந்து இஸ்ரேல் தனது துருப்புகளை வாபஸ் பெற்ற நிலையில் காசாவின் தென் கோடியில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகர் மீதான படை நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான காசா போருக்கு அரையாண்டுகள் எட்டிய நிலையிலேயே கடந்த ஞாயிறன்று (07) தெற்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறப்பட்டு பிரதான நகரான கான் யூனிஸுக்கு மக்கள் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அறிவிப்பில், ‘ரபா உட்பட எதிர்கால படை நடவடிக்கைகளுக்கு தயாராவதற்கு பல மாத போருக்குப் பின்னர் கான் யூனிஸ் நகரை விட்டு துருப்புகள் வெளியேறின’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா மீது இஸ்ரேல் திட்டமிட்டிருக்கும் படை நடவடிக்கை குறித்து உலக நாடுகள் கடும் கவலையை வெளியிட்டு வருகின்றன.

‘காசா போர் தொடரும், நாம் அதனை நிறுத்துவதற்கு தொலைதூரத்தில் இருக்கிறோம்’ என்று இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்சி ஹல்வி தெரிவித்துள்ளார். ‘இது பல்வேறு தீவிரத்துடனான ஒரு நீண்ட போர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் அழிவுகளுக்கு உள்ளாகி இருக்கும் கான் யூனிஸில் இருந்து துருப்புகள் வெளியேறியதை அடுத்து, இடம்பெயர்ந்த மக்கள் அங்கு வருகைதர ஆரம்பித்துள்ளனர். சற்று தெற்காக இருக்கும் ரபாவில் அடைக்கலம் பெற்ற இந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பும் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.

எனினும் அங்கு மரண வாடை வீசுவதாக கான் யூனிஸுக்குத் திரும்பிய நான்கு குழந்தைகளின் தாயான மாஹா தயிர் குறிப்பிட்டுள்ளார். ‘இனியும் எமக்கு ஒரு நகர் இல்லை… வெறும் இடிபாடுகளே எஞ்சியுள்ளன. எதுவுமே மிஞ்சவில்லை. வீதிகள் வழியாக நடக்கும்போது என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை’ என்று 38 வயதான அந்தத் தாய் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

‘அனைத்து வீதிகளும் தகர்க்கப்பட்டுள்ளன. மக்கள் இடிபாடுகளை தோண்டி உடல்களை எடுப்பதை நான் பார்த்தேன்’ என்று பகுதி அளவு அழிக்கப்பட்டுள்ள தமது வீட்டில் இருந்து தயிர் மேலும் கூறினார்.

படைகளை வாபஸ் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்த விரைவில் மக்கள் கான் யூனிஸ் நகரில் வெளிப்பட ஆரம்பித்தனர். அவர்கள் தமது இடிந்த வீடுகள் மற்றும் காணாமல் போனவர்கள் தேடி வருகின்றனர்.

ஒக்டோபர் 7 இல் போர் வெடிப்பதற்கு முன் கான் யூனிஸில் சுமார் 400,000 மக்கள் வசித்ததோடு இஸ்ரேலின் கடுமையான குண்டு மழைக்கு மத்தியில் அது தற்போது அழிவடைந்த பூமியாக மாறியுள்ளது. மக்கள் கழுதை வண்டிகள், பைசிகல்கள் மற்றும் டிரக்குகளில் கான் யூனிஸை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், போர் இன்னும் முடியவில்லை என்றும் பணயக்கைதிகள் வீடு திரும்பி ஹமாஸ் ஒழிந்த பின்னரே அது முடியும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் பீட்டர் லேர்னர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

‘படைகள் குறைக்கப்படுகின்றபோதும், மேலும் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. ரபா தெளிவான கோட்டையாக உள்ளது. நாம் ஹமாஸிடம் உள்ள திறன்களை நீக்க வேண்டி உள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சில் இழுபறி

காசா போருக்கு அரை ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் வெற்றிக்கு ஒரு படி தொலைவில் இருப்பதாக தெரித்துள்ளார்.

இந்தப் போருக்கு எதிராக இஸ்ரேல் சர்வதேச அளவில் அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதோடு குறிப்பாக இஸ்ரேலின் வான் தாக்குதலில் தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட மேற்கத்திய உலகிலும் கடும் கண்டனத்திற்கு காரணமாகியுள்ளது.

மறுபுறம் நெதன்யாகு அரசு இஸ்ரேலுக்குள்ளும் கடும் எதிர்ப்பை சந்திப்பதோடு அந்த அரசுக்கு எதிராக டெல் அவிவில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. ‘உடன்படிக்கை ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராக உள்ளது’ என்று தனது அமைச்சரவைக்கு கூறிய நெதன்யாகு, ‘பணயக்கைதிகள் திரும்பாத வரை போர் நிறுத்தம் இல்லை’ என்றார்.

எனினும் கெய்ரோவில் இடம்பெறும் புதிய சுற்று காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘ஆக்கிரமிப்பாளர்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதோடு, கெய்ரோ பேச்சுவார்த்தைகளில் புதிதாக எதுவும் இல்லை’ என்று அந்த ஹமாஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு கூறினார்.

முன்னதாக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக எகிப்து மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரசுக்கு தொடர்புடைய அல் கஹரா செய்தித் தொலைக்காட்சி குறிப்பிட்டிருந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. தலைவர் வில்லியம் பர்ன்ஸ் கடந்த சனிக்கிழமை கெய்ரோ சென்றடைந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தமது பிரதிநிதிகளையும் கெய்ரோவுக்கு அனுப்பியது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தமது பிரதான நிபந்தனைகளில் உள்ள முரண்பாட்டை தீர்க்க தவறியுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவந்து இஸ்ரேலிய துருப்புகள் காசாவில் இருந்து முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று ஹமாஸ் நிபந்தனை விதிக்கும் அதேநேரம், போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி எந்த உறுதியையும் வழங்காத இஸ்ரேல், தமது சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக உடன்பாடு ஒன்றை எட்ட முயற்சிக்கிறது.

மேற்குக் கரையில் பெண் பலி

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தெற்கு காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றபோதும் காசாவில் மோதல் தொடர்ந்து நீடிப்பதோடு 185 ஆவது நாளாக நேற்று இஸ்ரேலிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய காசா மற்றும் ஷுஜையா முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

இதில் ரபா நகர் மற்றும் அதனை சூழுவுள்ள பகுதியில் வீடுகள், விவசாய நிலங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருந்ததாக அங்கிருக்கும் வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 33 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா போரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் நீடிப்பதோடு அங்குள்ள இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகில் நேற்று பலஸ்தீன இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சோதனைச் சாவடியை தாண்டிச் செல்லும் பெண் மீது இஸ்ரேலிய படை சூடு நடத்தியதாக பார்த்தவர்கள் கூறியபோதும் அந்தப் பெண் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட முயன்றதாக இஸ்ரேல் கூறுகிறது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் இதுவரை குறைந்தது 427 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான மரணங்கள் இஸ்ரேலிய துருப்புகளுடனான மோதலின்போது இடம்பெற்றதாகும்.

மறுபுறம் இந்தப் போர் பிராந்தியத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் தெற்கு லெபனானில் நேற்றுக் காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதல்கள் தீவிரம் அடைந்து வருவதாகவும் வன்முறைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

காசாவில் போர் நீடிப்பதற்கு இணையாக இஸ்ரேலிய இராணுவம் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியத் தலைநகர் டமஸ்கஸில் உள்ள ஈரான் தூதர வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு ஈரான் புரட்சிக் காவல் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, ‘இஸ்ரேலிய தூதரகங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களாக இருக்காது’ என்று ஈரான் உயர்மட்ட தலைவரின் ஆலோசகர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் ஆதரவு பெற்ற யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களும் செங்கடலைச் சூழ பயணித்த மேலும் மூன்று கப்பல்களை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 
இலங்கை மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

April 14, 2024 11:43 am 

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது X கணக்கில் ஒரு குறிப்பொன்றையிட்டு அவர் இந்த, வாழ்த்தினை வௌியிட்டுள்ளார்.

இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் தானும் தன் மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் தனது குறிப்பில் கூறியுள்ளார்.

நன்றி தினகரன் 


பழிக்கு பழி.. வடக்கு இஸ்ரேலில் பாய்ந்த 40 ஏவுகணைகள்! தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரானின் ஹிஸ்புல்லா

சமீபத்தில் சிரியாவின் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. இது மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.


பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் படைகள் மீது அவ்வப்போது சில தாக்குதல்களை தொடுத்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருந்த ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான் வாழி தாக்குதலை நடத்தியது. இதில் 2 ராணுவ ஜெனரல்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால், இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் ஈரான் இருக்கிறது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மீது தாக்குதல் நடத்தலாம், உஷாராக இருங்கள் என அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்துள்ளது. மட்டுமல்லாது ஈரானின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்க ‘ஐயன் டோம்’ அமைப்பை கூடுதலாக வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா எச்சரித்ததை போல, இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கியுள்ளது.


நேற்று சுமார் 40 ஏவுகணை வடக்கு இஸ்ரேல் பகுதியில் இந்த அமைப்பு வீசியிருக்கிறது. ஆனால், இஸ்ரேலிடம் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் ‘ஐயன் டோம்’ அமைப்பு இருப்பதால், இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பெரியதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஏவுகணைகள் மட்டுமல்லாது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களை கொண்டும் ஹிஸ்புல்லாத தாக்குதல் நடத்த முயன்றிருக்கிறது. இதையும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் மத்திய கிழக்கின் போர் சூழலை மேலும் தீவிரமாக்கியிருக்கிறது.

முன்னதாக “சிரியாவில் இனி எந்த தாக்குதலும் நடக்காது, அதற்கு நாங்கள் கேரண்டி. ஆனால், இஸ்ரேல் மீதான ஸ்பெஷல் மிலிட்டரி ஆப்ரேஷனை மட்டும் கைவிடுங்கள்” என்று ஈரானிடம் அமெரிக்கா கேட்டிருந்தது. இந்த விஷயம் இஸ்ரேல் காதுக்கு செல்லவே, அதன் பிரதமர் நெதன்யாகு, “சிரியா மீதான தாக்குதல் தொடரும்” என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அந்த பக்கம் ஈரான், “பாலஸ்தீன மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறினால்தான் எங்கள் தாக்குதல் நிற்கும்” என்று கூறியுள்ளது. அதாவது உலகின் சர்வாதிகாரியா தன்னை காட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவின் அறிவுறுத்தல்களை சிறிய நாடுகளான இரண்டும் கேட்க மறுப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி ஈழநாடு No comments: