.
சென்ற இதழில் 'வெற்றிகரமாக 14வது ஆண்டில் வானவில்' என்று தலைப்பிட்டு தமிழில் வாசிப்புத்திறன் குறைந்து வருவது தொடர்பாக நாங்கள் எழுதிய குறிப்புகளை வாசித்த சிலர், இலங்கைத் தமிழர்களிடையேதான் வாசிப்புத்திறன் குறைந்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் புத்தகங்களின் எண்ணிக்கைகளையும், வருடாவருடம் (இவ்வருடம் ஜனவரி 5 முதல் 21ந் திகதி வரை நடந்தது) சென்னையில் நடக்கும் புத்தகக்கண்காட்சிக்கு வருகை தந்தவர்களையும் சுட்டிக்காட்டி, இலங்கைத் தமிழர்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வாசிப்பு மீதான அக்கறை என்பது சீராக உள்ளதாகவே அவர்கள் மேலும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்விக்கு வாசிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது. துறைசார்ந்த கல்விக்கு அப்பால், ஓய்வு நேரங்களில் வாசிப்பு என்பதை இயல்பாக்கியும் கொள்ளலாம். இவ்வாறான வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கிற்கானது என்பதற்கும் அப்பால், அறிவுத்தேடல் என்பதும் அதனுள் அடங்கியுள்ளது. அத்தோடு அரசியல், சமூகம், பொருளாதாரம், விஞ்ஞானம், மெய்யியல், கலை, இலக்கியம் என வாசிப்பதற்கு பலதரப்பட்ட விடயங்கள் உள்ளன. அதாவது அவரவருக்கு ஆர்வமான துறைகளில், அவரவர் மொழிகளில் படிப்பதற்கு உலகில் நிறைய விடயங்கள் உள்ளன.
ஆனால் பொழுதுபோக்கு என்பதை மாத்திரம் முன்னிறுத்தி கண்களுக்கும் எண்ணங்களுக்கும் விருந்தாக முழுக்க, முழுக்க வியாபார நோக்குடன் தயாரிக்கப்படும் படைப்புகளுக்கும் நிகழ்சிகளுக்கும் பின்னாலேயே பெருந்திரளான மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இதனைத்தான் நாங்கள் கடந்த பெப்ரவரி 9ந் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் கண்டோம். ஏழு இலட்சத்திற்கும் குறைவாக மக்கள் வாழும் ஒரு நிலப்பரப்பில், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொழுபோக்கு நிகழ்ச்சியொன்றினை பார்க்க விழைந்ததை வெறுமனே அவரவர் சுதந்திரமென்று கடந்து போய்விட முடியாது.
யாழ் குடாநாட்டை பூர்வீகமாக் கொண்டு, கனடா நாட்டில் வாழும் ஒருவர் NOTHERN UNI என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகம் (அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காதவர்களுக்காக உருவாக்கப்பட்டது) ஒன்றினை யாழ்ப்பாணத்தில் நிறுவியுள்ளார். இப்பல்கலைக்கழகத்தின் நிதியுதவிக்காக (மாணவர்களிடம் கிட்டத்தட்ட வருடம் 6 இலட்சம் அறவிடப்படுகின்றது. 4 வருடப்படிப்புக்கு 24 இலட்சம். அதாவது பணம் படைத்தவர்கள் மாத்திரமே இங்கு கற்கலாம்) என அறிவிக்கப்பட்டு, சென்னை சினிமாத்துறை சார்ந்த பாடகர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் அரங்க அறிவிப்பாளர்களை வரவழைத்து, யாழ் முற்றவெளி திறந்தவெளி அரங்கில் நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை இலவசமாகக் கண்டுகளிக்க விரும்புவர்களுக்கும் மேடையிலிருந்து மிகத்தூரத்தில் வேலிபோட்டு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே ரிக்கற் வாங்கிய பார்வையாளர்களுக்கே அரங்கில் இடம் போதாத நிலையிருந்தது. அவ்வாறான நிலைமையில் இலவசப் பார்வையாளர்கள் வேலியை தகர்த்துக் கொண்டு மேடைக்கருகில் வந்ததால் களேபரமான நிலை உருவாகியது. உயிர்ப்பலிகள் எதுவுமின்றி நிகழ்ச்;சி முடிவுற்ற போதிலும், இச்சம்பவமானது யாழ் சமூகத்தின் தற்போதைய மனோநிலை தொடர்பாக பலத்த வாதப்பிரதிவாதங்களை சமூக ஊடகங்களில் எழுப்பிச் சென்றுள்ளது.
சினிமா, பொழுபோக்கு அம்சத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் ஒரு சாதனம். சிறந்த கலையம்சம் கொண்ட சினிமா என்பது பொழுதுபோக்காளர்களிடையே பொதுவாக வரவேற்பை பெறுவதில்லை. இதனால் வியாபார நோக்கில் வெற்றியடைய வேண்டுமென்ற நோக்கத்தில், பெருந்திரளான மக்களை சென்றடைவதற்காக சினிமாத்துறை பல உத்திகளை கையாள வேண்டியுள்ளது. இதில் பெரிய பிழையொன்றும் கிடையாது. ஆகவே சினிமா என்பது வியாபாரம் - பொழுதுபோக்கு என்று அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே. ஆனால் உலகில், குறிப்பாக இந்தியாவில் அப்படியான நிலைமையில்லை.
சினிமாத்துறை சார்ந்தவர்களைப் பூஜிப்பதில் இந்தியாதான் உலகில் முன்னணி வகிக்கும் நாடு என்று கூறலாம். இதனைப் பாவித்து சினிமா நட்சத்திரங்கள் இந்தியாவில் அரசியலில் இலகுவாக நுழைந்து விடுகிறார்கள். இது ஒருபுறமிருக்க. இலங்கைத் தமிழர்களும் சென்னை சினிமாவின் பாதிப்பில் சினிமாவில் பிரபல்யமான நபர்களை மற்றும் பாடகர்களை தங்கள் 'ஹீரோ'க்களாகவே வழிபடும் போக்கு நீண்டகாலமாகவே உள்ளது. அதனால் அவர்களை இலங்கைக்கு வரவழைத்து மாலைகள் அணிவித்து ஊர்வலம் போனார்கள், கோவில் திருவிழாக்களில் மற்றும் பொது அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.
இப்போது இலங்கைத்தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த பின்னர், இது பெரிய வியாபாரமாக மாறியுள்ளது. பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சினிமா நடிகர்களை மற்றும் பாடகர்களை வரவழைத்து, ரிக்கற்றுகளுக்கு மக்களிடம் பெருந்தொகைப் பணத்தை அறவிட்டு, நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துபவர்களும் கலைஞர்களும் பெருந்தொகை பணம் சம்பாதிக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே சென்னை சினிமா நட்சத்திரங்கள் அடிக்கடி கொழும்புக்கும், சென்னை-யாழ் விமான சேவையைத் தொடர்ந்து, நேரடியாக யாழிற்கும் விஜயம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
பெப்ரவரி 9ந் திகதி நிகழ்ச்சிக்கு யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பிரபல்யமான நடிகையுடன் புகைப்படம் எடுப்பதற்கு கட்டணம் 30000 ரூபா (ஏறத்தாழ 100 அமெரிக்க டொலர்) என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் பின்னணியில் இரு விடயங்கள் புலப்படுகின்றது. ஒன்று, இவ்வளவு பணம் கொடுத்து நடிகையுடன் புகைப்படம் எடுக்கத் தயாராக அங்கு மக்கள் உள்ளார்கள். மற்றது, பணம் சம்பாதிப்பதற்கு யாழின் சராசரி பொருளாதார நிலைமை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
பணம் சம்பாதிப்பதற்கு அப்பால், இந்நிகழ்ச்சிகளை தமிழர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளாக விளம்பரப்படுத்தி, நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துபவர்கள், கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்களை தமிழ் தேசியப் பற்றாளர்களாகவும் காட்ட முனைகிறார்கள். இந்தப்பற்றே பித்தாக உருவெடுத்து வன்முறை வடிவம் எடுக்கின்றது. அதனால் இவ்வாறான நிகழ்வுகள் இறுதியில் கலாச்சாரச் சீரழிவிற்கே இட்டுச் செல்லும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.
வானவில் இதழின் நூற்றுஐம்பத்தெட்டினை முழுமையாக வாசிப்பதற்கு:
No comments:
Post a Comment