எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 97 ஐந்து வாரங்களின் பின்னர் மீண்டும் தொடரும் பயணம் ! நிரந்தரமாக விடைபெற்றுச்செல்லும் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் !! முருகபூபதி


அன்பார்ந்த வாசகர்களுக்கு  எமது இனிய ரம்ஸான், மற்றும்  சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, மீண்டும் எனது எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் )  அங்கம் 97 இல் உங்களை சந்திக்கின்றேன்.

கடந்த நான்கு வார காலமாக  என்னால், இந்தத் தொடரை எழுதமுடியாத நிலைக்கு ஆளாகியிருந்தேன். அதனால்,  எனக்குத்தான் நட்டமே தவிர, இந்தத் தொடரைப் படித்துவரும் வாசகர்களுக்கு எந்தவொரு நட்டமும் இல்லை.

சில இலக்கிய நண்பர்கள், தொடர்புகொண்டு,  “ என்ன…?  உங்கள்


தொடரைக் காணவில்லை. நிறைவுபெற்றுவிட்டதா..?  “ எனக்கேட்டனர்.

 “ பழைய வாகனம் அடிக்கடி திருத்த வேலைகளுக்காக செல்வது வழக்கம்தானே..? நானும் ஓடி ஓடி உழைத்துத்  தேய்ந்து பழைய வாகனம் ஆகிவிட்டேன். அதன் பிரதான இயந்திரத்தில் ( இதயத்தில் ) சில பிரச்சினைகள் வந்துவிட்டன. அவற்றை நீக்கி சீராக்குவதற்காக மருத்துவமனையிலிருந்தேன். வீடு திரும்பியதும் ஓய்வு தேவைப்பட்டது.  அத்துடன் அடுத்தடுத்து எமது குடும்பத்திலும் ( இலங்கை – தமிழ் நாடு ) சில இழப்புகள்,  நான் முன்னர் பணியாற்றிய வீரகேசரியில் உடன் பயணித்த இரண்டுபேர் இறந்துவிட்டனர்.   இந்தத் துயரங்கள் தொடர்பாக படுக்கையிலிருந்தவாறே உறவினர்களுடனும் நண்பர்களுடனும்  உரையாடவேண்டியிருந்தது. இதுவே இந்தத் தொடர் பத்தி தாமதமாவதற்கு பிரதான காரணம்  “ என்றேன்.

எனினும்,  இக்காலப்பகுதியில் வீட்டிலிருந்தவாறே சில மெய்நிகர் நிகழ்ச்சிகளிலும்,  மின்ஊடக  ( YouTube )  நேர்காணல்களிலும்  கலந்துகொண்டேன்.

இந்த அங்கத்தில் அண்மையில் மறைந்த அவர்களைப்பற்றியும் எழுதவேண்டியிருக்கிறது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைக்கும் இரண்டு பாகங்களில் வெளிவந்துவிட்டது. இந்தத் திரைப்படம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.  எனினும்,  இற்றை வரையில் நான் பொன்னியின் செல்வனை படித்ததில்லை. இனியும் படிப்பேனா..? என்பதும் ஐயப்பாடே! ?

 “ பொன்னியின் செல்வன் படிக்காத நீங்கள் எல்லாம் என்ன எழுத்தாளர்..?  “ என்று எனது மனைவி இன்றும் என்னிடம் சொல்லிக்கொண்டுதானிருக்கிறார்.  அவரது குடும்பத்தில் பொன்னியின் செல்வனில் வரும் முக்கிய சில பாத்திரங்களின் பெயர்களில் சிலர் இருக்கிறார்கள். 


எங்கள் குடும்பத்தில் பொன்னியின் செல்வனை தொடர்ந்து படித்தவர்களின் வரிசையில் எனது அம்மா, பெத்தாச்சி,  மச்சான் ( அக்காவின் கணவர் ) ஆகியோரும் அடக்கம்.

பெத்தாச்சி, 1974 இலும், அம்மா 2003 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார்கள்.  எனது அக்காவின் கணவர் சண்முகம் அவர்கள், தனது 85 ஆவது வயதில்  கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி நீர்கொழும்பில் மறைந்துவிட்டார்.

இவரை கடந்த 2023 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலும் சந்தித்து பேசியிருக்கின்றேன்.  இவர் அப்போதும் பொன்னியின் செல்வனைத்தான் படித்துக்கொண்டிருந்தார்.  அதற்கு முன்னரும் பல தடவைகள் அவர் மீண்டும் மீண்டும் படித்தவர்.  கல்கி இதழில் முன்னர் தொடராக வௌியான காலத்திலும் வாராந்தம் இலங்கை வரும் கல்கி இதழ்களை வாங்கி வைத்து அதிலும் படித்தார். பின்னர்


அவற்றைத் தொகுத்து, ஒரு அச்சுக்கூடத்தில் கொடுத்து பைண்ட் செய்தும் படித்தார். அவர் கல்கியின் எழுத்துக்களை மாத்திரமின்றி, அகிலன் ஜெகசிற்பியன் , சாண்டில்யன்,  நா. பார்த்தசாரதி,  கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் எழுதிய சரித்திரத் தொடர் கதைகளையும் படித்தார். 

எனது மனைவி மாலதி அவுஸ்திரேலியாவுக்கு வரும்போது, தன்னிடமிருந்த பொன்னியின் செல்வன் அனைத்து பாகங்களையும் அவரிடம்தான் கொடுத்துவிட்டு வந்திருந்தார்.  இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு நான் அவரை சந்தித்தவேளையிலும் அவர் பொன்னியின் செல்வனைத்தான் படித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் எழுத்தாளர் அல்ல. எழுத்தாளராக உருவாக வேண்டும் என்ற நோக்கமும் அவரிடமிருந்ததில்லை.


நானும் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கின்றேன். இதுவரையில் முப்பது புத்தகங்களும் வெளியிட்டு விட்டேன். ஆனால், அவர் அதில் எவற்றையும் படித்தவருமில்லை.

அக்காவுக்கும் அவருக்கும் 1966 ஆம் ஆண்டு நீர்கொழும்பில்  ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருமணம் நடந்தபோது, நான்தான் மாப்பிள்ளைத் தோழன்.  அவர் எனக்கு ஒரு மோதிரம் அணிவித்தார். அது பின்னாளில் ஒரு மாந்திரீக கயவனால் பறிபோனது. இதுபற்றி எனது நினைவுக்கோலங்கள் கதைத் தொகுப்பில்  இழப்பு என்ற ஒரு சிறுகதையும் எழுதியிருக்கின்றேன்.

சண்முகம் மச்சான் பலாங்கொடையில் அல்ஃபா தேயிலைத்தோட்டத்தில்  மேற்பார்வையாளராக ( Field Officer ) முன்னர் பணியாற்றியவர்.  தோட்டங்கள் சுவீகரிக்கப்பட்டபின்னர், சிறிது காலம் வவுனியாவில் குடும்பத்துடன் இருந்த அவர், பின்னர் நீர்கொழும்பிலேயே நிரந்தரமானார்.

அவர் எங்கு சென்றாலும் பொன்னியின் செல்வனும் அவருடன்


பயணிப்பான்.

அக்கா – மச்சான்  திருமணம் நடந்து  பத்து  ஆண்டுகளின் பின்னர், 1976 ஆம் ஆண்டு,  எனது முதலாவது கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் நூலுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.

அந்த விழா கம்பகா மாவட்டத்தில், அத்தனைகல்ல தொகுதியில்  பத்தலகெதர ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மண்டபத்தில் நடந்தது.  அன்றைய ஜனாதிபதி வில்லியம் கொப்பல்லாவ அந்த விருதை வழங்கினார்.

எழுத்தாளர்கள்  செங்கை ஆழியான், ஐயாத்துரை சாந்தன்,  ஆத்மஜோதி முத்தையா,  யாழ். மகாஜனா அதிபர் த. சண்முகசுந்தரம் ஆகியோருக்கும் அப்போது சாகித்திய விருதுகள் கிடைத்தன.

மச்சான் சண்முகம்தான் என்னை அந்த விழாவுக்கு அழைத்துச்சென்றார். அப்போது, அவரிடமிருந்த மோதிரம் ஒன்றை வாங்கி எனக்கு அணிவித்துத்தான், அக்கா வழியனுப்பிவைத்தார்.

விழா முடிந்து வீடு திரும்பியதும் அந்த மோதிரத்தை கழற்றி மச்சானிடமே கொடுத்துவிட்டேன்.

அதனையும் தொலைத்துவிடுவேனோ என்ற தயக்கம் எனக்கிருந்தது.


அக்காவும் சில வருடங்களுக்கு முன்னர் கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் மறைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து,  தற்போது மச்சானும் புறப்பட்டுவிட்டார். 

அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து வந்து தற்போது 37 வருடங்களாகிவிட்டன. இக்காலப்பகுதிக்குள் பலரை இழந்துவிட்டேன்.

எமது குடும்பத்தில் அம்மா, அக்கா, மச்சான் , தாய்மாமா உட்பட பலரது மரண நிகழ்வுகளுக்கும் செல்லவில்லை. அவர்கள் பற்றிய நினைவுகளை சுமந்துகொண்டு காலத்தை கழித்துக்கொண்டிருக்கின்றேன்.

மச்சான் தொடர்ந்து படித்த பொன்னியின்செல்வனை எழுதிய கல்கி


கிருஷ்ண மூர்த்தியை அவர் மேல் உலகத்தில் சந்தித்து பேசிக்கொணடிருப்பார் என்ற குருட்டு நம்பிக்கையுடன் மற்றும் ஒருவரைப்பற்றியும் இந்தத் தொடரில் சொல்லிவிடுகின்றேன்.

எனது உடன் பிறந்த தம்பி ஶ்ரீதரனின் மனைவி சோபிதா ராணியின் அன்புத்தாயார் திருமதி புஸ்பராணியும்  அண்மையில் தனத 99 வயதில் தமிழ் நாடு வேலூர் காட்பாடியில் மறைந்துவிட்டார். இவரையும் கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கே சந்தித்தேன்.


அதற்கு முன்னர் தமிழகம் செல்லும் சந்தர்ப்பங்களிலும் அவரைப் பார்த்துப்பேசியிருக்கின்றேன். எனது பயணியின் பார்வையில் தொடரிலும் அவர்பற்றிய குறிப்புகள் வருகின்றன.

அவர் தமது கிராமத்தில் மண்ணை நம்பி வாழ்ந்தவர்.  தீப்பெட்டிக்கும், மண்ணெண்ணை , தேங்காய் எண்ணைக்கும்தான்,  கடைத்தெருப்பக்கம் சென்று வந்தவர்.  அவருடைய குடும்பத்தின் உணவுத் தேவைக்கான அனைத்தையும் வீட்டுக்காணியிலேயே பயிரிட்டு பெற்றுக்கொண்டவர்.

எனது பயணங்களில்  நான் சந்தித்த மச்சானையும்,  வேலூர் காட்பாடி  மாமியையும்  தற்போது இழந்திருக்கின்றேன்.

வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில்,  ஓவியராகவிருந்த  ஜெயபாலன், மற்றும் வெளியூர் நிருபர்களின் செய்திகளை தினமும் அடிமட்டம் வைத்து அளந்து,  அதற்குரிய வேதனத்தை பதிவுசெய்து,  கணக்குப்பிரிவுக்கு வழங்கிக்கொண்டிருந்த சகோதரி நிர்மலா மேனன் ஆகியோரும் அடுத்தடுத்து அண்மையில் கொழும்பில் மறைந்துவிட்டார்கள்.

நிர்மலா, திருமணமே செய்துகொள்ளாமல், தனது சகோதரியின்


பிள்ளைகளை அன்போடும் அக்கறையோடும்  பராமரித்தவர். இவரது அன்புத்தந்தையாரின் மரண நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்றேன். அந்த நிகழ்வை முன்னின்று நடத்திய மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் அவர்களும் இன்றில்லை.  அந்த வரிசையில்  வீரகேசரி குடும்பத்தைச்சேர்ந்த பலரை கடந்த 37 வருட காலத்தில் இழந்துவிட்டேன்.

வீரகேசரி முன்னாள் முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன், விளம்பர – விநியோக முகாமையாளர் து. சிவப்பிரகாசம், விளம்பரப்பகுதி கந்தசாமி, சிவஞான ரஞ்சன்,  விநியோகப்பகுதி ஞானி மேனன், ஆசிரியர்கள் கே. வி. எஸ். வாஸ், க. சிவப்பிரகாசம்,  வாரவெளியீடு ஆசிரியர் பொன். ராஜகோபால், செய்தி ஆசிரியர்கள் டேவிட் ராஜு,  நடராஜா,  துணை ஆசிரியர்கள் யோகா பாலச்சந்திரன்,  கமலா தம்பி ராஜா, கண. சுபாஷ் சந்திரபோஸ், சேதுபதி,   கீதா அந்தோனிப்பிள்ளை,  வர்ணகுலசிங்கம், பாராளுமன்ற -  மற்றும் அலுவலக நிருபர்கள்  எஸ். தில்லைநாதன், எஸ். தியாகராஜா, அஸ்வர், சொலமன் ராஜ், வீ. ஆர். வரதராஜா,  குகதாசன், பால விவேகானந்தா,  கனக. அரசரட்ணம், ஆர்.


திவ்வியராஜன்,  சனூன், எஸ். என். பிள்ளை, ஓவியர்கள் மொராயஸ், சந்திரா ஆகியோரெல்லாம் மறைந்துவிட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து அண்மையில்  ஓவியர் ஜெயபாலனும் சகோதரி நிர்மலா மேனனும் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டனர்.

ஜெயபாலன் சிறந்த கேலிச்சித்திரக்காரர். இவர் முன்னர் வரைந்த கேலிச்சித்திரங்களின் தொகுப்பு நூலும் வெளிவந்துள்ளது. 

ஏராளமான நிருபர்களின் செய்திகளையும்,  மற்றும் நாம் எழுதிய ஆக்கங்களையும் அடிமட்டம் வைத்து அளந்து – அளந்து கணித்து  வேதனத்திற்கு பரிந்துரைத்த நிரமலாமேனனும் தற்போது துயரச்செய்தியில் இடம்பெற்றுவிட்டார்.

இவர்களின் மறைவின்போதெல்லாம், நான் தொலைபேசி ஊடாக


துயரத்தை பகிர்ந்துகொள்ளுபவர்கள் பின்வருமாறு:  நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம், சகோதரி அன்னலட்சுமி இராஜதுரை,  சிட்னியில் வதியும்  வசுந்தரா பகீரதன், கனகா. கணேஷ், மற்றும் மெல்பனில் வதியும் வீரகேசரி வாரவெளியீடு முன்னாள் ஆசிரியர் பொன். ராஜகோபாலின் புதல்வர் நாவலன்.

வீரகேசரி குடும்பத்தைச்சேர்ந்த இங்கு பெயர் குறிப்பிடப்பட்ட சிலர் இலங்கையிலும்  தமிழ்நாட்டிலும் கனடாவிலும், ஜெர்மனியிலும்  மறைந்தனர்.

இவர்களைப்பற்றிய நினைவுகளை எழுதியிருக்கின்றேன்.  அடிக்கடி இவர்களை நினைத்துக்கொள்கின்றேன்.

எனது எழுத்துலகப்பயணத்தில் தொடர்ந்து இணைந்து வந்த இவர்கள்  பற்றிய நினைவுகள் சாசுவதமானவை.  கூடவே கவிஞர் வைரமுத்துவின் வரிகளும் நினைவுக்கு வருகின்றன.

 ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க!

 சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க!

 நீரில் மிதந்திடும் கண்களும் காய்க!

 நிம்மதி, நிம்மதி இவ்விடம் சூழ்க!

 ஜனனமும் பூமியில் புதியது இல்லை,

 மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை,

 இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை,

 இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை!


 
( தொடரும் )

letchumananm@gmail.com

No comments: