படித்தோம் சொல்கின்றோம்: பேராசிரியர் எம். ஏ. நுஃமான் எழுதிய “ துப்பாக்கிக்கு மூளை இல்லை ! “ மரணத்துள் வாழ்வோரின் குரலை பிரதிபலிக்கும் கவிதைகள் ! ! முருகபூபதி

 .

“ துப்பாக்கி முனையில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது.  அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம்.
யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்.   “ எனச் சொன்னார் சீனாவின் பெருந்தலைவர் மா ஓ சேதுங்.

 

எங்கள் ஈழத்து இலக்கிய உலகில் புகழ்பெற்ற கவிஞரும், விமர்சகரும் இலக்கிய பேராசிரியருமான எம். ஏ. நுஃமான் அவர்கள்,  “ துப்பாக்கிக்கு மூளை இல்லை  என்று சொல்லியிருக்கிறார்.

 

இக்கூற்றிலிருக்கும் உண்மையை நாம் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம்.

 

ருஷ்யா – உக்ரேய்ன் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகிவிட்டன.

 

கடந்த  2023 ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல் –  காஸா யுத்தம்  முடிவில்லாமல் தொடருகின்றது.

 

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு நிவாரண உதவிகள் வந்தவேளையில்,  அவ்விடத்திலும் இஸ்ரேல் படைகள் தங்கள் கைவரிசையை காண்பித்து அப்பாவி மனிதர்களின் உயிர்களை பறித்திருந்த தருணத்தில், பேராசிரியர் நுஃமானின் துப்பாக்கிக்கு மூளை இல்லை என்ற 70 பக்கங்கள் கொண்டிருக்கும் இச்சிறிய நூல் வீரியம் மிக்கதாகவும் அறச்சீற்றம் கொண்டதாகவும்  அமைந்துள்ளது.

 

கடுகு சிறிதானாலும் காரம் பெரிதல்லவா..?

 

1977 – 2010 காலப்பகுதியில் நுஃமான் எழுதியிருக்கும் சமூக, அரசியல் முக்கியத்துவம் மிக்க சில கவிதைகளை உள்ளடக்கியிருக்கும் இந்நூலை  

தமிழ்நாடு கலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 

2010 இற்குப்பின்னரும் நுஃமான் பல கவிதைகளை எழுதியிருப்பவர்.

 

அவர் அண்மையில்,  இஸ்ரேல் பிரதமரின் கூற்றுக்கு எதிர்வினையாக எழுதியிருந்த ஒரு பலஸ்தீனக் குரல்  என்ற  கவிதையும் சமூக வலைத்தளங்களில் பிரசித்தம் பெற்றிருந்தது.

 

இலங்கையின் முன்னைய அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கும்  அவரது அரசுக்கும் எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டம் , காலிமுகத்திடலில் நடந்தவேளையிலும் நுஃமானின் புத்தரின் படுகொலை  ( 1981 ஆம் ஆண்டில் எழுதியது  ) என்ற பிரசித்திபெற்ற கவிதையும் மும்மொழியிலும் வாசிக்கப்பட்டது.



 

யாழ். பொது நூலக எரிப்பு நடந்தவேளையில் நுஃமான் எழுதிய குறிப்பிடத்தகுந்த அக்கவிதையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

 

1977 ஆம் ஆண்டுப்பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பன்மையுடன் பதவிக்கு வந்து,  நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகத்  திகழ்ந்த ஜே. ஆர். ஜெயவர்தனா, 1989 வரையில் அதிபராகவிருந்தார்.

 

அவரது பதவிக்காலத்தில்தான் 1977 – 1981 – 1983 இனக்கலவரங்கள் வந்தன. 1987 இல் வடமராட்சியில் நடந்த வான்வழித்தாக்குதலில்  பலரும் கொல்லப்பட்டதையடுத்தே, இந்தியா வடமராட்சியில் உணவுப்பொட்டலங்களை வான்மார்க்கமாக அத்துமீறி வழங்கி, தனது ராஜதந்திர நகர்வுகளை ஏற்படுத்தி, இலங்கை – இந்திய ஒப்பந்தமும் கைச்சாத்திட்டது.

