மலையக படைப்பிலக்கியத்தின் ஊடாக அறப்போர் நிகழ்த்திய மல்லிகை சி. குமார் - முருகபூபதி

 .

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மாநாடு  1973 ஆம் ஆண்டு அட்டன் ஹைலண்ட்ஸ்  கல்லூரியில் நடந்தது.

அக்காலப்பகுதியில்  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் கம்யூனிஸ்டுகளும், சமசமாஜிகளும் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்திருந்தனர்.

இந்த அரசில் நியமன எம்.பி.க்களாக தெரிவாகியவர்கள்தான் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அசீஸும், செல்லையா குமாரசூரியரும்.

செல்லையா குமாரசூரியர் தபால் அமைச்சரானார்.  இவர்கள் இருவரையும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் குறிப்பிட்ட மாநாட்டின் இரவு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் பாலதண்டாயுதமும் வருகை தந்திருந்தார்.

கோகிலம் சுப்பையா எழுதிய தூரத்துப்பச்சை நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியாகியிருந்தது. அதன் வெளியீட்டு அரங்கும் இந்த மாநாட்டில் இடம்பெற்றது.

வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக அக்காலப்பகுதியில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

அந்த மாநாட்டுக்கு கொழும்பிலிருந்து வீரகேசரி குடும்பத்தினருடன் நானும் சென்றிருந்தேன்.

மேடையில் அசீஸும், குமாரசூரியரும்  காரசாரமாக விவாதித்து மோதிக்கொண்டனர்.

 “ தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை அரசுடன்தான் பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும், இடைத்தரகர்களான தொழிற்சங்கங்களை நாடத் தேவையில்லை    என்ற தொனியில் குமாரசூரியர் பேசிவிட்டார்.

நீண்ட கால தொழிற்சங்க அனுபவம் மிக்க அசீஸ் வெகுண்டெழுந்தார். தமது தொழிற்சங்கம் நடத்திய போராட்டங்களை, தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்த சலுகைகளையும்  அவர் பட்டியலிட்டார்.


 “ எழுத்தாளர்களின் இலக்கிய மேடையை இவர்கள் இருவரும் அரசியல் மேடையாக்கிவிட்டார்களே..?  “ என்று என் அருகிலிருந்த மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவர்  மூத்த எழுத்தாளர் என். எஸ். எம். ராமையாவிடம் கேட்டேன்.

அவருக்குப் பக்கத்திலிருந்த ஒருவர்,   இலக்கிய கூட்டங்களுக்கு இவங்களை அழைத்தாலே இப்படித்தான் ஆகும்  “ என்றார்.

           அப்போதுதான் அவரது முகத்தை பார்க்கின்றேன்.                             “ நீங்கள்… ?  “ என்று நான் கேட்டவுடன், ராமையா,  “ முருகபூபதி, இவர்தான் எங்கள் மல்லிகை சி. குமார்  “ என்றார்.

நண்பர் ராமையாவை எனது ஆசனத்திற்கு மாற்றிவிட்டு, நான் அவரது ஆசனத்தில் அமர்ந்துகொண்டேன்.  அருகருகே இருந்து பேசினோம்.

ஏற்கனவே மல்லிகை சி. குமாரின் எழுத்துக்களை வீரகேசரியில் படித்திருந்தாலும், அன்றுதான் முதல் முதலில் அவரை அந்த மாநாட்டில் பார்த்தேன்.

வேட்டி,  சேர்ட் அணிந்து மிகவும் எளிமையான தோற்றத்துடனிருந்தார்.

மலையக மக்களின் ஆத்மாவையும் , இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு ஒரு காலத்தில் 60 சதவிதமான அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த அந்தத்  தொழிலாளர் வர்க்கம் சிந்திய வேர்வையையும் இரத்தத்தையும் தனது படைப்புகளில்  சித்திரித்த இலக்கியவாதி மல்லிகை சி. குமார், தற்போது உயிரோடு இருந்திருப்பின், கடந்த ஜனவரி மாதம் 04 ஆம் திகதி தனது 79 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியிருப்பார்.

தான் பிறந்த  ஜனவரி மாதமன்றே நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2020 இல் 27 ஆம் திகதியன்று மறைந்துவிட்டார். 

ஒரே மாதத்தில் பிறந்த தினத்தையும் மறைந்த தினத்தையும் எம்மிடத்தில் பதிவுசெய்துவிட்டுச்சென்றிருக்கும் மல்லிகை சி. குமாரின் முதல் வாசகி அவரது அன்புத்துணைவியார் சரோஜா.  இவர் தனது கணவரின்  படைப்புகளின் மூலப்பிரதியிலிருந்த எழுத்துப்பிழைகளை திருத்தினார்.  நான் வீரகேசரியில் ஒப்புநோக்காளராகிய பின்னர், அதன் அச்சுப்பிழைகளை திருத்தினேன்.

பின்னாளில், மல்லிகை சி. குமாரின் புதல்வி சுகுணா , அதே வீரகேசரி ஆசிரிய பீடத்திலும் பணியாற்றினார்.

மல்லிகை சி. குமார், தலவாக்கலையில் பெரிய மல்லிகைப்பூ தோட்டத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர்.

அந்தத் தோட்டத்தில் கங்காணியாக பணியாற்றிய அவரது தந்தையார் சின்னையா வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர். அத்துடன் தன்னைச்சுற்றியிருப்பவர்களுக்கும் நூல்களை பகிர்ந்து வாசிக்கத் தூண்டியவர். தந்தையிடமிருந்து வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்ட மல்லிகை சி. குமார்,  சிறந்த ஓவியருமாவார். கவிதை, சிறுகதைகளை எழுதி படைப்பிலக்கியவாதியாகவும் திகழ்ந்தார்.

இவரது  ஆரம்ப காலப் படைப்புகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மல்லிகையிலும் வீரகேசரி வார வெளியீட்டிலும் படித்திருக்கின்றேன்.

மலையகத்தின் மூத்த எழுத்தாளர்கள் பலர் சிறுகதை, நாவல் இலக்கியத்  துறைகளில்தான் பிரகாசித்தனர்.  ஆனால், மல்லிகை சி குமார் சிறுகதைகளிலும்  கவிதைத்துறையிலும் மட்டுமன்றி ஓவியத்துறையிலும் தொடர்ந்தும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்தவர்.

தன்முனைப்பு ஏதுமின்றி, அமைதியாக எழுத்தூழியத்தில் ஈடுபட்டவர். அவரது ஆழ்ந்த அமைதியை அவரது எழுத்தில் காணமுடியாது. அறச்சீற்றம் மிக்க அவரது எழுத்தில் அங்கதமும் இழையோடியிருக்கும்.

ஒரு அரசியல் தலைவரின் படம், தோட்டத்து கழிவறையின் கதவில் ஒட்டப்பட்டிருக்கும்.  யார் அதனைச்செய்தது ? என்ற பரபரப்பு எழுகிறது. அந்தக்கழிவறையின் கதவிலிருந்த துவாரத்தை மறைப்பதற்காகத்தான், அதனை ஒட்டியதாக  தோட்டத் தொழிலாளியின் மகள் சொல்வாள்.

மல்லிகை சி. குமாரின் கவிதைத் தொகுப்பின் பெயர் மாடும் வீடும்.

இந்நூல்  வெளிவந்த காலப்பகுதியில்  கால்நடைகளுக்கென ஒரு அமைச்சரும், வீடமைப்புக்கென ஒரு அமைச்சரும் இருந்தார்.  அதனால், அந்தத் தொகுதி மத்திய மாகாண அரசின் சாகித்திய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும், இறுதி நேரத்தில் வழங்கப்படவில்லை என்ற செய்தியும் கசிந்திருக்கிறது.

 அடர்ந்த காடாக இருந்த மலையகத்தை , கோப்பி, தேயிலை, கொக்கோ, இறப்பர் பயிரிட்டு பசுமையாக்கிய இந்திய தமிழ்க்குடிமக்கள், இறுதியில்  நாடற்றவர்களாக்கப்பட்டனர்.  அவர்கள் தலைமன்னாரிலிருந்து கால் நடையாக  மாத்தளை நோக்கி நடந்தனர்.   அவர்களின்  துயரக்கதைகள் பற்றி மலையகம் 200 பேசுபொருளாகியிருக்கும் சமகாலத்தில்  உரத்துப் பேசுகின்றோம்.

மல்லிகை சி குமாரின் கதைகளும் கவிதைகளும் அரைநூற்றாண்டுக்கு முன்பே பேசிவிட்டன.

தற்போதைய இளம் தலைமுறை எழுத்தாளர்களும்,  இலக்கிய வாசகர்களும் மல்லிகை சி. குமாரின் படைப்புகளை தேடி எடுத்துப்படிக்கவேண்டும்.

மல்லிகை சி குமார், மலையக மக்களின் அனைத்து துயரங்களையும் தரிசித்து கடந்து சென்றவர். தனது வாழ்வின் தரிசனங்களை  தனது படைப்பு மொழியில் எமக்கு விட்டுச்சென்றவர். 

 இச்சந்தர்ப்பத்தில்  மல்லிகை சி. குமார் 2020 இல் மறைந்தபோது இலக்கிய நண்பர் மேமன் கவி பதிவுசெய்த  கூற்றையும் இங்கே பதிவுசெய்கின்றேன்.

 “ கொடகே புத்தக நிறுவனம் நடத்தும் கையெழுத்துப் போட்டிக்கு (2019) அனுப்பப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் சிறந்த சிறுகதைப் பிரதியாக அவரது வேடத்தனம் தொகுப்பு தெரிவாகி  , அச்சடிக்கப்பட்டு முடிந்த நிலையில் பரிசளிப்பு விழாவில் அவருக்கான விருது வழங்கப்படவிருந்த காலகட்டதில்,  அவர் எம்மை விட்டுப்பிரிந்து விட்டார்.  
மலையக மக்கள் இலக்கியத்தின் வரலாற்றில் முன் முகமாக என்றும் அவர் வாழ்வார். 

---0---


No comments: