ஆயிரம் ருபாய் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 .

இன்றைய பண மதிப்பின்படி ஆயிரம் ருபாய் என்பது சாதாரண பணமாகத் தெரியலாம். ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் ரூபாய் என்பது பெறுமதியான பணமாகும். இதனைக் கொண்டு ஒரு கல்யாணத்தையே அன்று நடத்தி விடலாம். அப்படிப் பட்ட ஆயிரம் ரூபாய் தெருவில் ஆடிப் பாடித் திரியும் ஒரு சேரி வாழ் பெண்ணிடம் கிடைத்தால் என்ன நடக்கும், என்ன செய்யலாம் என்பதை சொல்ல முற்பட்டு உருவாக்கிய படம்தான் ஆயிரம் ருபாய்!

வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முனையும் சந்தானம் ஒரு குழந்தையை விபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியவனாகிறான். அதனால் அவனது தற்கொலை செய்யும் எண்ணம் அகலுகிறது. அதே சமயம் வள்ளி என்ற நாட்டியக்காரியின் அறிமுகம் ஏற்படுகிறது. ஆனாலும் அவள் ஒரு நாட்டியக்காரி என்பதால் அவளது அன்பையும் காதலையும் தவிர்த்து வெளியேறுகிறான். பொன்னி என்ற சேரிப் பெண்ணின் அறிமுகம் அடுத்து அவனுக்கு கிடைக்கிறது. அவளும் தெருவில் ஆடிப் பாடுபவள்தான். ஆனாலும் அவளின் காதல் அவனுக்கு இனிக்கிறது. அந்த சேரிப் பெண்ணுக்கு எதிர்பாராத விதத்தில் தெருவில் ஆயிரம் ருபாய் கிடைக்கிறது. அந்த பணம் அவள் வாழ்வில் ஏற்றத்தை தரும் என்று எதிர்பார்த்தால் , அவள் வாழ்வையே புரட்டிப் போட்டு விடுகிறது அந்த ரூபாய் நோட்டு. அத்துடன் படத்தின் கதைக்கும் வைக்கிறது வேட்டு !

படத்தில் எல்லோரையும் கவருபவர் சாவித்திரிதான் . ஆனாக்க அந்த மடம் ஆலாட்டி சந்தை மடம் பாடலுடன் அவர் அறிமுகமாவதே ஜோர்தான். நடிப்பில் என்ன ஒரு அலட்சியம், தெனாவெட்டு, குத்தல் பேச்சு என்று பாத்திரத்துக்கு மெருகூட்டி விட்டார் அவர். அடக்கமாக , குடும்பப் பெண்ணாக மட்டும் தான் அவரால் நடிக்க முடியும் என்ற என்ற எண்ணத்தை இந்தப் படத்தின் மூலம் மாற்றி விட்டார் சாவித்திரி. இன்னும் சொல்லப் போனால் படத்தையே தாங்கி நிற்பவர் அவர்தான்.




கதாநாயகன் ஜெமினி கதாப்பாத்திரம் ஏனோதானோ என்று அமைக்கப்பட்டது. ராகினியின் நடிப்பு நிறைவாக இருந்தது. படத்தில் சில காட்சிகளில் மட்டும் வரும் நாகேஷ் ஏன் படத்தில் வருகிறார் என்பது படம் முடியும் தறுவாயில் தான் தெரிகிறது. எம் ஆர் ராதா இருக்கிறார் , கருப்புப்பணத்தை நியாயப் படுத்தி விளக்கம் கூறுகிறார். அசோகன் , கொட்டப்புள்ளி ஜெயராமன் இருவரும் இருந்தும் இல்லாத மாதிரித்தான். இவர்களுடன், எஸ் வி சகஸ்ரநாமம், ஏ வீரப்பன், ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்தை தயாரித்தவர் சின்ன அண்ணாமலை. தமிழ்ப்பண்ணை என்ற பிரபல நூல் நிலையத்தை உருவாக்கி பல எழுத்தாளர்களை உருவாக்கியவர், சிவாஜி நடிகர் சங்கத் தலைவர் , காமராஜரின் தொண்டர் இப்படி அறிய பட்ட சின்ன அண்ணாமலை இப்படி ஒரு படத்தை எப்படி எடுத்தார் என்று ஆச்சரியப் படக் கூடாது. ஏன் என்றால் இதே போன்ற ஒரு தவறை அவர் 15 ஆண்டுகள் கழித்தும் செய்தார்!


பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னை போல பார்க்கல பாடல் பி பி ஸ்ரீனிவாஸ், சுசிலா குரலில் இனிமையாக ஒலித்தது.கே வி மகாதேவன் படத்துக்கு இசையமைத்தார். எம் கர்ணன் ஒளிப்பதிவை கையாண்டிருந்தார். படத் தொகுப்பு ஆர் தேவராஜன்.

சாரதா, கற்பகம், போன்ற படங்களை இயக்கிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் தானா இப்படி ஒரு படத்தை எடுத்தார் என்பது அதிசயம்தான். ஆயிரம் ரூபாயை கண்டெடுத்த பெண் அதன் மூலம் வாழ்வில் வளம் பெறுவாள் என்று காட்டாமல் , அவள் வாழ்க்கை வீணாகிப் போவதாக காட்டி ஏழைகள் ஏழைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று சாதிக்க பார்த்த இயக்குனரின் எண்ணத்தில் விழுந்தது மண்!
படத்தில் சாவித்திரியின் நடிப்பு ஒன்றுதான் ஆயிரம் ரூபாய்க்கு மேலான பெறுமதி!

No comments: