.
சிவாஜியின் நடிப்பில் ஆலயமணி வெற்றிப் படத்தை தயாரித்த வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பா மீண்டும் சிவாஜியின் நடிப்பில் தயாரித்த படம் ஆண்டவன் கட்டளை. அறுபது ஆண்டுகளுக்கு முன் தயாரான இந்தப் படத்தில் சிவாஜிக்கு கல்லூரி பேராசிரியர் வேடம். படத்துக்கு படம் ஒவ்வொரு வேடத்தில் நடித்து ரசிகர்களை பிராமிக்க வைத்துக் கொண்டிருந்த சிவாஜி இந்தப் படத்திலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஆனால் படத்தின் கதை ஏமாற்றிவிட்டது!
வீர பிரம்மச்சாரியான கிருஷ்ணன் மகான்களின் போதனைப்படி வாழ்பவர். கடமையே வெற்றிக்கு வழி என்ற கொள்கையை பின்பற்றுபவர். தன்னிடம் பயிலும் மாணவ மாணவிகளிடம் அன்பும், கண்டிப்பும் கொண்டவர். ஊரே வியந்து பார்க்கும் விதத்தில் வாழ்ந்து வரும் அவர் மீது அவரின் மாணவியான ராதா காதல் கணை தொடுக்கிறாள். பேராசிரியர் மனம் காதல் வயப்படுகிறது. இருவர் காதலும் பகிரங்கமாகவே ஊராரின் பழி சொல்லுக்கு ஆளாகிறார் கிருஷ்ணன். அதே சமயம் ராதாவின் தாயும், தாய் மாமனும் ராதாவை கண்டிக்கிறார்கள். இதற்கிடையில் ஆற்றங்கரையில் கிருஷ்ணனும், ராதாவும் சந்தித்து படகில் சவாரி செல்கிறார்கள். இடையில் படகு விபத்துக்கு உள்ளாக ராதா காணாமல் போய் விடுகிறாள். உயிர் தப்பும் கிருஷ்ணன் மீது ராதாவை கொலை செய்ததாக பழி சுமத்தப்படுகிறது. ஊருக்கே முன் உதாரணமாக , இலட்சியவாதியாக வாழ்ந்த பேராசிரியர் சிறையில் வாடுகிறார். மீண்டும் தன்னுடைய உன்னத நிலையை அவர் அடைந்தாரா என்பதே மீதிக் கதை.
இப்படி அமைந்த படக் கதைக்கு சிவாஜியின் நடிப்பு உயிர் கொடுக்கிறது. நடிப்பு மட்டுமன்றி அவரின் நடையே தனி ஸ்டைல் தான். பேராசிரியராக வரும் போது காட்டும் மிடுக்கு, காதல் வசப்படும் போது தவிக்கும் தவிப்பு, கொலைப்பழிக்கு ஆளாகி தத்தளிக்கும் போது காட்டும் முகபாவனை எல்லாமே சிவாஜியின் திறமைக்கு சான்று. அவருக்கு ஜோடியாக , ராதாவாக வரும் தேவிகா அழகாக வருகிறார். அருமையாக நடிக்கிறார்.
படத்தின் நகைச்சுவையை ஜே பி சந்திரபாபு தன் நடிப்பினால் தனி ஆவர்தனமாக செய்து படத்தை கலகப்பாக்குகிறார். மற்றுமொரு ஜோடியாக படத்தில் வருபவர்கள் ஏவி எம் ராஜன், புஷ்பலதா. இருவரிடமும் இளமையும் நடிப்பும் சேர்ந்து இருக்கிறது. தாயார் வேடத்தில் வரும் சுந்தரிபாய் குறை வைக்கவில்லை. அசோகன் வில்லன் , வழக்கமான நடிப்பு.அதே போல் பாலாஜியும் வருகிறார். இவர்களுடன் ஜாவர் சீதாராமன், சீதாலஷ்மி, வி நாகையா, கரிக்கோல் ராஜு, கே நடராஜன் ஆகியோரும் நடித்திருந்தனர். வீரப்பவும் ஒரு காட்சியில் வந்து விட்டு போகிறார்.
படத்துக்கு மேலும் வலு சேர்த்தது கண்ணதாசன், விஸ்வநாதன், ராமமூர்த்தி கூட்டணி. இவர்கள் இணைந்து உருவாக்கிய ஆறு மனமே ஆறு, பாடல் அருமையாக படமாக்கப்பட்டிருந்தது. அமைதியான நதியினிலே ஓடும் , கண்ணிரண்டும் மின்ன மின்ன , பாடல்கள் கருத்துடனும் இசை நயத்துடனும் ஒலித்தன. சந்திரபாபு பாடும் சிரிப்பு வருது சிரிப்பு வாருது பாடல் நைஸ். டீ எம் எஸ் , சுசிலா, ஸ்ரீனிவாஸ், ஈஸ்வரி ஆகியோரின் குரலில் படத்தின் பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.
படத்தை ஒளிப்பதிவு செய்தவர் தம்பு. பிசகில்லாமல் காட்சிகளை படமாக்கியிருந்தார். படத்தின் மூலக் கதையை கே பி கொட்டாரக்கர எழுத , திரைக்கதை வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுதினார். முத்தை பெற்றெடுத்தாலும் சிப்பி சிப்பித்தான், ஆனால் அந்த முத்துக்கு தான் தெரியும் சிப்பியினுடைய பெருமை . எறும்பு ஊர கல்லும் தேயும் ஒரு பெண் நினைத்தால் நடக்காதது உண்டா.உலக துன்பத்தின் ஆணி வேரே ஆசைதான் , ஆசை சூழ் உலகில் நீ வாழ்ந்தாலும் உன் மனம் புளியம் பழமும் அதன் ஓடும் போல் இருக்க வேண்டும் போன்ற ஜாவரின் வசனங்கள் கருத்தோடு அமைந்தன. ஆனால் வசனத்தில் தன் திறமையை காட்டிய ஜாவர் கதையில் கோட்டை விட்டு விட்டார். அத்துணை அறிவும், கல்வியும் கொண்ட பேராசிரியர் சிறை மீண்ட பின் கடமையே வெற்றிக்கு வழி என்ற தன்னுடைய கொள்கையை உதறி விட்டு , நொந்து போய் வாழ்விழந்து தவிப்பது அந்த கதாபாத்திரத்தை சிதைப்பது போலாயிற்று . இதனால் மீதி படம் மெதுவாக நகர்வதாக அமைந்தது.
படத்தை இயக்கியவர் கே சங்கர். ஆலயமணியில் காட்டிய தன் திறமையை முழுமையாக இதில் காட்ட தவறி விட்டார் அவர். என்றாலும் எதுவுமே ஆண்டவன் கட்டளைப்படிதான் நடக்கும் உறவுக்கு பிறகு தான் துறவு என்பதை வலியுறுத்தும் விதத்தில் படத்தை இயக்கி இருந்தார் அவர்.
No comments:
Post a Comment