 

இக்காலப்பகுதிக்கு முன்னரும், அதன் பின்னரும் இலங்கை துப்பாக்கி கலாசாரத்திற்கு பேர்பெற்றிருந்தது.

 

1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு கீழக்கரையில் நடந்த அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு கவியரங்கில் கலந்துகொண்ட நுஃமான், தனது கவிதையை வாசிக்கத் தொடங்கியபோது, தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்தியிருந்தார்:

 

“ வாளேந்திய சிங்கம் /  வாய் திறந்து பாயும் புலி /  நடுவே மனிதர்கள்/

உயிர்தப்ப ஓடும் ஒரு நாட்டின் புதல்வன் நான்.  

 

எனினும்,  அவர் ஓடவில்லை. தொடர்ந்தும் அறச்சீற்றத்துடன் தாயகத்திலிருந்து எழுதினார்.

 

சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு சிறந்த படைப்பாளியின் பிரதானமான கடமை. அதனை அவர் தனது கவிதைகளின் மூலம் மேற்கொண்டார்.

 

அதனால்தான் காலம் கடந்தும் நான்கு தசாப்தங்களுக்குப்பின்பும் தென்னிலங்கையில் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் காலிமுகத்திடலில், இந்து சமுத்திரத்தின் அலையோசைக்கு நடுவே நுஃமானின் கவிதை மும்மொழிகளிலும் ஒலித்தது.

 

முப்பது கவிதைகளுடன் வெளியாகியிருக்கும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ராணுவ வீரனின் குழந்தை  என்ற கவிதையை பாருங்கள்:

 

காரின் பின் கண்ணாடியில் / பள்ளிவிட்டுச் செல்லும்

 

சிறுமியின் முகம் /  என்னைப்பார்க்கிறாள்

 

நான் சிரிக்க /  நாணத்தால் முகம் திருப்பி

 

மீண்டும் பார்க்கிறாள் /   நான் கைகாட்ட /

 

அவளும் காட்டுகிறாள் /  நான் நக்கை நீட்ட /

 

அவளும் நீட்டுகிறாள் /

 

நான் சிரிக்க அவளும் சிரிக்கிறாள் /

 

அழகும் குறும்பும் கொழிக்கிறது /  அவள் முகத்தில்

 

யார் வீட்டுக்குழந்தை இது !

 

கார் சற்று முன் நகர /  பின்புற இலக்கத் தகட்டில்

 

தெரிகிறது ராணுவக்குறி /

 

அடி என் சிறுமி /  உன் அப்பன் ஒரு ராணுவ வீரனா?

 

மேஜரா, கேணலா ? /  எங்கே உன் அப்பன் ? /

 

போர்க்களத்திலா ? /

 

எத்தனை  பேரைக் கொன்றிருப்பான் இதுவரை /

 

எத்தனை குழந்தைகளை அநாதைகளாக்கி இருப்பான் /

 

அவன் வீசிய எறிகணையில்  / எத்தனை குழந்தைகளின்

 

உடல் சிதறியதோ ! /

 

அடி என் மகளே, /

 

துன்பத்தின் கொடுங்கரங்கள் /

 

உன்னையும் நிழல்போல் தொடர்கிறதா? /

 

உன் அப்பன் திரும்பி வருவானா? /

 

துப்பாக்கிச் சன்னங்களுக்குத் தப்பி, /

 

கண்ணி வெடியில் சிக்கி உடல் சிதையாது /

 

திரும்பி வருவானா உயிருடன் ? / 

 

அல்லது ஒரு தசைக்குவியலாக  /

 

பெட்டியில் அடைத்து /  வருவானா உன் வீட்டுக்கு /

 

இன்று மாலை, நாளை, அல்லது மறுநாள் ?

 

நெஞ்சு கனத்து வந்தது /

 

காரை ஓரமாக்கி நிறுத்தினேன் /

 

அவளது கார் போய் மறையும் வரை காத்திருந்தேன்.

 

இக்கவிதையில்  பரவசமும்  கோபமும்  மானுட நேசமும் தொனிக்கிறது. அத்துடன் அந்தக்குழந்தையின் புன்சிரிப்பு தொடரவேண்டும் என்ற ஏக்கமும் துளிர்க்கிறது.

 

இக்கவிதை உலகெங்கும்  நாட்டுக்கு நாடு நடந்துகொண்டிருக்கும் யுத்தங்களையும் உள்நாட்டுப்போர்களையும் அதனால்,  பாதிக்கப்படும் குழந்தைகளைப்பற்றியும் பேசுகிறது.

 

அதனால், இக்கவிதைக்கு சர்வதேச பரிமாணமும் கிட்டுகிறது.

 

வியட்நாம் யுத்தத்தின்போது  அமெரிக்க போர் விமானங்களின் நேபாம் குண்டு வீச்சினால்,  பலத்த எரிகாயங்களுக்குள்ளான குழந்தை கிம்புக், பின்னாளில் வளர்ந்து,  அமெரிக்காவுக்கு குமரியாக வருகை தந்தபோது, உரையாற்றிய நிகழ்வில் தோன்றிய  ஒரு  அமெரிக்க விமானப்படை  அதிகாரி அவள் முன்வந்து  “ தங்களை மன்னிக்கவேண்டும்  “ என்று சொன்ன செய்திதான் இக்கவிதையை படித்தபோது எனது நினைவுக்கு வந்தது.

 

யார் போர்க்குற்றவாளி ?  எனக்கேட்கும் மரித்தோரின் ஆன்மா கவிதையை பாருங்கள்:

 

சிங்கமும் புலியும் கடித்துக் குதறிய  /

மனிதத் தசையும் குருதியும் / எலும்புக்குவியலும்

சிதறிக்கிடக்கின்றன நிலமெங்கும் /

 

தப்பிச் சென்றோரின் உடல் ஊனமுற்றது /

 

இதயம் கிழிந்து போயிற்று / உணர்வு மரத்துவிட்டது

 

நீ கேட்கிறாய் யார் போர்க் குற்றவாளி ? என்று /

 

கடவுளே,   இந்த விலங்குகளிடமிருந்து எங்களை ஏன் உன்னால் காப்பாற்ற முடியவில்லை.

 

என்று புலம்புகிறது மரித்தோரின் ஆன்மா.

 

இக்கவிதை 2009 ஆம் ஆண்டு எழுதப்பட்டிருக்கிறது.

 

நுஃமானின் மற்றும் ஒரு கவிதை நந்திக்கடல் அருகே.

 

இதில் வரும் சில வரிகள் எம்மை பதினைந்து ஆண்டுகளை  பின்னோக்கிப் பார்க்க வைக்கிறது.

 

 “ தப்பி ஓடியவர்களைத் துரத்திச் சுடுகிறது துப்பாக்கி,

சரணடைய வருபவரைச் சுட்டுக்கொல்கிறது துப்பாக்கி 

 

 “ விமானத்திலிருந்து இறங்கி வந்தார் அசோகரின் புதல்வர்.

மண்டியிட்டு நிலத்தை முத்தமிட்டார்.

அது அவர் மீட்ட  நிலம். 

 

உடல் சிதைந்து உயிர் இழந்தோரின்

குருதியில் நனைந்த நிலம்

 

குருதியின் ஈரம் படியவே இல்லை அவரது விரல்களில் .

 

முட்கம்பி வேலிக்குள் முடங்கினோம் நாங்கள்

 

முகம் கவிழ்ந்து கூனிக் குறுகிப்புதைந்தோம் . 

 

பேராசிரியர் நுஃமான் தனது கவிதைகள் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட எதிர்வினைகளையும் கடந்து வந்திருப்பவர்.

 

இந்நூலின் முன்னுரையில்  தான் எவ்வாறு கடந்தார் என்பதையும் பின்வரும் கூற்றின் ஊடாக  வாக்குமூலமாகவே பதிவுசெய்கிறார்:

 

 “ அரச பயங்கரவாதத்துக்கு எதிராக நான் கவிதைகளை எழுதியபோது, நுஃமான் தமிழ்த் தேசியவாதத்தின் சார்பாளன் என்று முஸ்லிம் தேசியவாதிகள் சற்றுச் சந்தேகத்தோடும் தமிழ்த் தேசியவாதிகள், சற்று நட்போடும் நோக்கினார்கள். தமிழ் விடுதலை இயக்கங்களின் பயங்கரவாதத்துக்கு எதிராக நான் கவிதைகள் எழுதியபோது , நுஃமான் தமிழ்த்தேசியவாதத்திலிருந்து முஸ்லிம் தேசிய வாதத்துக்கு திரும்பிவிட்டார் என்று முஸ்லிம் தேசிய வாதிகள் சற்று நட்போடும் , நுஃமான் இஸ்லாமிய அடிப்படைவாதி ஆகிவிட்டார் என்று தமிழ்த் தேசியவாதிகள் சற்றுப் பகைமையோடும் என்னை நோக்கினார்கள்.

 

இவை அரசியல் பார்வைக்கோளாறு காரணமான தீர்ப்புகள்.  ஓர் இடதுசாரி என்ற வகையில் நான் எல்லா இனவாதங்களுக்கும் எதிரானவன். எல்லா வகையான அடக்கு முறைகளுக்கும் எதிரானவன்.

 

சமத்துவம், சமாதானம், சமூக நீதி , மனித உரிமைகள் என்பவற்றுக்காகக் குரல் கொடுப்பவன். இக்கவிதைகள் அதன் வெளிப்பாடுகள்தான் . இவற்றை அவ்வாறுதான் நோக்கவேண்டும் . 

 

இந்நூலை வெளியிட்டிருக்கும் காலச்சுவடு,  இந்நூலின் உள்ளடக்கம் பற்றி இவ்வாறு பதிவுசெய்துள்ளது.

 

   நுஃமானின் கவிதைகள் படிமங்கள், உருவகங்கள் ஆகியவற்றின் துணையின்றி வாசகருடன் நேரடியாக உரையாடுபவை. அழுத்தமான கூற்றுக்களைத் தன்னகத்தே கொண்டவை. நேரடித் தன்மையை கொண்டிருக்கும் இந்தக்கூற்றுக்கள் உள்ளார்ந்த கவித்துவத்தினால் வலிமை கூடிய சொற்களாக மாறுகின்றன. 

 

போரில் வெற்றிபெறுபவர் யாரும் இல்லை.  என்று சொல்லப்படுவதுண்டு. எல்லாப்போர்களுக்கும் எதிரான குரலைக்கொண்டிருக்கும் இந்தக்கவிதைகள் சமகால அரசியல் கவிதைகளில் தனித்த இடத்தை பெற்றுள்ளன. 

 

ஆம்,  சமகாலத்தில்  நடந்துகொண்டிருக்கும் பிரசித்திபெற்ற இரண்டு போர்களின் முடிவிலும் எவரும் வெற்றிபெறப்போவதில்லை. 

 

எஞ்சவிருப்பது,  உறவுகளை இந்தப்போர்களில் இழந்த மக்களின் அவலக்குரல்தான்.

துயரம் தோய்ந்த அந்தக்  குரலற்றவர்களின் குரலாக நுஃமான் போன்ற கவிஞர்களின் குரல் ஓயமாட்டாது.

 

சிறந்த கவிதைத் தொகுப்பினை வரவாக்கியிருக்கும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

----0----

 

letchumananm@gmail.com

 

 

 

 


No comments: